சிங்களரிடம் சிக்கிய சிங்கம்.; சினம் கொள் விமர்சனம்

சிங்களரிடம் சிக்கிய சிங்கம்.; சினம் கொள் விமர்சனம்

ஒன்லைன்…

இலங்கை போர் பற்றி இந்த உலகமே அறிந்திருக்கும். ஆனால் போருக்கு பின்னால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வை பற்றி நம்மில் பலர் அறிந்திருப்பதில்லை. இந்த வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் படம். போராளிகளின் வாழ்வையும் இந்த படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

கதைக்களம்…

சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகிறார் போராளி அரவிந்தன் சிவஞானம். அப்போது தன் மனைவி மகள் எங்கே என தெரியாமல் தேடி அலைகிறார். அவரது நிலங்களை இலங்கை ராணுவம் அபகரித்துக் கொண்டமையால் தன் குடும்பத்தை தேடி அலைகிறார்.

போராளி நண்பர்கள் ஆதரவுடன் குடும்பத்தை கண்டுபிடிக்கிறார் அரவிந்தன்.

இனியாவது தன் குடும்பத்துடன் புதிய வாழ்க்கை வாழ நினைக்கிறார். ஆனால் இவருக்கும் ஒரு வெளிநாட்டு வாழ் தொழிலதிபர் தனச்செயனுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஒரு போதை கும்பல் தொழிலதிபரின் மகளை கடத்துகிறது. ஒருவேளை தன் மகளை அரவிந்தன் தான் கடத்தியிருப்பார் என தொழிலதிபர் சந்தேகிக்க போலீஸ் இவரை தேடுகிறது.

இதனால் மீண்டும் தன் வாழ்க்கையை தொலைக்கும் சூழ்நிலை. இதிலிருந்து எப்படி மீண்டார்.? போலீஸ் என்ன செய்தது.? அரவிந்தன் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

போராளியாக வாழ்ந்திருக்கிறார் அரவிந்தன். மனைவியை தேடி அலைவதாகட்டும் பின்னர் தன்னை சுற்றி நடக்கும் சதியில் இருந்து மீள்வதாகட்டும் அனைத்திலும் பாராட்டுக்களை பெறுகிறார்.

அரவிந்தனின் மனைவியாக நர்வினி டெரி, சிறப்பான தேர்வு. யாழினியாக லீலாவதி, பிரேம், பாலா, தீபச்செல்வன், வெளிநாட்டு வாழ் தமிழராக தனச்செயன் ஆகியோரும் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

படத்தில் நடித்தவர்கள் என்பதை விட தங்கள் எண்ணங்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து வாழ்ந்துள்ளனர் என சொல்லலாம். எங்குமே கமர்சியல் எட்டிப்பார்க்கவில்லை.

டெக்னிஷியன்கள்..

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசையளவுக்கு பாடல்கள் ஈர்க்கவில்லை. ஆனால் பாடல் வரிகள் வலியை உணர்த்தும விதமாக உள்ளது.

எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது.

பொதுவாக இதுபோன்ற படங்கள் ஆவணப்படங்களாவே வெளிவரும். (டாக்குமெண்ட்ரி டைப்) ஆனால் இந்த படம் அப்படியாக இல்லாமல் நல்ல தரத்துடன் யதார்த்தமாக படைக்கப்பட்டு உள்ளது.

இன்னும் இலங்கை தமிழர்களை நம்மில் ஒருவராக பார்க்காமல் அகதிகளாகவே பார்க்கும் மனநிலை இங்கு உள்ளது. அவர்களை வைத்து இங்கே அரசியல் நடக்கிறது. அதை நாம் அறியும் வகையில் படமாக்கியுள்ளனர்.

இறுதியாக ஒரு காட்சியில் கதையின் நாயகன் மரணமடைகிறார். அது எப்படி என்பது புரியாமலே படம் முடிகிறது. ஆனால் அதன் பின்னால் இலங்கை அரசும் சென்சார் அமைப்பும் உள்ளது.

கைதி செய்யப்பட்ட காலத்தில் போராளிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளால் சில வருடங்களில் அவர்கள் மரணிப்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

போராளி அமுதனை கண்டதும் ஊர் மக்கள் அனைவரும் அவரை வரவேற்கின்றனர். மனைவியை தேடி அலைகிறார். ஆனால் போராட்டக் களத்தையும் அவர்களின் மண வாழ்க்கையின் ஆரம்பத்தையும் சின்ன சின்ன காட்சிகளாக காட்டியிருக்கலாம் இயக்குனர்.

அமுதன் யார்? அவரை பேச்சை ஊரே கேட்க என்ன காரணம்? என்பதை காட்டியிருந்தால் நம்மால் இன்னும் படத்துடன் ஒன்றிணைந்திருக்க முடியும்.

ஆக… இந்த சினம் கொள் படம்.. போராளி சிங்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி சிங்களரிடம் தொலைத்தனர் என்பதை சொல்லும்..

 

Related Articles