சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

சூப்பர் சூர்யா… அபாரம் அபர்ணா.; சூரரைப் போற்று விமர்சனம் – 4.25/5

உண்மைக்கதை

இந்த படம் ‘ஏர் டெக்கான்’ விமான நிறுவனத்தின் நிறுவனரான கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” என்ற நூலின் படைப்பாகும்.

நடிகர்கள் – சூர்யா, மோகன்பாபு, பரேஷ் ராவல், அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி, பூ ராமு, மற்றும் பலர்.
இசை – ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு – நிகேஷ்
இயக்கம் – சுதா கொங்கரா
தயாரிப்பாளர் – சூர்யா

கதைக்களம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர்கள் பூ ராமு (ஆசிரியர்)-ஊர்வசி தம்பதி. இவர்களின் மகன் சூர்யா.

அந்த பகுதியில் ரயில் வசதி இல்லாத நிலையில் அதற்காக போராடி குடும்பத்தினர் ரயிலை வர வைக்கின்றனர். இப்படி ஊருக்கான சேவைகளையும் செய்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா) படித்து விமானப்படையில் சேர்கிறார்.

தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது அவசரமாக ஊருக்கு வர நினைக்கிறார். விமானப்படையில் பணி புரிந்த போதும் அவரிடம் பணமில்லாத காரணத்தினால் விமான பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

சரியான நேரத்திற்கு சென்று தந்தையை காணமுடியவில்லை.

எனவே ஒருகட்டத்தில் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு சொந்தமாக விமான நிறுவனம் தொடங்க திட்டமிடுகிறார் மாறன்.
அனைத்து ஏழைகளும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார்.

சூர்யாவின் திட்டத்தை தெரிந்துக் கொண்ட மற்றொரு விமான நிறுவன தொழிலதிபர் பரேஷ் ராவல் பிரச்சினைகள் கொடுக்கிறார்.
இறுதியாக அந்த சூழ்ச்சிகளை நெடுமாறன் ராஜாங்கம் எப்படி வென்றார்? என்பதே கதை.

கேரக்டர்கள்

தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளராகவும் சிறந்த நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதில் நடிகராகவும் ஜொலிக்கிறார் சூர்யா.

தொழிலபதிர்களாக வர துடிக்கும் வாலிபர்கள் இந்த படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும்.

விமான பயணம் செய்ய கையில் காசு இல்லாமல் கெஞ்சும் காட்சிகளாகட்டும் தந்தையை காண முடியாமல் தாய் காலில் விழும் காட்சிகளாகட்டும் அட..டா… என்னய்யா பின்னுறீயே… சூர்யா..

தன் ஊருக்கு ரயில் வரவேண்டி போராடும் 18 வயது இளைஞனாக வரும் காட்சியிலும் அருமை.

சூர்யா ஒரு பெரிய நடிகர்… இப்படி அடிக்கடி இவ்வளவு கெட்ட வார்தைகளை பேச வேண்டுமா? என்பதே கேள்வியாக உள்ளது. யதார்த்தம் என்றாலும் அதை மியூட் செய்திருக்கலாம்.

அபர்ணாவுடன் சூர்யாவுக்கு செம கெமிஸ்ட்ரி. இந்த ஜோடி இனி தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

அபர்ணா கர்ப்பம் என்பதை வேறுமாதிரியாக சொல்ல… ஏண்டீ நீ சாதாரண பெண் போல பேசவே மாட்டியா? என கேட்பதிலும் ரசிக்க வைக்கிறார்.

அபர்ணா.. ஆஹா.. ஓஹோ.. என்று சொல்லுமளவுக்கு சூப்பர் நாயகி. என்னதான் கணவர் விமான நிறுவனம் ஆரம்பிக்க நினைத்தாலும் தனக்கு ஒரு பிசினஸ் வேண்டும் என பொம்மி பேக்கரி ஆரம்பித்து அதை விளம்பரப்படுத்து காட்சியில் சபாஷ் போட வைக்கிறார்.

