நடிகர்கள்..
விமல், இனியா, முனீஸ்காந்த், பால சரவணன், ரேஷ்மா, நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி, ஆர்என்ஆர் மனோகர்
ஒளிப்பதிவு: தினேஷ்குமார் புருஷோத்தமன்
இசை: அனீஸ்
இயக்கம்: பிரசாந்த் பாண்டிராஜ். (புரூஸ்லி பட இயக்குனர்)
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பு
வெளியீடு: Zee5
Zee5 ஓடிடி தளத்தில் பிப்ரவரி 18ல் ரிலீசாகியிருக்கும் இந்த வெப் சீரிஸில் மொத்தமாக 7 எபிசோடுகள்.
ஒன்லைன்..
திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் நடக்கும் க்ரைம் த்ரில்லர் விசாரணை தான் இப்படம்.
கதைக்களம்…
திருச்சி மாவட்ட ஒரு கிராமத்தில் உள்ள காவல் எல்லைக்குள் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கிடைக்கிறது.
இந்த தகவலை போலீசுக்கு ஒரு நபர் சொல்ல சப் இன்ஸ்பெக்ட்ர் விமல் மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைகின்றனர்.
விசாரணை நடைபெறும் அதே சமயத்தில் போலீஸ் கவனிக்காத சயயத்தில் அந்த சடலத்தின் தலை காணாமல் போகிறது. முண்டம் மட்டுமே கிடக்கிறது.
இதனால் காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறுகிறது இந்த வழக்கு.
இது தொடர்பாக விசாரணைகளை தோண்ட தோண்ட பூதம் கிளம்பிய கதையாக பல அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது. சொல்லப்பட்ட ட்விஸ்ட்டுக்கள் அனைத்தும் வேற லெவல்.
இறுதியில் கொலைக்காரன் யார்? கொலைக்கான காரணம் என்ன? தலை கிடைத்ததா.? என்பதே மீதி எபிசோடுகள்.
கேரக்டர்கள்…
இதில் விமல் முதன்முறையாக போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். அதற்காக பறந்து பறந்து ஓங்கி அடிப்பது… கண்ணை காட்டி மிரட்டுவது என எந்தவிதமான கமர்ஷியல் போலீஸ் ஆக இல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் போலீசாக நடித்துள்ளார். இது விமலுக்கு நிஜமான ரீஎன்ட்ரி தான்.
விமலின் மனைவியாக வரும் இனியாவுக்கு இனிமையான இதமான கேரக்டர். மிகையில்லாத யதார்த்த நடிப்பு.
பால சரவணன் ‘அடி பின்னியிருக்கிறார்’. முற்றிலும் மாறுப்பட்ட கேரக்டரில் வந்துள்ளார். ஆனால் தேவையில்லாமல் கெட்ட கெட்ட வார்த்தைகளை பேசி பெண்களை முகம் சுளிக்க வைத்துவிட்டார்.
கிச்சா என்ற பாத்திரத்தில் வரும் ரவியின் நடிப்பு வேற லெவல். அவர் இயக்குனர் பிரசாந்தின் சொந்த மாமா என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு முதல்படம் என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். கிச்சாவுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு இவர் செய்யும் ஒவ்வொன்றும் நம்மை மிரட்டியுள்ளது.
பிற அதிகாரிகளாக வரும் ஆர்என்ஆர் மனோகர், சக்ரவர்த்தி ஆகியோரும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். (அண்மையில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மனோகர் மரணமடைந்துவிட்டார்)
டெக்னீசியன்கள்..
திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான ஒளிப்பதிவு, இசை, கலை என அனைத்துமே சிறப்பு. தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
80% காட்சிகள் போலீஸ் ஸ்டேஷனில் நடைபெறுகின்றன. அதற்காக போடப்பட்ட செட் மிகக் கச்சிதம். கலை இயக்குனர் தன் பணியில் கச்சிதம்.
பாடல்கள் இல்லாத படம். எனவே மொத்த கவனத்தையும் அஜீஸ் தன் பின்னணி இசையில் கொடுத்து மிரட்டியிருக்கிறார்.
எடிட்டர் கணேஷ் சிவா முதல் 2 எபிசோட்டில் சில காட்சிகளை வெட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
மைனஸ்..
வெப்சீரிஸ்களுக்கு சென்சால் இல்லை. ஆனால் அதற்காக இத்தனை கெட்ட வார்த்தைகளா? உச்சகட்ட எரிச்சல் இது. அதை மியூட் கூட செய்யல.
மொத்தமுள்ள 7 எபிசோடுகளில் இறுதியாக வரும் 3-4 எபிசோடுகளுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. முதல் இரண்டில் கட்டிங் போட்டு இருக்கலாம்.
தன் மனைவி கர்ப்பமாக இருப்பதால் விமல் தாடி வைத்திருக்கலாம். ஆனால் பாலசரவணன்..? விமல் எஸ்ஐ வருகிறார். ஆனால் பாலசரவணன் யார்? அவர் போலீஸ் என்றாலும் ஒரு காட்சியில் கூட யூனிபார்மில் இல்லையே அது ஏன்?
இயக்கம் பற்றிய அலசல்…
ஜிவி. பிரகாஷ் நடித்த புரூஸ்லீ என்ற படத்தை இயக்கிய பிரசாந்த் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். முற்றிலும் வித்தியாசமாக படமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
ஆண்களின் சபலத்தை தூண்டி லட்சக்கணக்கில் பணம் பறிப்பது.. அப்பாவி என நினைப்பவர்கள் செய்யும் அட்டூழியங்கள்… என பல விஷயங்களை இயக்குனர் அலசியிருக்கிறார். நாம் ஏளனமாக பார்க்கும் சாமானியனின் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும்? என்பதை காட்டி நம்மை எச்சரிக்கை செய்துள்ளார்.
ஆக.. இந்த விலங்கு… நிச்சயம் நம்மை சீட்டில் விலங்கு போட்டு கட்டி வைக்கும்.
Vimals Vilangu review rating