ஆணை மன்னிக்கும் சமூகம் பெண்ணை மன்னிப்பதில்லை… தரமணி பற்றி லிஸி ஆண்டனி

Actress Lissy Antony talks her experience in Taramani movieஅண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தில் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமாரின் மன அழுத்தமுள்ள மனைவியாக வந்து கடைசியில் சுடப்பட்டு இறந்து போகும் பாத்திரத்தில் நடித்திருப்பவர் லிஸி ஆண்டனி.

படத்தில் அந்தப் பாத்திரம் பெரிய போலீஸ் அதிகாரியின் மனைவியாக இருந்தும் புறக்கணிப்பு தனிமை. அவமதிப்பு, கண்டுகொள்ளாமை, வெறுமை, சந்தேகப்பார்வை என்று பல வலிகளைத் தன்னுள் தாங்கி மன அழுத்தம் கொண்ட ஒன்றாக இருக்கும். அப்பாத்திரத்தின் அடையாளமின்மையின் குறியீடாக படத்தில் பெயரே இருக்காது.

ஆனால் படத்தின் திருப்பமாக அதன் முடிவு இருக்கும். அதில் நடித்திருப்பவர் தான் நடிகை லிஸி ஆண்டனி.

படத்தில் அப்படி மனப் புழுக்கம் கொண்டவராக நடித்துள்ள லிஸி நிஜத்தில் நேர் எதிர்.ஆங்கிலோ இந்தியன் பள்ளிப் படிப்பு, ஸ்டெல்லா மேரீஸில் பி.காம். சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.காம். என்று முடித்தவர்.

ஷாப்பிங் போவதுதான் பெண்கள் உலகம் என்று கருதப்படும் நிலையிலிருந்து ஷிப்பிங் துறை என்று ஈடுபட்டு உலக நாடுகள் பலவற்றை வலம் வந்தவர்.

அவருடன் பேசிய போது…

“எங்களுக்குப் பூர்வீகம் கேரளா, என்றாலும் நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னைதான். அதுவும் வட சென்னை வண்ணாரப்பேட்டை. எங்கள் குடும்பம் ஆச்சாரமான கிறிஸ்தவக் குடும்பம்.

சினிமா பார்க்க அனுமதி இல்லை.

அப்பா விமானப்படையில் இருந்தார். பிறகு நேவியில் ஷிப்பிங்கில் எலெக்ட்ரிகல் ஆபீஸர். எனக்கும் ஆகாயத்தில் பறக்கவும் கடலில் கப்பலில் பயணம் செய்யவும் ஆசை.

என் கனவு கப்பல் மாலுமி ஆக வேண் டும் என்பது தான். ஆனால் அம்மா விடவில்லை.

ஷிப்பிங்கில் ஈடுபடும் வரை நானும் சாதாரண சராசரி மனுஷியாகத்தான் இருந்தேன். இந்தியாவை விட்டு புறப்பட்டதும் நான் மொத்தமாக மாறினேன். எனக்குள் இருந்த இன்னொரு மனுஷியைக் கண்டேன்.

இந்தியா வந்த போது எனக்கு நட்பான இயக்குநர் ராம்சார் முதலில் ‘தங்க மீன்கள்’ படத்தில் நடிக்க அழைத்தார். நட்பின் பேரில் தான் அதில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்தேன்.

ஆனால் அது பெரிய அளவில் போய்ச் சேர்ந்தது.என்னை எல்லாரும் ஸ்டெல்லா மிஸ் என்று அழைக்க ஆரம்பித்தனர். ராம்சார் இப்போதும் அப்படித்தான் அழைப்பார்.

இப்படியான நட்பில் பிறகு சிறு சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருப்பேன். இப்போது தரமணியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.” என்று தன் முன் கதையைச் சொல்லி முடித்தார்.

‘தரமணி’ பட அனுபவம் பற்றிப் பேசும் போது, ” எனக்கு ராம்சார் மீது நம்பிக்கை உண்டு. அவரது படைப்புத் திறமை மீது பெருமிதம் உண்டு. அவர் மீண்டும் அழைத்தபோது கண்ணை மூடிக் கொண்டு சம்மதம் சொன்னேன்.

காரணம் அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் பேச வைத்து விடுவார். படத்தில் முக்கியமாக ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாக காட்டியுள்ளார். என் பாத்திரமும் அப்படித்தான்.

இதற்கு ஏழு நாட்கள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு சுமுகமாக இருந்தது. ராம்சார் இயல்பாக நடிக்க வைப்பார். ஏன் அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் தர மாட்டார். நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் கோபம் எதுவுமே இல்லையா என்பார்.

இப்படித்தான் எங்களிடம் நடிப்பை வாங்கினார்.

நான் கிளிசரின் போடாமல் தான் அழுதேன். அவர் எப்போதும் தன் படக் குழுவை ஒரு குடும்பமாக உணர வைப்பார். யாருக்கும் எந்த அசெளகரியமும் இருக்காது. இப்படி தரமணி மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இரண்டு பெரிய படங்களுடன் ‘தரமணி ‘வெளியாகி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி. பாராட்டுகள் குவிந்து வருவது பரவசம் தருகிறது. ” என்கிறார்.

‘தரமணி’ படம் பற்றி பல்வேறு கருத்துகள் அலையடிக்கின்றன. ஒரு பெண்ணாக லிஸி என்ன நினைக்கிறார்? என்ற போது,

” படத்தில் பெண்களின் பிரச்சினைகளை, குமுறல்களை, வலிகளை, ஏக்கங்களை தைரியமாகச் சொல்லியிருக்கிறார். பெண்களின் குரலாக அவர் பேசியிருக்கிறார். இது பலரும் சொல்லத் தயங்கும் பிரச்சினையாகும்.

ஒரு ஆண் தவறு செய்தால் மன்னித்து ஏற்றுக் கொள்கிற சமூகம், ஒரு பெண் தவறிழைத்தால் ஏற்றுக் கொள்வதில்லை. பாதிக்கப்படும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகள்தானே? யாரோ ஒருவரின் அக்கா தானே? என்று அழகம் பெருமாள் பாத்திரம் மூலம் பேசுவது மனதைத் தொட்டது.

பெண்களின் மனக்குரலை அவர் பேசியிருக்கிறார். அவர் குரலை ஒரு பெண்ணாக நான் வழிமொழிகிறேன்.” என்கிறார்.

லிஸி ஆண்டனி இப்போது நடிக்கும் படங்கள் ? ராமின் அடுத்த படமான ‘பேரன்பு ‘, ‘சூ மந்திரக்காளி’, மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘ பரியேறும் பெருமாள் ‘, ‘மூடர் கூடம்’ ஒளிப்பதிவாளர் டோனி இயக்கும் படம் மேலும் ஒரு புதிய படம் என ஐந்து புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் லிஸி இப்போ ரொம்ப பிஸி.

Actress Lissy Antony talks her experience in Taramani movie

Overall Rating : Not available

Related News

கற்றது தமிழ், தங்கமீன்கள் உள்ளிட்ட தரமான…
...Read More
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி…
...Read More

Latest Post