பிச்சைக்காரன் 2 விமர்சனம்.. 3.5/5.. பிச்சை போடலாம்

பிச்சைக்காரன் 2 விமர்சனம்.. 3.5/5.. பிச்சை போடலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிச்சைக்காரன் முதல் பாகத்தில் ஒரு பணக்காரன் பிச்சைக்காரன் ஆக நடித்திருப்பார். பிச்சைக்காரன் 2 படத்தில் ஒரு பிச்சைக்காரன் ஒரு பணக்காரனாக நடித்திருக்கிறார்.

கதைக்களம்…

1 லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார் விஜய் குருமூர்த்தி. இவர் இந்தியாவின் 7வது பணக்காரன்.

இவரின் சொத்துக்களை அபகரிக்க விஜய் குருமூர்த்தி கம்பெனியின் CEO அரவிந்த் என்பவர் சதிதிட்டம் போடுகிறார்.

எனவே மூளை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம், வேறொருவரின் மூளையை விஜய் உடலில் பொருத்தி, தான் போடும் கட்டளைகளை கேட்பவராக மாற்ற அரவிந்த் முடிவு செய்கிறார்.

பிச்சைக்காரன் சத்யா என்பவனை தேர்ந்தெடுத்து அவருடைய மூளையை விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்துகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? வில்லனின் சதி திட்டம் நிறைவேறியதா.? விஜய் ஆண்டனி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கி தயாரித்து இசையமைத்து எடிட்டிங் செய்து நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இரண்டு கேரக்டர்கள் என வித்தியாசம் காட்டி தன்னுடைய பங்களிப்பு சிறப்பாகவே செய்துள்ளார்.

மேலும் ஒரு இயக்குனரின் முதல் படம் என்பது தெரியாத அளவிற்கு மேக்கிங்கில் சிறப்பு சேர்த்துள்ளார்.

தன்னுடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். முக்கியமாக இந்த படத்தில் நாயகியுடன் கொஞ்சம் கூடுதலாகவே ரொமான்ஸ் செய்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கி உள்ளார் விஜய் ஆண்டனி.

காவ்யா தப்பார் ஓரிரு காட்சிகளில் வந்து கதையின் போக்குக்கு உதவியுள்ளார். யோகி பாபு நட்புக்காக நடித்திருப்பார் என்றே தெரிகிறது.

முதலமைச்சராக நடித்துள்ள ராதாரவி தன்னுடைய முதன்மை பணியை கச்சிதமாக முடித்துள்ளார்.

சிறுவன், சிறுமியாக நடித்த இருவரின் நடிப்பும் பிரமாதம்.

விஜய் சொத்துக்களுக்கு ஆசைப்படும் அவரது நண்பர்களாக தேவ் கில், ஜான் விஜய், ஹரிஷ் பெரடி ஆகியோர் நடித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

பொதுவாகவே முதல் பாகம்.. இரண்டாம் பாகம் வந்தால் இரண்டு படங்களின் ஒப்பீடு அதிகமாகவே இருக்கும். முதல் பாகத்தில் அம்மா – மகன் சென்டிமென்ட் உணர்வுப்பூர்வமாக யதார்த்தமாக இருந்தது.

ஆனால் பிச்சைக்காரன் 2 படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் உள்ளது. முதல் பாகத்தை இருந்த அளவு இதில் இல்லை என்பதே உண்மை.

கோயில் சிலையே மற்றும் கல்லூறும் பூவே என்ற பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை படத்திற்கு பலம்.

எடிட்டர் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.. (எடிட்டர் விஜய் ஆண்டனி).

ஒளிப்பதிவாளர் ஓம் நாராயணன் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.

பிச்சைக்காரன் விஜய் ஆண்டனிக்கு ஒரு பிளாஷ்பேக்.. பிச்சைக்காரர்களுக்கான புது வாழ்வு தரும் ‘ஆன்டி பிகிலி’ ஆகியவை சிறப்பு.

ஆனால் நட்பு, துரோகம், அரசியல் என கதைகள் வேறு பாதையில் பயணிப்பதால் சுவாரசியம் குறைகிறது.

ஆக பிச்சைக்காரன் 2.. பிச்சை போடலாம்

Pichaikkaran 2 movie review and rating in tamil

கஸ்டடி விமர்சனம் 3.25/5.; ஜெயலலிதாவை பழி தீர்த்த வெங்கட்பிரபு.?

கஸ்டடி விமர்சனம் 3.25/5.; ஜெயலலிதாவை பழி தீர்த்த வெங்கட்பிரபு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்..

