சிரஞ்சீவி ராஜ்ஜியம்.; சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் (3.5/5)

சிரஞ்சீவி ராஜ்ஜியம்.; சைரா நரசிம்ம ரெட்டி விமர்சனம் (3.5/5)

நடிப்பு – சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி

இசை – அமித் திரிவேதி

இயக்கம் – சுரேந்தர் ரெட்டி

தயாரிப்பு – கொன்னிடலா புரொடக்ஷன் கம்பெனி

கதைக்களம்..

நம் இந்திய தேசம் என்பது பல மாநிலங்களை சேர்ந்த ஒன்று. இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் அந்தந்த மாநிலங்களில் பலரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரடினர்.

அதுபோல ஆந்திராவில் கொயில்குன்ட்லா என்ற பிரதேசத்தில் நொசாம் பாளையத்துக்காரராக இருந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டி, ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறுதான் இந்த படம்.

ரேநாடு என்றழைக்கப்படும் நாட்டிற்குள் 60 பாளையத்துக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்களது பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் அவர்களிடம் வரி வசூலித்தும், அவர்களின் செல்வங்களை அபகரிக்கின்றனர் ஆங்கிலேயர்கள்.

இந்த கொயில்குன்ட்லா என்ற பகுதியில் ஜான்சன் துரை என்பவன் அதிகாரம் செய்கிறான். அவனை கொன்று அந்த பகுதியில் விடுதலை வேட்கையை ஆரம்பிக்கிறார் நரசிம்ம ரெட்டி.

துரையைக் கொன்றதால் நரசிம்ம ரெட்டியைக் கொல்ல படையை அனுப்புகிறார் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னர்.

மற்றவர்கள் ஓடி ஒளிய நரசிம்ம ரெட்டி தனியாளாக நின்று அந்த அவர் அனுப்பிய 300 படை வீரர்களை ஓட விடுகிறார்.

அதன்பின் இவருடன் 60 பாளையத்துக்காரர்களும் ஒன்று சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கின்றனர்.

அதன்பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கலைஞர்கள்…

படம் முழுக்க சீறும் சிங்கமாக சினங் கொண்ட சிறுத்தையாக சிரஞ்சீவி வெளுத்து கட்டியிருக்கிறார். ரெட்டிக்கு உரித்தான கம்பீரம், பயப்படாத வீரம் என அந்த கேரக்டரை நம் கண் முன்னே கொடுத்துள்ளார்.

ஒரு காட்சியில் தண்ணீருகு அடியில் தலையை சீவும் காட்சி சூப்பர். இப்படி பல காட்சிகள் அனைவருக்கும் பிடித்த மாதிரி படமாக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்து நம் மனதில் நிறைகிறவர் சுதீப். நரசிம்ம ரெட்டியையே எதிர்க்கும் அக்கு ராஜுவாக பட்டைய கிளப்பியிருக்கிறார்.

நரசிம்ம ரெட்டியின் குரு கோசாயி வெங்கண்ணாவாக அமிதாப்பச்சன் நடித்துள்ளார். தன் அனுபவ நடிப்பால் நம்மை கவர்கிறார்.

நரசிம்ம ரெட்டியின் மனைவியாக நயன்தாரா (சித்தம்மா). காதலியாக தமன்னா. (அதாவது மணம் முடிக்காமலேயே மனைவியாக வாழும் லட்சுமி கேரக்டரில் தமன்னா.) இருவருக்குமே பெரிதாக காட்சிகள் இல்லை. மேக் அப் கூட சில காட்சிகளில் ஓவராக இருக்கிறது. ஆனால் நயன்தாராவை விட தமன்னா காட்சிகள் ஓகே.

படத்தின் ஆரம்பத்தில் வரும் அனுஷ்கா இறுதியிலும் வருகிறார் அவ்வளவுதான். வேற யாரு இருக்கா? அட ஆமா நம்ம விஜய்சேதுபதி இருக்காருல்ல.. இருக்காரு அவ்வளவுதான். சொல்ல ஒன்றுமில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

அமித் திரிவேதியின் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். பார்க்கலாம்.

டப்பிங் படம் என்பதால் பாடலை ரசிக்க முடியவில்லை.

ஜுலியஸ் பாக்கியம் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

ரத்தினவேலு ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக கொண்டு செல்கிறது. பிரம்மாண்டத்தின் தன் கேமரா வழியே காட்டியிருக்கிறார்.

இவரைப் போல கலை இயக்குனர் ராஜீவன் அமைத்துள்ள செட் ஒர்க்கும் சூப்பர். கமலக்கண்ணனின் விஷுவல் கண்களுக்கு விருந்து.

படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக உள்ளது. விஜய்சேதுபதி, அனுஷ்கா கேரக்டர்களை கூட வெட்டியிருக்கலாம் போல..

இயக்கம் பற்றிய அலசல்…

சிரஞ்சீவிக்கு நடிகர் அரவிந்த்சாமி டப்பிங் செய்துள்ளார். நடிகர் அமிதாப்பச்சனுக்கு நிழல்கள் ரவி டப்பிங் குரல் கொடுத்துள்ளார்.

படத்தின் ஹீரோ நரசிம்ம ரெட்டிதான். ஆனால் இவரைப் போல பல நட்சத்திரங்கள் இருந்தும் மற்றவர்களை டம்மியாக்கிவிட்டார்கள். அதுதான் கொடுமை. மேலும் தெலுங்கு ரசிகர்களை கவனத்தில் கொண்டு படத்தை கொடுத்துள்ளனர்.

இந்த படத்தை பாகுபலியுடன் ஒப்பிட கூடாது. ஆனால் பலரும் அதை தான் செய்வார்கள். ராஜமௌலி மெகா மௌலி. அவருடன் ஒப்பிடுவது சரியில்லை. மற்றபடி பிரம்மாண்ட கதையை கமர்சியல் மசாலா கலந்து சொல்லியுள்ளனர்.

வயசானாலும் சிரஞ்சீவியின் கம்பீரம் இன்னும் குறையவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். தமிழுக்கு கமல் போல தெலுங்குக்கு என்றும் சிரஞ்சீவிதான்.

ஆக.. சைரா நரசிம்ம ரெட்டி… சிரஞ்சீவி ராஜ்ஜியம்

Comments are closed.

Related News