ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது செய்வேன்..; பிரஸ்மீட்டில் சந்தானம் போட்ட சரவெடி

Parris Jeyaraj‘ஏ 1′ படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது.

இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.

இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது,…

“தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம்.

ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார் தான் காரணம். எங்கு செலவு செய்ய வேண்டும், எங்கு கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.

ஏ 1 படமே ஜாலியாக பண்ண வேண்டும் என்ற மூடில் தான் இயக்குநர் ஜான்சனுடன் பணிபுரிந்தேன். அந்தப் படம் ஹிட்டானது. அடுத்து என்ன என்று நிறைய கதைகள் யோசித்தோம். அடுத்து நம்மளிடம் காமெடியைத் தான் எதிர்பார்ப்பார்கள் என்று இயக்குநர் ஜான்சனிடம் பேசி இந்தக் கதையை முடிவு செய்தோம்.

இது ரொம்ப தனித்துவமான கதை. காமெடி அருமையாக வந்திருக்கிறது. எனக்காக அவருடைய அணியுடன் உட்கார்ந்து காமெடிக்காக உழைத்துள்ளார் இயக்குநர் ஜான்சன்.

நிறைய விஷயங்கள் எழுதி எழுதி இந்தப் படத்தின் வசனங்களை இறுதிச் செய்தார். ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் பார்ப்பதற்கு தான் அமைதியாக இருப்பார். அவரோடு இப்போது தான் முதலில் பணிபுரிகிறேன்.

சம்சா பாடலை முழுக்க பேருந்துக்குள்ளே எடுத்துள்ளோம். சாண்டி தான் இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.

அந்தப் பாடலுக்கு ஆர்தர் வில்சன் சாருடைய உழைப்பு மிகவும் அபாரமானது.

குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் அருமையான ஓளிப்பதிவு செய்துக் கொடுத்துள்ளார், அதற்கு மிகப்பெரிய நன்றி.

இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சார் தான். ஏ 1 படம் ஹிட்டு அவரும் ஒரு முக்கியமான காரணம். இந்தப் படத்தில் அனைத்துமே கானா பாடல்கள் தான். ரொம்பவே ரசித்து இசையமைத்தார்.

அவருடைய உழைப்புக்கு மிகப்பெரிய நன்றி. கலை இயக்குநர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை வாங்கி வெளியிடும் பிரபு திலக் சாருக்கு நன்றி. நல்ல படத்தை வாங்கியுள்ளீர்கள், கண்டிப்பாக மக்கள் ரொம்பவே ரசிப்பார்கள்.

லோக்கலாக கானா பாடிக் கொண்டிருக்கும் ஒருவர் என்று கேரக்டர் பிக்ஸ் பண்ணிட்டோம். அப்போது வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாரிஸ் உள்ளிட்ட ஏரியாக்கள் தான் கானா பாட்டுக்கள் மிகவும் பிரபலம்.

அங்கு தான் ஹீரோ வீடு என்று முடிவு செய்தோம். அப்போது தான் பாரிஸ் ஜெயராஜ் என்று ரைமிங்காக நல்லாயிருக்கு என்று தலைப்பு வைத்தோம். கானா பாடகரைச் சுற்றியே கதை என்பதால், அந்தப் பாடல்களுடன் அமைத்தால் மட்டுமே நம்பகத்தன்மை இருக்கும்.

கானா பாட்டு பாடுபவர் கவிதை நடையுடன் பாடினால் அந்தக் கதாபாத்திரம் ஒட்டாது என்பது தான் காரணம். கானா என்பதே காக்டெய்ல் மாதிரி தான். அனைத்து மொழி வார்த்தைகளும் மிக்ஸ் செய்தது தான். அதற்கு தமிழில் அர்த்தம் சொல்ல முடியாது.

மக்கள் மத்தியில் ஒரு கூட்டணி ஹிட்டாகிவிட்டால், அடுத்து படம் பண்ணும் போது எளிதாக இருக்கும். அதனால் தான் ஏ 1 படத்தில் நடித்த மொட்டை ராஜேந்திரன், மாறன், தங்கதுரை, சேசு உள்ளிட்டோரை இந்தப் படத்திலும் உபயோகப்படுத்தி உள்ளோம். இன்றைக்கு மொட்டை ராஜேந்திரன் ரொம்ப அருமையாக காமெடி பண்ணிட்டு இருக்கார்.

உதயநிதி சார் அரசியலுக்கு போய்விட்டார் என்பதால், நீங்கள் எப்போது என்று கேட்கிறார்கள்.

ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் ஏதாவது பண்ணலாம் என்று இருக்கிறேன்.

போன முறையும் இந்த மாதிரி அரசியல் கேள்வியைக் கேட்டு சிக்கலாக்கி விட்டார்கள். பாஜகவில் சேரப் போகிறீர்களா ? என்று தான் பலரும் தொலைபேசியில் கேட்டார்கள்.

உதயநிதி சாருடன் இணைந்து காமெடி கேரக்டரில் நடித்தேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் பண்ணினேன்.

இப்போதும் படம் மட்டும் தான் பண்ணுவேன். சில ஆக்‌ஷன் படங்களில் நடித்தால், ஏன் ஆக்‌ஷன் படம் காமெடி படம் பண்ணுங்கள் என்கிறீர்கள். காமெடி படம் செய்தால் ஏன் ஆக்‌ஷன் படம் பண்ணுவதில்லை என்கிறார்கள்.

இப்படி பல பேர் குழப்புவதால் தான் சில சமயங்களில் அடுத்து ஆக்‌ஷன் படம் பண்ணலாமா? என்று யோசிப்பதுண்டு. மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன். அதை சரியாக செய்வோம்” என்று பேசினார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது,….

“ஏ1 படம் பண்ணும் போது இயக்குநர் ஜான்சனிடம் ஒரு விஷயத்தை கவனித்தேன். நாம் வடசென்னை திரையில் ஒரு விதமாக பார்த்துள்ளோம். வெகு சில இயக்குநர்கள் அதை ரொம்ப ஜாலியாக காட்டியுள்ளனர்.

அதில் ஜான்சன் மிக முக்கியமானவர். ஜாதிகளை கடந்து காதல், மதங்களை கடந்து நட்பு உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறார். அதனால் தான் ஜான்சன் ஒரு ஸ்பெஷல் நண்பர். பாரிஸ் ஜெயராஜ் மூலம் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.

இந்த ஆல்பம் முழுக்கவே கானா பாடல்கள் தான். நம்மளுடைய நாட்டுப்புற இசை கானா தான். சுமார் 300 ஆண்டுகளாக அதைக் கொண்டாடியிருக்கிறோம். நம்முடைய பாரம்பரிய இசையை சினிமாவில் கொண்டு வர முடிந்தால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை.

இந்தப் படத்தின் காட்சிகளுக்கு பின்னணி இசை அமைக்க தாமதம் ஆனது. ஏனென்றால், காட்சிகளைப் பார்த்து சிரித்துவிடுவேன். ஆகையால் ரொம்ப தாமதமானது. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்று பேசினார்.

Santhanam speech at Parrys Jeyaraj press meet

Overall Rating : Not available

Related News

Latest Post