1996ல் ஆந்திரா சாகிநெட்டிபள்ளியில் கதை ஆரம்பம். அங்குள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் நாகசைதன்யா.

ஒரு நாள் இரவில் இவர ரோந்து செல்லும்போது நடுரோட்டில் அரவிந்தசாமியும் சம்பத் ராஜூம் அடித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் இருவரும் யார் என தெரியாத நாகசைதன்யா இருவரையும் அடித்து ஜெயிலில் அடைத்து விடுகிறார். தான் ஒரு சிபிஐ அதிகாரி என சம்பத்ராஜ் சொல்ல அதை விசாரிக்க ஜெயப்பிரகாஷிடம் போன் செய்கிறார்.

உண்மைதான் என்று தெரிய வரும் நிலையில் திடீரென உயர் போலீஸ் அதிகாரிகள் அரவிந்த் சாமியை கொல்ல முற்படுகின்றனர்.

இதற்குப் பின்னணியில் முதலமைச்சர் பிரியாமணியும் ஐஜி சரத்குமாரும் இருப்பதை அறிகிறார் நாக சைதன்யா.

எனவே ஒரு கொலை குற்றவாளியை சிபிஐ-யிடம் ஒப்படைக்க அவர் முதல்வரை மீறி என்ன செய்தார்? என்ன நடந்தது? ஒரு சாதாரண கான்ஸ்டபிள் என்ன செய்ய முடியும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

கேரக்டர்கள்…

ஆக்சன் டான்ஸ் ரொமான்ஸ் என நாக சைதன்யா நடித்திருந்தாலும் ஏனோ அவரது முகம் தமிழ் ரசிகர்களுக்கு ஒட்டாது போலவே உள்ளது.

இதற்கு முன் சில டப்பிங் படங்களை பார்த்து இருந்தால் அந்த உணர்வு ஏற்பட்டு இருக்காது என்றே நம்பலாம். ஃப்ளாஷ் பேக் காட்சியில் தாடியுடன் வலம் வரும் நாகசைதன்யாவை நன்றாக ரசிக்கலாம்.

1990 களில் நாம் பார்த்த ரசித்த பெண்களைப் போலவும் நடிகைகளை போலவும் கீர்த்தி ஷெட்டி கண்களுக்கு விருந்தளித்துள்ளார்.

அவரின் உதடுகள் பேசுவதோடு கண்கள் பேசும் பாஷையும் புரிகிறது. விரைவில் கீர்த்தி ஷெட்டி நேரடி தமிழ் படத்தில் நடித்து ரசிகர்களின் ஏக்கத்தை பூர்த்தி செய்வார் என நம்பலாம்.

பிரியாமணியும் மிரட்டலான முதலமைச்சராக தன் கேரக்டரை கெத்தாக செய்திருக்கிறார். முதல்வருக்கு அடிபணிந்த ஐஜியாக சரத்குமார் தோற்றத்திலும் காட்சிகளிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார்.

சீரியஸான இந்த படத்தில் கொஞ்சம் கலகலப்பு ஊட்டி நம்மை ரசிக்க வைத்துள்ளார் அரவிந்தசாமி.

1990களில் வந்த ‘புதையல்’ பட காட்சிகள் அப்போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

நாகசைன்யாவின் அண்ணனாக கெஸ்ட் ரோலில் வருகிறார் ஜீவா. ஜோடியாக ஆனந்தி. அவர்களது காட்சிகளில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஜீவா இறந்ததாக காட்டப்பட்டாலும் ஆனந்தி என்ன ஆனார்? என்ற ஒரு காட்சியில் கூட இல்லை.

டெக்னீஷியன்கள்….

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தங்களின் ராஜ பலத்தை காட்டி காட்டியுள்ளனர். தீம் மியூசிக் தெறிக்க விட்டுள்ளது.

நிஜ வாழ்க்கையில் கங்கை அமரன் குடும்பத்திற்கும் ஜெயலலிதா – சசிகலா குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பகை இருந்துள்ளது போல.. அதற்கு ஏற்ப ப்ரியாமணியை ஜெயலலிதா போல காட்டி வச்சி செய்து இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

பெங்களூர் நீதிமன்றத்தில் தீர்ப்பு என காட்டப்படும் காட்சிகள் ஜெயலலிதாவை குறி வைப்பதாகவே உள்ளது சரி அது படைப்பாளி சுதந்திரம் என விட்டுவிடலாம்.

