தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

தேனாக கொட்டிய பாசம்.. தேள் விமர்சனம் 3.5/5

ஒன்லைன்…

பொதுவாக ஒரு படத்தை காப்பியடிப்பவர்கள்… கதையை திருடுபவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இது கொரிய மொழிப்படம் ஒன்றின் தழுவல் என சொல்லி படத்தை தொடங்கிய இயக்குநர் ஹரிகுமாருக்கு பாராட்டுக்கள்..

கதைக்களம்..

கோயம்பேடு சந்தையில் காய்கறி வியாபாரத்தை விட கந்து வட்டி பிசினஸ் கனஜோர். இந்த கும்பலிடம் வேலை செய்கிறார் பிரபுதேவா. இவரது பேச்சு குறைவு செயல் அதிகம்.

அதாவது பணம் தராமல் இழுத்தடிக்கும் பேரிடம் பணத்தை வாங்கி வருவதற்கு பதிலாக உயிரையே வாங்கி வரும் பலே கில்லாடி. இதனால் பிரபுதேவாவுக்கும் எதிரிகள் உண்டு.

இவருக்கு யாரும் இல்லை என்பதால் தனியாக வாழ்கிறார். இவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏரியா டான்சர் சம்யுக்தா ஹேக்டே. நாயகியின் ப்ரோ யோகிபாபு.

ஒரு கட்டத்தில் நான்தான் உன் அம்மா என சொல்லி வருகிறார் ஈஸ்வரி ராவ். முதலில் ஏற்க மறுக்கிறார் பிரவுதேவா. 15 வயதில் என்னை ஒருத்தன் கெடுத்துவிட்டான். விவரம் தெரியாத வயதில் உன்னை அனாதையாக்கி சென்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடு என்கிறார்.

பின்னர் மனம் மாறி அம்மாவை ஏற்கிறார். புதிதாக கிடைத்த தாய் பாசத்தால்  கந்து வட்டி வசூலிக்க செல்ல மறுத்து அம்மாவுடன் வாழ்கிறார்.

பிரபுதேவா இல்லாமல் பணம் சரியாக வசூலாகவில்லை என்பதால் கும்பலின் கோபத்துக்கு ஆளாகிறார்.

அதன்பின்னர் என்னானது..? பிரபுதேவாவை அந்த கும்பல் என்ன செய்தது? அம்மா மகன் பாசம் நீடித்ததா..? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

டான்ஸ் இல்லாத படத்தில் டான்சர் பிரபுதேவா என்பதே ஆச்சரியமான விஷயம்தான். தனிமையில் வாழ்வதும் பின்னர் அம்மாவின் பாசத்துக்காக ஏங்குவதும் என உணர்ந்து நடித்துள்ளார்.

க்ளைமாக்ஸ் முடிவு எந்த ஹீரோவும் செய்ய தயங்கும் கேரக்டர். இதற்காகவே பிரபுதேவாவை நிச்சயம் பாராட்டலாம்.

யோகிபாபுவின் ஒன்லைன் காமெடிகள் பெரிதாக எடுபடவில்லை. பிரபுதேவா செய்யாத நடனத்தை சம்யுக்தா செய்து அசத்தியிருக்கிறார். நாயகனை சுற்றி சுற்றி காதலிக்கும் வழக்கமான நாயகி வேடம். ஆனால் கிளாமர் காட்டி இந்த குளிர் சீசனில் கொஞ்சம் சூடேற்றிவிட்டார்.

ஈஸ்வரி ராவ் கேரக்டர் எதிர்பாராத ஒன்று. காலா படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மகனிடம் கெஞ்சும் காட்சிகளில் நம்மை அழ வைக்கிறார். ஆனால் சில சீன்களில் நரைத்த முடியுடன் வருகிறார். மற்ற காட்சிகளில் கறுப்பு தலைமுடி.

ப்ளாஷ்பேக்கில் மாரிமுத்து.. கந்து வட்டி மற்றொரு தலைவனாக அர்ஜெய். இவர்களின் காட்சிகள் குறைவு.

டெக்னிஷியன்கள்…

சி.சத்யாவின் இசையில் தாய்ப் பாடல் உருக வைக்கிறது. என்னை பெத்த தேவதையே… என் தேவதையே என அம்மாவுக்கான பாடல் வரிகள் சூப்பர். பின்னணி இசையிலும் நல்ல தேர்ச்சி. விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு.

நிறைய படங்களில் நாயகனாக நடித்த ஹரிக்குமார் தான் இப்படத்தின் இயக்குனர். பிரபுதேவாவின் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

பொதுவாக தமிழ் படங்களில் நாயகன் ரவுடியாக இருந்தால் நாயகி வந்துதான் திருத்துவார். ஆனால் அம்மாவாக ஒரு கேரக்டர் (ஜெமினி படம் அப்படித்தான்) வந்து திருத்துவது சில படங்களில் உள்ள புதுமை.

அம்மா மகன் பாசம் இன்னும் நெருக்கமாக இருந்திருந்தால் நாமும் படத்துடன் ஒன்றிருந்திருக்கலாம். முதல்பாதியில் மெதுவாக கதை நகர்கிறது. ஆனால் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

Thael Movie review rating

Related Articles