தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.
இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது நடிகர் பாண்டியராஜன் பேசுகையில்…
‘ மச்சான் என்ற ஒரு வார்த்தையில் அற்புதமான ஒரு உறவொன்று இருக்கிறது. மனைவியின் தம்பி அல்லது அண்ணன். தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் முத்து குளிக்க கடலுக்குள் இறங்கும்போது இடுப்பிற்குள் கயிறு கட்டி கடலுக்குள் குதிக்கும் முன், அதன் மறுமுனையை மச்சான் எனும் உறவின் முறையில் இருப்பவரிடம் தான் நம்பிக்கையுடன் அளித்துவிட்டு குதிப்பர்.
கடலுக்குள் முத்துக்காக குதித்தவர் முத்து கிடைத்தாலும்… கிடைக்கவில்லை என்றாலும்… கயிறை இழுத்து விட, அதன் நுட்பம் அறிந்து கடலுக்குள்ளிருந்து மேலே வரவழைப்பவர் மச்சான்.
இதே தருணத்தில் அண்ணன் – தம்பி என்ற உறவாக இருந்தால், சொத்து விசயத்தில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடலுக்குள் குதித்தவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். ஆனால் மச்சான் என்ற உறவு தான், தன் தங்கையின் தாலி பாக்கியம் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் நுட்பமாக கவனித்து கடலுக்குள் குதித்தவரை காப்பாற்றுவர். அந்த வகையில் மச்சான் என்ற உறவு அழுத்தமானது. மேலும் தெய்வ மச்சான் என்பது அதைவிட சிறப்பானது.
ஒரு முறை நண்பர் ஒருவருக்கு திருமண பத்திரிகையை வைத்து அழைப்பு விடுத்தார் மற்றொரு நண்பர். அந்த நண்பர் பத்திரிக்கையில் உறவினர்களின் பெயரையும் வாசித்துக் கொண்டே வந்தார். இவரை மட்டும் ‘உயர்திரு’ என்று குறிப்பிட்டும், மற்றொருவரை ‘தெய்வத்திரு’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக அவர் வருத்தப்பட்டு புகார் தெரிவிக்க… அவரிடம் இந்த ‘தெய்வத்திரு’விற்கான விளக்கத்தை சொன்ன பிறகு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்த தெய்வ மச்சான் படமும் யதார்த்தமான ஜாலியான அனைத்து தரப்பு ரசிகர்களும் சிரித்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் நாயகனான விமல் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களிலும் எளிமையாக பழகக்கூடியவர். அவர் ஒரு முறை என்னிடம் 20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் காருக்குள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தது பார்த்தேன் என விவரித்தார்.
மற்றொரு முறை என்னுடைய பிறந்தநாளன்று திடீரென்று வருகை தந்து மாலை அணிவித்து, பரிவட்டம் சூட்டி, புகைப்படம் எடுத்து ஆசி கேட்டார். அந்த அளவுக்கு எளிமையான மனிதர் விமல்.
அவர் மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளரும் இயல்பாக பழகக் கூடியவர். ஒட்டுமொத்த படக் குழுவும் படப்பிடிப்பு தளத்தில் மறக்க இயலாத அனுபவத்தை வழங்கினார்கள். ” என்றார்.
Machan relationship is great says Actor Pandiyarajan