இடைவேளையின் போது காட்டப்படும் அந்த பெரிய அணை திறக்கும் நீர் காட்சி அருமை. அது படமாக்கிய விதமும் சிறப்பு.. ஒளிப்பதிவாளர் கதிருக்கு பெரிய பாராட்டுகளை கொடுக்கும். எடிட்டரும் தன் பணியில் சிறப்பு.

‘கஸ்டடி’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவானது என்கிறார்கள். வார்த்தைகள் மட்டும் தமிழ் உச்சரிப்புடன் அழகாக இருக்கிறது. ஆனால் பின்னணியில் காட்டப்படும் அனைத்துமே தெலுங்கு சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. எனவே ஒரு தமிழ் படம் பார்ப்பது போன்ற உணர்வு வரவில்லை.

அண்மையில் வெளியான வாத்தி மற்றும் தீ வாரியார் ஆகிய படங்களும் இதே பாணியில் தான் இருந்தன. இதை தமிழ் இயக்குனர்களும் நடிகர்களும் கொஞ்சம் சரி செய்து கொண்டால் தமிழ் பதிப்பிலும் பெரும் வெற்றியை பெறலாம்.

Custody movie review and rating in tamil

ஃபர்ஹானா விமர்சனம் 3.5/5.; சுதந்திர பறவை

ஃபர்ஹானா விமர்சனம் 3.5/5.; சுதந்திர பறவை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமையலறையில் கிடந்த பெண்கள் ஒரு காலம்.. படிக்க தொடங்கிய காலம் ஒரு காலம்… வேலைக்கு சென்ற காலம் ஒரு காலம்… இவை எல்லாம் கடந்து தற்போது தனக்கு பிடித்தமான வேலை. தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழும் பெண்கள்..

நவீன காலத்திற்கேற்ப திரைக்கதை அமைத்து இந்த பர்ஹானாவை பறக்கவிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.

கதைக்களம்…

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரும் இஸ்லாமிய மனைவி கணவன் தம்பதியர். இவர்களின் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம்.

கணவனுக்கு பெரிதாக படிப்பறிவு இல்லை. தன் தந்தையுடன் செருப்பு கடையில் பணிபுரிகிறார். குடும்ப வறுமையின் காரணமாக படித்த பெண்ணான ஐஸ்வர்யா ஒரு கால் சென்டரில் (பேங்க் கஸ்டமர் கேர்) வேலைக்கு சேருகிறார்.

அதே அலுவலகத்தில் வேறொரு துறையில் பணிபுரியும் தன் தோழிகளைப் போல தனக்கும் நிறைய சம்பளம் வேண்டும் என நினைக்கிறார். முதலில் மறுக்கும் அனுமோள் & ஐஸ்வர்யா தத்தா ஆகிய இருவரும் சம்மதிக்கின்றனர்.

அங்கு இணைந்த பின் தான் அது செக்ஸ் சாட்டிங் கஸ்டமர் கேர் என தெரிய வருகிறது. முதலில் அந்த பணியை வெறுக்கும் ஐஸ்வர்யா ஒரு கட்டத்தில் ஒரு ஆண் குரலோடு பேச பேச தனக்கு கிடைக்காத பாசம் அன்பு அதில் கிடைப்பதாக உணர்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த ஆண் குரல் ஐஸ்வர்யாவின் குடும்ப விவரங்களை பற்றி தெரிந்து கொள்கிறது. என்னை நீ சந்திக்க வேண்டும்.. என் வீட்டிற்கு வர வேண்டும் இல்லை என்றால் உனது குடும்பத்தில் நீ பேசிய பேச்சுக்களை சொல்லி விடுவேன் என்கிறது.

அதன் பின் பர்ஹானா என்ன செய்தார்.? வேலையை விட்டு விட்டாரா? அல்லது அந்த நபரை சந்தித்தாரா? யார் அந்த ஆண் குரல்? இதனால் குடும்பத்தில் என்ன பிரச்சனை என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

எந்த கதையாக இருந்தாலும் தன் கேரக்டர் என்ன என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அதில் எப்போதும் போல சிக்ஸர் அடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு ஆண் மகனால் தன் குடும்பத்திற்கு செய்யாததை ஐஸ்வர்யா செய்யும்போதும்.. வேறொரு ஆணுடன் சிக்கிக் கொள்ளும் போதும்.. பரிதவிக்கும் காட்சிகளில் பர்ஹானா அதிகமாகவே கவர்கிறார்.

படம் முழுவதும் மர்மக்குரலாகவே ஒலிக்கிறது செல்வராகவன் குரல். இவரது கேரக்டரில் வேறொருவர் இருந்திருக்கலாம். ஏனென்றால் கொடுத்த பில்டப் அப்படி.

