நில்… டேனி… செல்…; டேனி திரை விமர்சனம்

நில்… டேனி… செல்…; டேனி திரை விமர்சனம்

கதைக்களம்…

தஞ்சாவூர் மாவட்ட ஒரு கிராமத்தில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்படுகிறார்.

சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை வைத்து அவளது கணவர்தான் கொலையாளி என முடிவு செய்து அவரை கைது செய்கிறார் சப் இன்ஸ்பெக்டர் துரை சுதாகர்.

அப்போது தான் அங்கு இன்ஸ்பெக்டராக பதவி ஏற்கிறார் வரலட்சுமி.

இந்த வழக்கில் அவளது கணவர் கொலையாளி இல்லை என கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

அப்படி என்றால் அந்த கொலையை செய்தது யார்? எதற்காக? ஏன்? என போலீஸ் நாய் டேனியுடன் இணைந்து கண்டு பிடிக்கிறார் வரலட்சுமி.

குற்றவாளியை டேனி எப்படி காட்டி கொடுத்தது.? கொலைக்கான காரணம் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

காவலர்களுக்கே உரித்தான கம்பீரம்… அத்துடன் கண்களில் திமிர் என கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி.

இவரின் அறிமுக காட்சி கொஞ்சம் எதிர்பாராத ஒன்றுதான். விவசாய நிலத்தில் வேலை செய்கிறார். அதையும் ஒரு துப்பறியும் காட்சியில் (கார் டயர் பற்றிய கணிப்பு) வைத்துள்ள இயக்குனரை பாராட்டலாம்.

என்ன ஒன்று…. வரலட்சுமிக்கு காதல் காட்சிகள் வைத்திருக்கலாம். ஒரேடியாக சீரியஸ் சப்ஜெட்ட்டாக இருக்கிறது. மேலும் வரலட்சுமி பாஸ்ட்டாக பேசுவதால் சில டயலாக்குகள் சரியாக டெலிவரியாகவில்லை.

களவாணி 2 படத்தில் வில்லனாக கலக்கியவர் துரை சுதாகர். இதில் வரலட்சுமிக்கு அடுத்தப்படியாக யாருப்பா இந்தாளு? என கேட்க வைக்கிறார்.

இவர் கொலைக்கான விசாரணை செய்யும்போது நிஜ போலீசை காட்டுகிறது. அதாவது கேசை முடித்தால் போதும் என இவர் காட்டும் ஆர்வம் சில போலி போலீஸை காட்டுகிறது.

அதுபோல் யோவ்.. போயா வாயா என மக்களை திட்டும்போது அப்படி பிரதிபலிக்கிறார். ஒரு வேளை இவர் காவல்துறையில் கறுப்பு ஆடு ஆக இருப்பாரோ? எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நாயின் டிரைனர் ஆக கவின் நடித்துள்ளார். கொடுத்த வேலைக்கு பொருத்தம்.

டிவியில் கலக்கி கொண்டிருக்கும் அனிதா சம்பத் அவர்கள் வரலட்சுமியின் தங்கையாக நடித்துள்ளார். இவரின் முடிவு எதிர்பாராத ஒன்றுதான். அழகில் கவர்ந்தாலும் முகத்தில் ஓவர் மேக்அப்பை குறைத்திருக்கலாம்.

வில்லனாக வினோத் கிஷன். போதை அடிமைக்கு ஏற்ற முகம். அதே சமயத்தில் மிரட்டலான பார்வை என நம்மை கவர்கிறார்.
நல்ல நடிகர் வேல ராமமூர்த்தி. ஆனால் அவரின் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் சொன்னீங்க.. நாய் டேனியை பத்தி சொல்லையே கேட்குறீங்களா..?

நாய்க்கு ஓவர் பில்டப் கொடுத்துள்ளனர். அது குரைக்கும்போது எச்சில் தெறிப்பது வரை காட்டியுள்ளனர். அந்தளவுக்கு ஒளிப்பதிவு உள்ளது. ஆனால் பில்டப் அளவுக்கு இன்வஸ்டிகேஷன் அந்தளவுக்கு இல்லை.

கதையின் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். பாடல் காமெடி என கொடுத்து பட சோர்வை தவிர்த்திருக்கலாம்.

ஆனந்த்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாய் பாஸ்கரின் பின்னனி இசை பலவீனம்.

நல்லவேளை படத்தை ஒன்றரை நேரத்தில் முடித்துவிட்டார் எடிட்டர். அதனால் தப்பித்து விட்டோம் என்று சொல்லி கொள்ளலாம்.

எல்.சி. சந்தானமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். ஹீரோயின்.. நாய்.. வில்லன் என கேரக்டர்களில் கவனம் செலுத்தியவர் த்ரில்லர் கதையில் ட்விஸ்ட் வைத்திருக்கலாம். யூகிக்க முடிகிறது என்பதால் சுவராஸ்யம் போதவில்லை.

ஆனால் பிள்ளைகளுக்கு அடிக்கடி பணம் கொடுத்து ஓவர் செல்லம் கொடுத்தால் அவர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் திசை மாறிச் செல்லும் என்பதையும் தீயவர்களின் நட்பு அவர்களை கெடுத்துவிடும் என்பதை அழகாக காட்டியுள்ள இயக்குனரை பாராட்டலாம்.

ஆக… நில்…. டேனி… செல்… அதுதான் இந்த டேனி

Danny movie review

Comments are closed.