கதைக்களம்…
கீர்த்தி சுரேஷின் பெயர் ரிதம்.
இவருக்கும் லிங்காவுக்கும் திருமணம் நடக்கிறது. இவர்களுக்கு அஜய் என்ற 2 வயது குழந்தை இருக்கிறது. ஒரு நாள் காணாமல் போகிறான் அஜய்.
உன் அலட்சியத்தால் பொறுப்பின்மையால் அஜய் தொலைந்துவிட்டான். இனி உன்னோட வாழ முடியாது என லிங்கா கீர்த்தியை பிரிந்து விடுகிறார்.
கிட்டதட்ட 5 வருடங்களாக தன் மகனை தேடுவதையே வேலையாக வைத்திருக்கிறார் கீர்த்தி. இவரின் நிலையறிந்து இவரை திருமணம் செய்கிறார் கௌதம் (மாதம்பட்டி ரங்கராஜ்).
ஒரு வருடத்தில் நிறைமாத கர்ப்பிணியாகிறார் கீர்த்தி.
அப்போது காணாமல் போன அஜய் கிடைக்கிறார். ஆனால் குழந்தை எதையும் பேசாமல் அதிர்ச்சிலேயே இருக்கிறான்.
எந்த மருத்துவம் பார்த்தும் பலனில்லை. அப்போது அஜய்க்காக முதல் கணவர் கீர்த்தியின் வாழ்க்கையில் வருகிறார்.
அதன் பிறகு என்ன ஆனது? அஜய்யை கடத்தியவர் யார்? இந்த 6 வருடங்களில் அவனுக்கு என்ன நடந்தது? எங்கிருந்தான்..? குழந்தை கடத்தப்பட என்ன காரணம்? என கர்ப்பிணியாக இருந்து கண்டுபிடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
கேரக்டர்கள்…
படத்தில் ஹீரோ ஹீரோயின் எல்லாம் கீர்த்தி தான். மகா நடிகை படத்தில் அப்படியொரு நடிப்பை கொடுத்திருந்தார். இதில் அதில் பாதியளவு கூட இல்லை.
மகனை தேடி பிடிக்கும் அந்த இடைவேளை காட்சியில் மட்டும் கொஞ்சம் ஓகே.
ஆனால் படம் முழுக்க முகத்தில் கொஞ்சம் கூட ப்ரெஷ்னஸ் இல்லை. ஹிந்தி சினிமாவுக்கு போகிறேன் என தன் முகபொழிவை கெடுத்து விட்டார் போல. (ப்ளாஷ்பேக்கில் கூட அழகாய் இல்லையே கீர்த்தி..?
இனி ரஜினி முருகன் கீர்த்தியை பார்க்கவே முடியாதா?
கீர்த்திக்கு அடுத்தபடியாக குழந்தை அத்வைத்தை பாராட்டலாம். அழகான அமைதியாக முகம். அவன் என்ன செய்வான்? என்ற எதிர்பார்ப்பை ஏற்றிக் கொண்டே இருக்கிறான்.
ஆனால் அவன் திடீரென க்ளைமாக்சில் பேசுவது நம்ப முடியவில்லை.
கீர்த்தியின் முதல் கணவர் லிங்கா… 2வது கணவர் மாதம்பட்டி ரங்கராஜ்.. லிங்கா கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார்.
மெகந்தி சர்க்கஸ் படத்தில் நல்ல நடிப்பை கொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் இதில் ஏதோ அமெரிக்க மாப்பிள்ளை என்கிற அளவில் வந்து செல்கிறார்.
கீர்த்தியின் தோழிகள் இருவரும் அழகாக வருகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் கொடுக்கும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செம காமெடி. நாடகத்தனமாக உள்ளது.
டாக்டராக நடித்திருக்கும் மதியின் நடிப்பு மிரட்டல். ஆனால் போலீஸ் ஸ்டேசனில் டாக்டரும் கீர்த்தியும் நடத்தும் அந்த கேள்வி பதில் விளையாட்டு… முடியலடா சாமி…
போலீஸ் விசாரணை என்றால் போலீஸ்தான் அடித்து துவைத்து உண்மையை வர வைப்பார்கள். ஆனால் இங்கு கீர்த்தியே விசாரணை செய்கிறார். என்ன கொடுமை சார்? இது..
தொழில்நுட்ப கலைஞர்கள்..
படத்தை சாரி.. சாரி.. இந்த சீரியலை பார்க்க முக்கிய காரணமாக இருந்தவர் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி தான். மலைபிரதேச காட்சிகளை அழகாய் படம் பிடித்திருக்கிறார். அப்படியே கீர்த்தியை அழகாய் படம் பிடித்திருக்கலாம்.
இசையமைத்துள்ளவர் சந்தோஷ் நாராயணன்… பாடல் இல்லை என்பது ஆறுதல். பின்னணி இசை சில இடங்களில் மட்டும் ஓகே.
படத்தை இயக்கியிருக்கிறார் ஈஸ்வர் கார்த்தி. ஒரு தாய்மையின் உணர்வை படம் பிடிக்க முயற்சித்துள்ளார்.
6 வருடங்களாக தன் குழந்தையை தேடி அலைகிறார் ஒரு தாய். குழந்தை கிடைத்த அந்த நாளிலேயே குழந்தையை தனி அறையில் படுக்க வைக்கிறார். இவர் கணவருடன் வேறு அறையில் படுத்துக் கொள்கிறார். எந்த அம்மா இப்படி செய்வார்?
ஏற்கெனவே தன் மகனை தொலைத்து விட்டு தவிக்கிறார் கீர்த்தி. ஆனால் அவர் கணவர் அவரை எப்போதுமே தனியாகவே விட்டு விடுகிறார். வீட்டில் கூட குழந்தை பாட்டு கேட்டு இவரே செல்கிறார். கணவரை அனுப்ப மாட்டாரா?
கர்ப்பிணியாக இருக்கும் கீர்த்தியே எல்லாவற்றையும் கண்டுபிடிப்பது எல்லாம் ரொம்ப ஓவர். அவருக்கு அவர் வளர்க்கும் நாய் கொஞ்சம் உதவுகிறது.
முதல் பாதி ஆமை வேகம் என்றால் 2ஆம் பாதி சொதப்பல் க்ளைமாக்ஸ்.
இனி சீரியல் டைப் படங்களை தயாரிக்க கார்த்திக் சுப்பராஜ் முடிவெடுத்துவிட்டாரா? என தெரியவில்லை.
ஆக.. பெண்குயின்.. லாக்டவுன் சீரியல்
Penguin review rating