ஒரு கையாலாகாத கணவனாக ஜித்தன் ரமேஷ். இந்த கேரக்டரில் எந்த ஒரு தமிழ் ஹீரோவும் நடிக்க மறுப்பார்கள் என்பது தான் உண்மை. ஒருநாள் வேலைக்கு செல்ல ஐஸ்வர்யா தயங்கும்போது ஒவ்வொரு கஸ்டமரையும் காலை தொட்டு தான் நான் செருப்பை அணிவிக்கிறேன்.

அது என்னுடைய தொழில்.. எனவே கஷ்டமரின் விருப்பத்திற்கு நடந்து கொள் என அவர் அட்வைஸ் செல்லும் போது ஒரு கணவராக நிச்சயம் பெண்களுக்கு பிடிக்கும்.

பழமைவாதியான இஸ்லாமிய கேரக்டரை நம் கண் முன்னே கொடுத்துள்ளார் கிட்டி. பெண்கள் வீட்டை விட்டு வேலைக்கு செல்லக்கூடாது என்று நினைக்கும் அவர் ஒரு கட்டத்தில் மனம் மாறுவது ரசிக்க வைக்கிறது.

முக்கியமாக குங்கும பொட்டு பெண்ணிடம் அவர் பேசும்போது அவர் மனம் வருவதை தன் முக பாவனைகளில் காட்டி இருக்கிறார்.

இவர்களுடன் மாடர்ன் பெண்ணாக ஐஸ்வர்யா தத்தா.. ஆண்களிடம் அவர் சிக்கி சீரழிவது நம் மனதை கலங்கடிக்கும்.

அலுவலக தோழியாக அனுமோள். ஒரு உற்ற தோழியாக தன் கேரக்டரில் உயர வைத்திருக்கிறார்.

டெக்னீஷியன்கள்…

‘ஒரு நாள் கூத்து’ மற்றும் மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் முதல் இரண்டு படங்களில் அவர் கொடுத்த டச் இதில் கொஞ்சம் குறைவாக இருப்பதை உணர முடிகிறது.

காரணம் பர்ஹானாவில் முதல் பாதி வரை பெரிதாக ஈர்ப்பு இல்லை. ஆனால் இடைவேளைக்குப் பிறகு படத்தை வேகமாக நகர்த்தி அதை ஈடுக்கட்டி உள்ளார் இயக்குனர் நெல்சன்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் சிறப்பு.. இடைவேளைக்குப் பிறகு பின்னணி இசை நம்மை சீட்டு நுனியில் உட்கார வைக்கிறது.

ஃபர்ஹானா என்ன செய்யப் போகிறார்.? என்ற பதட்டத்தை நம்மில் தன் இசை மூலம் உணர வைக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

ஒளிப்பதிவாளர் கோகுல் பினோயின் கேமரா சென்னை ஐஸ் ஹவுஸ் சந்து பொந்து எல்லாம் புகுந்து விளையாடுகிறது.

ஒரு நடுத்தர இஸ்லாமிய குடும்பம் எப்படி இயங்கும் என்பதை தன் கேமரா கண்களில் அழகாக படம் பிடித்துள்ளார்.

இஸ்லாமிய குடும்பத்தில் ஆண்மகன் ஒருவர் வரும்போது அந்த பெண்கள் எப்படி நடந்து கொள்வார்கள்.? என்பதையும் சொல்லிக் கொடுத்து வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

ஃபர்ஹானா வேலைக்குப் போகலையா..?” என்று கிட்டி கேட்பதை காட்சியாக முடித்திருப்பதில் இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் சென்டிமெண்ட் டச் தெரிகிறது.

ஆக ஃபர்ஹானா.. சுதந்திர பறவை

Farhana movie review and rating in tamil

இராவண கோட்டம் விமர்சனம்.; தலக்கட்டு.. வெளுத்துக்கட்டு

இராவண கோட்டம் விமர்சனம்.; தலக்கட்டு.. வெளுத்துக்கட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, ஆனந்தி, சஞ்சய், இளவரசு, பிரபு, தீபா உள்ளிட்டோர் நடிக்க இன்று வெளியானது ‘இராவண கோட்டம்’.

1957ல் நடந்த முதுகுளத்தூர் கலவர சம்பவங்களை சொல்லி முற்ப்பட்டு இருக்கிறார் விக்ரம் சுகுமாறன்.

