ஏதாச்சும் சொல்லுங்க..; என்ன சொல்ல போகிறாய் விமர்சனம் 2.75/5

ஏதாச்சும் சொல்லுங்க..; என்ன சொல்ல போகிறாய் விமர்சனம் 2.75/5

ஒன்லைன்…

டிவியில் குக் வித் கோமாளியில் கலக்கிய அஸ்வின் இதில் ஹீரோ. இவருடன் புகழும் நடித்துள்ளார். படம் முழுக்க முக்கோண காதல்…

கதைக்களம்…

ரேடியோவில் ஆர்ஜேவாக பணிபுரிகிறார் விக்ரம் (அஸ்வின்). இவர் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவந்திகாவை பெண் பார்க்க செல்கிறார். இவர் ஒரு காதல் கதைகளின் எழுத்தாளர்.

நாயகனுக்கு ஏற்கெனவே ஒரு லவ் ப்ரேக்அப் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அப்போதுதான் காதலியை புரிந்து மனைவியை இன்னும் நன்றாக காதலிப்பாராம் என விளக்கம் சொல்கிறார்.

எனவே பெண் பார்க்கும் சமயத்தில் நாயகனும் ஒரு பெண்ணை காதலித்தாக பொய் சொல்கிறார். (அந்த பொய் காதலி தேஜீ அஸ்வினி. )

ஹீரோ முன்னாள் காதலை உருகி சொல்ல சொல்ல… அந்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்கிறார் அவந்திகா. எனவே தன் நண்பன் புகழின் உதவியால் தேஜீவை நடிக்க சொல்கிறார்கள். முதலில் மறுக்கும் தேஜீ பின்னர் ஒத்துக் கொள்கிறார்.

நிச்சயத்தார்த்தமும் நடக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் பொய்யான காதலி மீது அஸ்வினுக்கு காதல் வருகிறது. ஆனால் அவளோ காதலிக்க மறுக்கிறார்.

ஒரு பக்கம் கட்டிக் கொள்ள போகும் பெண்.. மற்றொரு புறம் பொய்யான காதலி.. நடுவில் அஸ்வின். என்ன செய்தார்? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அஸ்வின் அறிமுகம் படம்.. செம ஸ்மார்ட்டாக இருக்கிறார். நன்றாக டான்ஸ் ஆடியுள்ளார். ஆனால் இன்னும் நடிப்பில் மெருகேற்ற வேண்டும். இவளா அவளா என தடுமாறும் காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பு இல்லை. அதுபோல் எமோஷனலும் போதவில்லை.

அவந்திகா அழகு என்றால் தேஜ் அஸ்வினி கூடுதல் அழகு. இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். தேஜ் மேடை நாடக காட்சிள் போர்.

பார் (PUB) நடத்தும் நபராக புகழ். காமெடி எடுபடவில்லை. அதுபோல் சுவாமிநாதன் காட்சிகளும் நீண்ட இழுவை.

மற்றபடி டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு காட்சிகள் ஓகே ரகம்.

டெக்னிஷியன்கள்..

படத்தில் பெரும் பாராட்டை பெறுபவர்கள் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர்.

விவேக் – மெர்வின். இவர்களின் பின்னணி இசை செம. அதுபோல் பாடலும் நம்மை ஈர்க்கிறது. ‘க்யூட் பொண்ணு’ பாடலும் ‘நீதானடி’ பாடலும் சூப்பர். உருட்டு பாடல் தாளம் போட்டு ஆட வைக்கும். க்ளைமாக்ஸ் மெலோடி பாடலும் அருமை.

ரிச்சர்ட் எம்.நாதனின் ரிச்சான ஒளிப்பதிவு நம் கண்ணுக்கு விருந்து. முக்கியமாக ஏடிஎம் சீன்.. இரவில் கடற்கரை காட்சிகள்.. நாடக மேடை என அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது. கலை இயக்குனரின் கைவண்ணமும் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

ஆனால் எடிட்டர்தான் நம்மை பொறுமையை சோதித்துவிட்டார். முதல் பாதி செம. ஆனால் இரண்டாம் பாதி இழுத்துக் கொண்டே போகிறது.

இயக்குனர் ஹரிஹரன் காதலர்களை கவர படம் எடுத்துள்ளார். அதற்கேற்ப நிறைய காட்சிகளை வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் வாலி படமும் குஷி படமும் நினைவுக்கு வரும். அதுபோல் புகழும் ஒரு டயலாக் சொல்கிறார்.

முதலில் லவ் ப்ரேக் அப் செய்தவர்தான் வேண்டும் என சொல்லும் அவந்திகா.. பின்னர் திருமணம் நடந்து 10 வருடத்திற்கு பின் மனம் மாறினால் என்ன செய்வது என குழுப்புவது எல்லாம் ரொம்ப ஓவர்.

அதுபோல் நாயகனின் மனம் அடிக்கடி மாறுவதாலும் புகழும் மாற்றி மாற்றி பேசுவதாலும் நமக்கே போரடிக்கிறது. அட ஏதாச்சும் சொல்லி முடிங்கப்பா என சொல்ல வைக்கிறது.

ஆக.. என்ன சொல்ல போகிறாய்.. நன்றாக சொல்லியிருந்தால் சிறப்பு.

Enna Solla Pogiraai movie review and rating in Tamil

Related Articles