ஜடையை முன்னாடி போட்டு முதுகு அழகை காட்டி அபர்ணா பேசும் அந்த கிராமத்து பாஷையில் சிட்டி இளைஞர்களே சொக்கி போவார்கள்.

படம் முழுவதும் ப்ளைன் சாரி டிசைன் ஜாக்கெட் என அதிலும் ஒரு நேர்த்தியான அழகை காட்டியிருக்கிறார்.

மோகன் பாபு மற்றும் பூ ராமு மற்றும் ஊர்வசி ஆகியோர் அருமையான நடிப்பை வழங்கியுள்ளனர்.

கத்தாமல் சண்டை போடாமல் மிரட்டாமல் அனைத்தையும் செய்கிறார் தொழிலதிபர் வில்லன் பரேஷ் ராவல். இவரின் பார்வையே செம கெத்து.

காளி வெங்கட், விவேக் பிரசன்னா, கருணாஸ், வினோதினி, ஞானசம்பந்தம், ஆர்எஸ். சிவாஜி, சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் கச்சிதம். கதைக்கேற்ற கதாபாத்திரங்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அசுரனுக்கு பிறகு தனது இசை சாம்ராஜ்யத்தை அரங்கேற்றியிருக்கிறர் ஜி வி பிரகாஷ். படத்தின் ஆரம்ப காட்சி விமான தரையிரங்கும் அந்த காட்சியே நம்மை சீட் நுனிக்கு வரச் செய்யும். (வீட்டில் அமர்ந்திருந்தாலும் அதான்..)

இசை படத்திற்கு பெரிய பலம். பாடல்களும் அருமை. பின்னியிருக்கிறார்.

நிகேத் அவர்களின் ஒளிப்பதிவு பிரம்மிக்க வைக்கிறது. எந்த காட்சியும் தேவையில்லை என சொல்ல தோன்றாது. எனவே எடிட்டர் சதீஷ் சூர்யாவுக்கும் சபாஷ் போடலாம்.

இறுதிச் சுற்றி படத்தில் நம்மை ஈர்த்த இயக்குனர் சுதா கொங்கரா இதிலும் அதை தக்க வைத்துள்ளார்.

என்னதான் படத்தை ஆன்லைனில் பார்த்தாலும் எதையும் பார்வேட் செய்ய தோன்றவில்லை. அப்படியொரு திரைக்கதை அமைத்துள்ளார் சுதா.

பொதுவாக உண்மை கதைகளை எடுக்கும்போது அது ஒரு டாக்குமெண்ட்ரி படங்கள் போல இருக்கும். ஆனால் இதில் தேவையான கமர்சியலை கலந்து அதை சுவையாக தந்திருக்கிறார் சுதா.

சில காட்சிகளை பார்த்தால் ஒரு நடுத்தர குடும்பம் எப்படி கோடிகளில் புரளும் ஒரு விமான நிறுவனத்தை ஆரம்பிக்க முடியும்? என்ற கேள்வி எழலாம். ஆனால் இது நிஜக்கதையை தான் படமாக்கியிருக்கிறார்கள். எனவே அந்த சந்தேகம் வேண்டாம்.

இந்த படம் தியேட்டரில் வெளியானால் சூர்யா ரசிகர்கள் தீபாவளியை இன்னும் சிறப்பாக கொண்டாடியிருப்பார்கள்.

தற்போது ஆன்லைனில் ரிலீஸ் செய்து அனைத்து தரப்பு மக்களையும் குடும்பத்துடன் போற்ற செய்துவிட்டார் தயாரிப்பாளர் சூர்யா.
ஆக.. சூப்பர் சூர்யா சுதா.. அபாரம் அபர்ணா என சொல்லாம்.

SOORARAI POTTRU FILMI STREET RATING 4.25/5

Soorarai Pottru Review rating

Related Articles