கதைக்களம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏனாதி என்ற ஊரின் தலக்கட்டு பிரபு. இவரது அறிமுகமே தேசிய தலைவர் படங்களுடன் இவரது தலை இடம்பெறுகிறது.

பிரபுவின் நெருங்கிய நண்பர் இளவரசு. பிரபு – மேலவீதி.. இளவரசு – கீழவீதி. (ஜாதியை சொல்லாமல் இப்படி வைச்சிட்டாங்க)

இந்த ஊர் மொத்தமும் மொத்தமும் பிரபு கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே ஒரு அரசியல்வாதி நினைத்தாலே கூட அந்த ஊரில் எது செய்ய நினைத்தாலும் பிரபுவின் அனுமதி வேண்டும்.

நாலு காசு பார்க்கலாம் என நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு (எம்எல்ஏ அருள்தாஸ் & அமைச்சர் தேனப்பன்) இது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.

சாதீயை வைத்து ஊரை இரண்டாக பிரிக்கும் வேலையில் அருள்தாஸின் ஒத்தக்கை அல்லக்கை பக்கா ப்ளான் போடுகிறார்.

அதில் பிரபுவின் விசுவாசியான சாந்தனுவும் இளவரசின் மகன் சஞ்சய் சரவணனும் சிக்குகிறார்கள். இதில் நாயகி ஆனந்தியும் அடக்கம்.

அது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தண்ணீர் பிரச்சனையால் ஊரே திண்டாடுகிறது. எனவே கருவேல மரங்களை ஒழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என்பதால் அதனை ஒழிக்க கிராம மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால் கார்ப்பரேட்டுக்கு கைக்கூலியாக மாறும் அரசியல்வாதிகள் மக்கள் ஒற்றுமையை குலைக்கின்றனர்.

இறுதியில் என்ன ஆனது.? ஊர் பிரிந்ததா.? பங்காளிகள் இணைந்தார்களா.? ஊருக்கு நல்லது நடந்ததா? கருவேல மரங்கள் ஒழிக்கப்பட்டதா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

சாந்தனு ஒரு முரட்டு கிராமத்து இளைஞனாக அதிகமாகவே ஸ்கோர் செய்துள்ளார். தன்னுடைய கேரக்டரை கச்சிதமாகவே கொடுத்துள்ளார் எனலாம்.

இவருக்கு போட்டியாக சஞ்சய்.. தன்னால் முடிந்த வரை சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்.

நாயகி ஆனந்தி கிராமத்து பெண்ணாக ரசிக்க வைத்துள்ளார். ஊர் பெரியவர் பிரபுவின் கதாபாத்திரம் படத்திற்கு அவரது உடலை போலவே பலம் சேர்த்துள்ளது.

தீபா ஷங்கரின் காட்சிகள் யதார்த்தமாக உள்ளது. அதே சமயம் சுஜாதாவின் காட்சிகள் செயற்கைத்தனமாக உள்ளது. எப்போதும் மிரட்டும் அருள்தாஸ் இதில் எம்எல்ஏவாக இருந்தும் அடக்கி வாசித்திருக்கிறார். மினிஸ்டர் தேனப்பன் தன் கேரக்டரில் கச்சிதம்.

ஒத்தக்கை ஆசாமி.. வில்லனாக இவர் போடும் சதி திட்டங்கள் ரசிக்க வைக்கிறது.

படத்தில் இவரது கேரக்டருக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது ஏனோ?. இயக்குனருக்கு மட்டுமே வெளிச்சம்.

டெக்னீஷியன்கள்…

மேலத்தெரு கீழத்தெரு என்ற இரு பிரிவினரை காட்டினாலும் ஊர் மக்கள் தல கட்டுக்கு கட்டுப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை காட்டுகிறது.

அது போல சாதி வேறாக இருந்தாலும் சாந்தனு – சஞ்சய் நட்பு பாராட்டக்குரியது. ஆனால் ஆனந்தியின் முக்கோண காதல் கதையை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லி இருக்கலாம்.

பெரும்பாலும் எந்த படத்திலும் சொல்லாத சீமகருவேல மரங்கள் அரசியலைப் பற்றி சொல்லியிருப்பது இயக்குனரின் சமூக ஆர்வத்தை காட்டுகிறது.

தண்ணீர் பஞ்சத்தில் கஷ்டப்படும் நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே கார்ப்பரேட் கைக்கூலிகளை விரட்டி அடிக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார் இயக்குனர்.

