தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ் தாணு.
கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அவரது நுரையீரலில் காயங்களை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். மேலும் தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு இருக்கிறார்.
தயாரிப்பாளர் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு, நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்த தொகையை பெற்றுக்கொண்டதோடு, அவரது உன்னத செயலுக்கு நன்றியும் தெரிவித்தனர்.
காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன் மேலும் பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.