தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காலா பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் “நீலம் பண்பாட்டு மையம்”, “கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ரூட்ஸ்” ஆகிய அமைப்புகளின் சார்பில் தனியிசைக் கலைஞர்களுக்கான இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தனியிசைப் பாடகர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள்.
தமிழகம் முழுவதுமிருந்து பலதரப்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டனர் ஹிப்பாப், ராப், கானா, நாட்டுப்புறப் பாடல்கள் பாடப்பட்டன.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்
“கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவை முதலில் அறிமுகப்படுத்தி இசை நிகழ்ச்சியை நடத்திய பிறகு பல தனியிசைக்கலைஞர்களும் தொடர்ந்து தொடர்புகொண்டு பாடுவதற்க்கு வாய்ப்புகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
வாய்ப்புக்கேட்கிற எல்லோருக்கும் ஒரு மேடையை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்கிற நோக்கில் “ரூட்ஸ் (Roots)” என்கிற அமைப்பை ஏற்படுத்தி மேலும் அதிகமான திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே இந்த மேடை.
கலைகளின் மூலமாக சாதி, மதமற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க, நாம் இணைந்து செயல்படுத்த இந்த கலைகள் நமக்கு கைகொடுக்கும் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவோம்” என்றார்.
அடுத்ததாக பேசிய இசையமைப்பாளர் “ஹிப்பாப்” ஆதி…
“தனியிசைக்கலைஞனாக எனது ஆரம்பகாலத்தில் எதாவது ஒரு மேடை கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன்.
தனியிசைக்கலைஞனாக இருந்து இப்போது இசையமைப்பாளராக நடிகனாக வந்திருக்கிறேன். சுதந்திர இசை இங்கு வெற்றிபெறும் சூழல் அதிகம் இல்லை இன்னும் ஏராளமான கலைஞர்கள் சின்ன வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரஞ்சித் அண்ணன் மீன் பிடித்து கொடுக்காமல் தூண்டிலை கொடுத்திருக்கிறார். இந்த கலைஞர்களுக்கு இந்த மேடையை அமைத்துக்கொடுத்தற்க்கு அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மேடையில் பல திறமையாளர்களை நான் கண்டுகொண்டேன் அவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. வரும் காலங்களில் நானும் இதுபோன்ற சுதந்திர இசை மேடையை உருவாக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
Hiphop Aadhi and Ranjith speech at Casteless Collection event