அது போல கிராமத்திற்குள் அரசியல் வந்தால் ஓட்டுக்கு பணம் வந்துவிடும் என்பதையும் பிரபு கேரக்டர் மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

பிரபு – சாந்தனு சார்ந்த மேலத்தெருவில் ஒரு கெட்டவர் கூட இல்லை. ஆனால் இளவரசு – சஞ்சய் சரவணன் சார்ந்த கீழத்தெருவில் ஒரு நல்லவர் கூட இல்லையா.? இப்படியாகவே காட்சிகளை நகர்த்தி இருப்பது ஏதோ ஒரு பிரிவினருக்காக இயக்குனர் நிற்கிறாரோ.? என்ற எண்ணத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் கவனம் பெறுகின்றன.. பின்னணி இசை கிராமத்து கதை ஓட்டத்தில் இருப்பது சிறப்பு.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் சிறப்பு.

SI எஸ் ஐ செங்குட்டுவன் & இந்திரா.. இதை வைத்து ஒரு செயின் டாலர் காட்சி காட்டப்படுகிறது.்இதனை வைத்து ஒரு சின்ன ட்விஸ்ட் கொடுத்து நினைத்துள்ளார் இயக்குனர்.. ஆனால் அதுவும் சப் என்று ஆகிவிடுகிறது.

ஆக இராவண கோட்டம்.. தலக்கட்டு வெளுத்துக்கட்டு.்

Raavana Kottam movie review and rating in tamil

குட் நைட் விமர்சனம் – 4.25/5 – குறட்டை விடாமல் ரசிக்கலாம்

குட் நைட் விமர்சனம் – 4.25/5 – குறட்டை விடாமல் ரசிக்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா நடிப்பில் உருவானது ‘குட் நைட்’.

கதைக்களம்…

படத்தின் முதல் காட்சி தொடங்கி கிளைமாக்ஸ் காட்சி வரை குறட்டை சத்தத்துடன் படம் பயணிக்கிறது.

மணிகண்டன் பெயர் மோகன். அவர் ஓவர் குறட்டை விடுவதால் இவருக்கு மோட்டார் மோகன் என பெயர். குறட்டை சத்தத்தால் அக்கப் பக்கத்து வீட்டினர் கூட உறங்க முடியாமல் தவிக்கின்றனர்.

ஒருநாள் ஆபீஸ் பஸ்ஸில் பயணிக்கும் போது இவர் உறங்க இவரை காதலிக்கும் பெண்.. “என்னால் ஒருநாள் கூட பஸ்ஸில் உன்னுடன் பயணிக்க முடியவில்லை.. நான் வாழ்க்கை முழுவதும் எப்படி பயணிக்க முடியும் என பிரிந்து செல்கிறார்.

இந்த கட்டத்தில் நாயகி மீத்தா ரகுநாத் மீது இவருக்கு காதல் வருகிறது. தன் குறட்டையை மறைத்து அவரை திருமணம் செய்கிறார். அதன் பிறகு குறட்டையால் என்ன ஆச்சு? கணவன் மனைவி ஒன்றாக வாழ்ந்தார்கள்.? பிரிந்தார்களா.? என்பது தான் படத்தின் மீதிக்கதை

கேரக்டர்கள்….

‘ஜெய் பீம்’ படத்தில் நம்மை அழ வைத்த மணிகண்டன் இந்த படத்தில் நம்மை குறட்டை குலுங்க சிரிக்க வைத்துள்ளார்.

குறட்டை என்ன பெரும் பிரச்சனையா என்ற சிலர் நினைக்கலாம்.

ஆனால் அடுத்தவருக்கு குறட்டை தொந்தரவாக இருக்கும் என்று நினைக்கும் அந்த குறட்டை நபர் படும் கஷ்டங்களை அழுத்தமாக உணர்வுப்பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

நான் நண்பர்களுடன் பயணித்து பல வருடங்கள் ஆகிறது.. என் குறட்டை சத்தத்தால் அவர்களால் பயணிக்க முடியவில்லை என சொல்லி அழும்போதும்.. மனைவியுடன் நிம்மதியாக படுக்க முடியவில்லை என ஏங்கும்போதும்.. அதே நேரம் மனைவி நிம்மதியாக உறங்க இவர் தனி அறையில் படுத்து உறங்குவதும்… தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி ஆபீஸில் அவமானப்படும்போதும்.. ராஜினாமா செய்யும்போது கெத்தாக பேசுவதும் என அலப்பறை செய்துள்ளார் மணிகண்டன்.

