தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை குறித்து நடிகர் உதயா அறிக்கை..
திரு விஜய் ஆண்டனி அவர்களின் அன்பு மகள் மீராவின் அகால மரணம் எனக்கு மிகுந்த மன உளச்சலை ஏற்படுத்தியது. விஜய் ஆண்டனி அவர்களின் இல்லத்திற்கு நான் நேரில் சென்று ஆறுதலாக இருந்த போதும், அவரையும், அவரது மனைவி திருமதி ஃபாத்திமா விஜய் ஆண்டனி அவர்களையும் என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் நின்றேன்.
அவர்களது வலியை நேரில் கண்ட எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. பெற்றோர்கள் அனைவரும் வாழ்வதும், சம்பாதிப்பதும் அவர்களது பிள்ளைகளுக்காகத் தான். இப்படி இருக்கும்போது, அந்த குழந்தையே அவர்களிடம் இல்லை என்ற நிலைமை மிகவும் கவலை அளிக்கக் கூடியது.
விஜய் ஆண்டனி தம்பதியரின் இளைய மகள் லாரா அவர்களுக்கு துணையாக இருக்கும் போதிலும், மீராவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.
மீராவின் முடிவுக்கு மன அழுத்தம் காரணம் என்று சொல்லப்படுகிறது. அவரை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது எது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு தோன்றுவது என்னவென்றால் கொரோனா காலகட்டத்தில் படிப்பிற்காக கைபேசிகளையும் லேப்டாப்புகளையும் குழந்தைகளிடம் நாம் கொடுத்தோம்.
இதன் காரணமாக அவர்கள் அவர்களது உணர்வுகளையும், எண்ணங்களையும் மொபைல், லேப்டாப்பில் பகிர்ந்து கொள்கிறார்களே தவிர, நண்பர்களிடமோ, பெற்றோர்களிடமோ பகிர்ந்து கொள்வதில்லை. நாமும் சரி, நமது குழந்தைகளும் சரி, கைபேசியே உலகம் என்று இருக்கிறோம். இதை சிறிது சிறிதாக மாற்றி அமைக்க வேண்டியது நமது கடமை.
பெற்றோர்கள் ஆகிய நாம் வாழ்வில் பல்வேறு சவால்கள், சிக்கல்கள் மற்றும் இன்னல்களுக்கு இடையே தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம்.
அவ்வாறு இருக்கும் போது குழந்தைகளிடம் நாம் நட்புடன் இருக்க வேண்டும் என்பதையும், குழந்தைகள் நம்மை நண்பர்களாக பார்க்க வேண்டும் என்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் நம்மிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் நட்பான சூழலை நாம் உருவாக்க வேண்டும்.
படிப்பு படிப்பு என்று அவர்களுக்கு அழுத்தம் தரக் கூடாது. அவர்களுக்கு விருப்பமானதை கற்று கொள்ள அனுமதிக்க வேண்டும். பள்ளிகள் கற்று கொடுப்பது 25% தான், மீதி 75% நமது கையில் தான் உள்ளது.
வாழ்க்கையை எவ்வாறு அணுக வேண்டும், எதிர்மறை விஷயங்களையும் நேர்மறையாக எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் தான் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.
அது மட்டுமில்லாது, மோட்டிவேஷன் கிளாசஸ் எனப்படும் மன ஊக்கம் அளிக்கும் வகுப்புகளை சில பள்ளிகளில் நடத்துகிறார்கள். அனைத்து பள்ளிகளும் இதை நடத்த வேண்டும்.
தாழ்வு மனப்பான்மையை குழந்தைகள் மனதில் இருந்து அறவே நீக்க வேண்டும். பாட முறையை மாற்றியமைக்க வேண்டும். வரலாற்றை சொல்லிக் கொடுப்பதை விட அதிகமாக எதிர்காலம், மன ஊக்கம், சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். நமது குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை நாம் தான் உறுதி செய்ய வேண்டும்.
இன்னொரு இளம் உயிர் போவதற்கு நாம் அனுமதிக்க கூடாது. மீராவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது எனக்கு உண்மையில் தெரியவில்லை. அருமையான பெற்றோர் அவருக்கு கிடைத்தார்கள், பள்ளியிலும் அவரது ஆசிரியர்கள் அவரைப் பற்றி நல்லவிதமாகவே கூறுகிறார்கள்.
விஜய் ஆண்டனி அவர்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் போதுமான வார்த்தைகள் இல்லை. மீராவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
குழந்தைகளே, எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னால் உங்கள் பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் பற்றி சிந்திக்குமாறு உங்களை நான் மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏதாவது விபரீத எண்ணம் தலை தூக்கும் போது, பெற்றோர்களிடமோ, ஆசிரியர்களிடமோ நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ள தயங்காதீர்கள். நீங்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இதை நான் ஒரு நடிகனாக சொல்லவில்லை. ஒரு சக மனிதனாகவும், தந்தையாகவும் கூறுகிறேன்.
பொறுப்புள்ள அப்பாவாக இன்னும் முயற்சித்து கொண்டிருக்கும்….
உதயா
நடிகர்
Udhaya statement about Vijayantony daughter suicide