FIRST ON NET ஜாதி-மத அரசியலுக்கு நோ என்ட்ரீ…; ருத்ர தாண்டவம் விமர்சனம் 3/5

FIRST ON NET ஜாதி-மத அரசியலுக்கு நோ என்ட்ரீ…; ருத்ர தாண்டவம் விமர்சனம் 3/5

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் மற்றும் நாயகன் ரிச்சர்ட் மீண்டும் இணைந்துள்ள படம் ருத்ர தாண்டவம்.

இந்த படத்தை ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கிறார்.

கதையின் நாயகனாக ரிஷி ரிச்சர்ட் நடிக்க அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ராதாரவி, கௌதம் மேனன், தம்பி ராமையா, ஜேஎஸ்கே கோபி, மனோபாலா, தீபா அக்கா, மாரிமுத்து, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஃபாருக் என்பவர் ஒளிப்பதிவு செய்ய ஜுபின் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தியேட்டர்களில் படம் ரிலீசாகிறது.

கதைக்களம்…

ருத்ர பிரபாகரன் காவல்துறை அதிகாரி. நேர்மையானவர். பொறுமையானவர். கைதிகளிடம் கூட கனிவாக நடந்துக் கொள்ளும் நல்ல போலீஸ்காரன்.

மாணவர்களிடம் போதை பொருட்கள் விற்கும் 18 வயது இளைஞர்களை ஒரு முறை கையும் களவுமாக பிடிக்கிறார். அவர்கள் பைக்கில் தப்பித்துச் செல்ல அவர்களை துரத்துகிறார்.

அப்போது எதிர்பாராவிதமாக அவர்களை எட்டி உதைத்து பிடிக்க முயலும்போது இருவரும் கீழே விழுந்து விடுகின்றனர்.

அதில் இரு இளைஞன் சில நாட்களில் மரணமடைகிறார். இதனால் ருத்ரனின் வேலைக்கு பிரச்சினை ஏற்படுகிறது. மேலும் அந்த இளைஞன் தலித் இளைஞன் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சினையை வேறு ரூட்டில் திருப்பிவிட ருத்ரன் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்.

அதன்பிறகு என்ன ஆனது? ருத்ரன் மீண்டும் பணியில் சேர்ந்தாரா? வழக்கில் எப்படி ஜெயித்தார்? இளைஞரின் மரணத்தின் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ருத்ர பிரபாகரனாக ரிச்சர்ட் நடித்துள்ளார். ஆ… ஊ என கத்தி கத்தி சண்டை போட்டுக் கொண்டோ இல்லை பன்ச் டயலாக் பேசியோ போலீஸ் ஆக தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை. கொடுத்த வேலையை சிறப்பாக கச்சிதமாக யதார்த்தமாக செய்துள்ளார் ரிச்சர்ட்.

வேலை போன பிறகு சோகமாக இருந்தால் ஓகே. அதற்கும் முன்பும் சோகமயமாகவே இருக்கிறார். காரணம் என்ன ரிச்சர்ட்?

ரிச்சர்ட்டுக்கும் நாயகி தர்ஷா குப்தாவுக்கும் பெரிதாக கெமிஸ்ட்ரி இல்லை. ஒருவேளை மிடுக்கான போலீஸ் என்பதால் அதை குறைத்துவிட்டாரோ?

அழகான பாசமான மனைவியாக வந்து செல்கிறார் தர்ஷா குப்தா.

உயர் அதிகாரியாக ஜேஎஸ்கே கோபி. இவரும் யதார்த்த போலீசாக நடித்துள்ளார். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தன் துறை அதிகாரிக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை சொல்லும் விதம் அருமை. நிறைய படங்களில் இனி இவருக்கு வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

வக்கீல் இந்திரசேனாவாக ராதாரவி. கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். நாம் வாழ்க்கையில் சந்திக்கும் வக்கீல் போல சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்றொரு வக்கீலாக மாரிமுத்து. இவர் நியாயம் எது என்பதை பாராமல் காசுக்கு வேலை செய்யும் வக்கீலை காட்டியிருக்கிறார்.

போலீஸ் ரைட்டராக தம்பி ராமையா. நீண்ட நாளைக்கு பிறகு இவருக்கு பொறுப்பான வேடம். மனிதர் குறை வைக்காமல் நடிப்பை வழங்கியுள்ளார்.

வில்லனாக கௌதம் மேனன். ஓவராக கத்தி மிரட்டி வில்லத்தனம் செய்யாமல் தேவைக்கு ஏற்ப கெஞ்சியும் மிரட்டியும் சாதிக்கும் வில்லனிசம் செம.

போதை பொருள் விற்கும் இளைஞனாக பெரிய காக்கா முட்டை நடித்துள்ளார். இவரும் இவரது நண்பரும் தங்கள் கேரக்டரில் கச்சிதம். தீபா அக்கா, ஒய்ஜி

மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ் ஆகிய அனைவரும் தங்கள் கேரக்டர்களில் சிறப்பு. அம்பானி சங்கர் உள்ளிட்ட சில கலைஞர்களுக்கு வேலையே இல்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாரூக் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு இதம். ஹீரோ அண்ட் வில்லன் சந்திக்கும் காட்சியை பல ஆங்கிளில் காட்டியிருக்கலாம். ஒரே ஆங்கிள் ஷாட் போரடிக்கிறது. அந்த காட்சியில் இசை கூட பெரிதாக கவரவில்லை.

ஜுபின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. சலீம் படத்தில் வரும் பின்னணி இசை போல சில இடங்களில் உள்ளதை இசையமைப்பாளர் கவனித்திருக்கலாம்.

இந்த படத்திற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை.. இத்தனை தடை.. இவ்வளவு மிரட்டல்… பில்டப் தேவையா? எனத் தெரியவில்லை.
ஒரு போலீஸ்க்கு வழக்கமாக ஏற்படும் பிரச்சினை தான் முதல் பாதி. இரண்டாம் பாதியில் அதை அரசியல் சாயம் பூசிபவர்களுக்கு சவுக்கடி கொடுத்துள்ளார்.

தான் சொல்ல வந்த விஷயத்தை கொஞ்சம் விரைவாக சொல்லியிருக்கலாம் இயக்குனர் மோகன். நிறைய காட்சிகளுக்கு கத்திரியும் போட்டு இருக்கலாம். படத்தின் நீளம் பொறுமையை சோதிக்கிறது.

மதமாற்றம் மற்றும் போதை பொருள் கலாச்சாரத்திற்கு சாட்டையடி கொடுத்துள்ளார். ஒருவர் மதம் மாறிய பின்னர் அவர் இருந்த முந்தைய ஜாதி இனி செல்லாது என்பதை அரசியல் நுனுக்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

ஆக இந்த ருத்ர தாண்டவம்… ஜாதி மத அரசியலுக்கு நோ என்ட்ரீ

Related Articles