மணிகண்டன் வீட்டிற்கு பிளம்பிங் வேலை செய்ய வந்த ரமேஷ்திலக் அக்கா ரேச்சலை கரெக்ட் செய்து கல்யாண செய்த பிறகு அதை வைத்து மாமனும் மச்சானும் அடிக்கடி வாரிக் கொள்வதும் ரசிக்க வைக்கிறது.

மணிகண்டன் ஆபீஸ் உயிரதிகாரியாக பக்ஸ் பகவதி பெருமாள். சில காட்சிகளே என்றாலும் நம் மனதில் நிற்கிறார்.

‘கடைசி விவசாயி’ படத்தில் நீதிபதியாக கலக்கிய ரேச்சல் ரெபக்கா இந்த படத்தில் அக்கா கேரக்டரில் தனித்துவமாக தெரிகிறார். ‘லவ் டுடே’ படத்தில் ரவீனாவுக்கு எப்படி ஒரு அக்கா கேரக்டர் அமைந்ததோ அதுபோல இந்த படத்தில்.. அக்கா கேரக்டர் என்றாலும் தன்னால் ஜொலிக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் ரேச்சல் ரெபேக்கா. (மற்ற நடிகைகள் இதை கவனிக்கலாம்)

இவர்களுடன் கௌசல்யா நடராஜன், பாலாஜி சக்திவேல் என அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு.

டெக்னீஷியன்கள்….

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு பாடல்கள் ஓகே ரகம் தான். இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஒரு பாடலை ஷான் ரொம்ப கஷ்டப்பட்டு பாடுவது போல் தெரிகிறது. ஏன் இப்படி.? ஆனால் பின்னணி இசை பாராட்டுக்குரியது.

ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்ய பரத் விக்ரமன் என்பவர் எடிட்டிங் செய்துள்ளார். இருவரும் தங்கள் பணியை நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.

நாய்க்குட்டி ஓடி வருவது முதல் அது பட்டு மெத்தையில் உறங்குவது முதல்.. மழை சாரலில் கணவன் மனைவி பேசிக் கொள்வது முதல் என ஒவ்வொரு காட்சியும் ரசிக்கத்தக்க வகையில் கொடுத்துள்ளனர்.

ஒரு காட்சியில்.. உனக்கு என்னடா மோகன் பெயர் வைத்திருக்கிறேன்.. அந்த பெயருக்கே உன்னை நிறைய பெண்கள் காதலிப்பார்கள் என் அம்மா சொல்லுவார்.

உனக்கு சினிமா மோகன் மீது டாவு.. அதனால அந்த பேர வச்ச.. என நாயகன் பேசும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதுபோல நாயகியுடன் பேசும்போது.. எங்க போறீங்க.? இப்ப ஒயின்ஷாப்புக்கு.. என தவறுதலாக பேசும் போதும்…

அதுபோல ஹோட்டலில் அமர்ந்திருக்கும் போது யுடர்ன் போட்டு குடும்பத்தினரை வீட்டுக்கு போக சொல்வதும்.. கிளைமாக்ஸ் காட்சியில் யுடர்ன் போட்டு ஏர்போட்டில் இருந்து வீட்டிற்கும்.. வீட்டிலிருந்து ஏர்போர்ட்டிற்கும் போகச் சொல்லும்.. என ரசிக்க வைத்துள்ளார். அந்தக் காட்சியில் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.

ஒரே நாளில் தொப்பையை எப்படி குறைக்க முடியாதோ.. அது போல மணி – அணு இணைய மாட்டார்கள் என பாலாஜி சக்திவேல் சொல்லும்போதும்.. டேய் என்னை தவிர இந்த உலகத்தில் எல்லாருமே சந்தோஷமா தான் இருக்கீங்க என நாயகன் சொல்லும்போதும்… குறட்டைக்கு பயந்து நாய்க்குட்டி தெறித்து ஓடும் போதும்.. இப்படியாக சின்ன சின்ன சுவாரசியங்களை சொல்லி குட் நைட் க்கு கூடுதல் பலம் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ஆக.. குறட்டை விடுபவர்களும் குறட்டையால் தவிப்பவர்களும் இந்த படத்தை குறட்டை விடாமல் பார்த்து ரசிக்கலாம்.

Good Night movie review and rating in tamil

தீர்க்கதரிசி விமர்சனம்.. 2.75/5 – தீரா-பலி

தீர்க்கதரிசி விமர்சனம்.. 2.75/5 – தீரா-பலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்ட்ரோல் ரூமிற்கு ஒரு மர்ம நபர் போன் வருகிறது. நடக்கவிருக்கும் விபத்தை தடுக்கச் சொல்லி எச்சரிக்கிறார்.

