தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்.
கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது.
இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை ‘காந்தி டாக்ஸ்’ மூலம் நனவாக்கியது குறித்தும் பகிர்ந்துள்ளார்.
1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘புஷ்பக விமானா’ என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவுனப் படம்.
இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று பேசியிருக்கும் இயக்குநர் கிஷோர், “இந்தப் படம் உணர்ச்சி ரீதியாக என் இதயத்துக்கு நெருக்கமான படம். ஒரு நடிகரும் அந்த யோசனை மற்றும் அதே உணர்ச்சிகளோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்ளும்போது அது இயக்குநருக்குக் கிடைக்கும் வரம். எனக்கு விஜய் சேதுபதி அப்படி ஒரு நடிகர் தான்.
தனது நடிப்பின் மூலம் சவாலான ஒரு கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.
ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்.
இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த அதே நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.
அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது. அவரைப் பார்த்தவுடன் தான் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத ஒரு நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர். அவரோட பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கனவே சில முன்னணி பாலிவுட் படைப்புகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் அடுத்த படம், சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைக்கர்’, ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகு வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் ‘காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது.
Actor Vijay Sethupathi’s next is a Pan Indian film titled GANDHI TALKS