முதல் துரோகியே மகேந்திரன் தான்.. அதான் அவரே விலகிட்டாரு.; கடுப்பான கமலின் முழு அறிக்கை

kamal mahendranகோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியுற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

கட்சி தோல்விக்கு பிறகு நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் விலகல் கடிதத்தை கமலிடம் கொடுத்துள்ளனர்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதேபோல் பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், மௌரியா, முருகானந்தம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் மகேந்திரன்… ”
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாகவே கமல்ஹாசன் கட்சி நடத்துவதில் ஜனநாயகம் இல்லை.

அவர் கட்சி நடத்தும் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே கட்சியில் இருந்து மட்டுமல்ல கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

கமல் தமிழகத்தைச் சீரமைக்கிறாரோ இல்லையே மக்கள் நீதி மய்யத்தைச் சீரமைக்க வேண்டும்.

அவர் விரும்பினால் ஒரு நண்பராக எப்பொழுதும் இருப்பேன்.”

இவ்வாறு மகேந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…. ” ‘சீரமைப்பும் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம்.

துரோகிகள் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான்.

முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.

நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

தன்னுடைய திறமை இன்மையையும், நேர்மை இன்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்.

ஒரு களையே தன்னைக் களை என்று புரிந்து கொண்டு தனக்குத் தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.

இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை.

நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை.

என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை.

உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தைப் பிடித்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை”

இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Mahendran a betrayer: Kamal hits back at MNM vice president

Overall Rating : Not available

Latest Post