ஆனால் காவல்துறையின் அலட்சியத்தால் அந்த விபத்து நடக்கிறது. பிறகு ஒரு கொலை நடப்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறார். அந்த கொலையை தடுப்பதற்குள் அதுவும் நடக்கிறது.

இப்படியாக அந்த நபர் காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்யும்போது மீடியாவுக்கும் செய்கிறார். இதனால் ஒரு குற்றத்தை கூட தடுக்க முடியாத காவல்துறையை மக்கள் திட்டுகின்றனர்.

அந்த மர்ம நபருக்கு தீர்க்கதரிசி எனவும் பெயரிடுகின்றனர். இப்படியாக அடுத்தடுத்து விபத்துகளும் கொலைகளும் நடக்க அதை தடுக்க முடியாமல் திணறுகிறது காவல்துறை.

அந்த நபர் யார்.? அவர் முன்கூட்டியே எப்படி சொல்கிறார்.? ஒருவேளை சொல்லிவிட்டு அவர்தான் கொலைகளை செய்கிறாரா? அவருக்கும் இந்த சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு என்பதே படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

கதையின் நாயகனாக அஜ்மல். போலீஸ்க்கு உரித்தான கம்பீரத்தோடு கெத்து காட்டி இருக்கிறார். இவருடன் வரும் துஷ்யந்த் ஜெய்வந்த் ஆகியோரும் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதம்

கண்ட்ரோல் ரூம் அதிகாரியாக ஸ்ரீமன். கொஞ்சம் காமெடி கலந்து தன் கேரக்டரை நிறைவாக செய்திருக்கிறார்.

இவர்களுடன் தேவதர்ஷினி, மோகன் ராம், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் வருகின்றனர்

கௌரவத் தோற்றத்தில் சத்யராஜ். வெறும் குரலிலேயே தன் கேரக்டரை 80% செய்துவிட்டு 20% நக்கல் நையாண்டி கலந்து தலை காட்டி நடித்துள்ளார்.

டெக்னீஷியன்கள்…

படத்தின் மெயின் கேரக்டர் சத்யராஜ் தான். ஆனால் அவரது காட்சிகள் வெறும் 10% கூட படத்தில் இல்லை. அவரது காட்சிகளை அதிகப்படுத்தி இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடியிருக்கும்.

முக்கியமாக அங்கே விபத்து.. இங்கே கொலை.. என படம் முழுவதும் சென்று கொண்டே இருப்பதால் போதும் முடியல என்கிற எண்ணமே நமக்கு வருகிறது.. எடிட்டர் கொஞ்சம் ஓவர் டைம் பார்த்திருக்கலாம்.(படத்தொகுப்பாளர் ரஞ்ஜீத் சி.கே.)

சென்னை அழகை தன் கேமரா கண்களில் இன்னும் அழகுற செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் தன் ஜெ.லெக்ஷ்மன்.

படத்தில் நாயகி இல்லை.. டூயட்டும் இல்லை ஐட்டம் சாங்கும் இல்லை.. எனவே காவல்துறைக்கு பெருமை சேர்க்க ஒரு பாட்டு வேண்டும் என இயக்குனர் நினைத்தாரோ என்னவோ.. வேண்டா வெறுப்பாக ஒரு பாடல் வைத்துள்ளார். அதற்கு ஆட்டமும் சரியில்லை.. பாட்டும் பெரிதாக கை கொடுக்கவில்லை.

இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமணியத்தின் பின்னணி இசை படத்திற்கு நன்றாகவே பலம் சேர்த்துள்ளது.

பி.சதீஷ்குமாரின் திரைக்கதையில் அறிமுக இயக்குநர்கள் பி.ஜி.மோகனும் எல்.ஆர்.சுந்தரபாண்டியும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி உள்ளனர்.

கிளைமாக்ஸ் சொல்லப்படும் சத்யராஜின் கதைகளை கொஞ்சம் அதிகப்படுத்தி விபத்து & கொலை காட்சிகளை கொஞ்சம் ட்ரிம் செய்து இருந்தால் இந்த தீர்க்கதரிசி இன்னும் ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்து இருப்பார்.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களின் சுயநலத்திற்காக செய்யும் தவறுகள் மற்றொரு குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை காட்சிப் படுத்தியதற்கு கை கொடுத்து பாராட்டலாம்.

ஆக தீர்க்கதரிசி.. தீரா-பலி

Theerkadarishi movie review and rating in tamil

More Articles
Follows