எழுதப்பட்ட ரூபாய் நோட்டால் குழந்தை மரணம்.; ரூ 2000 விமர்சனம்

எழுதப்பட்ட ரூபாய் நோட்டால் குழந்தை மரணம்.; ரூ 2000 விமர்சனம்

ஒன்லைன்..
ரூபாய் நோட்டுக்களில் சிலர் எழுதிவிடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தான் கதை. இதனால் ஒருவர் தன் குழந்தையையே இழக்கிறார். அப்படி என்ன தான் நடந்தது.?

கதைக்களம்..

திருமணமாகி கிட்டத்தட்ட 20 வருடங்கனுக்கு பிறகு அப்புசாமி என்ற விவசாயிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறக்கிறது.

குழந்தைக்கு சுவாசத்தில் பிரச்சினை இருப்பதால் அவசரமாக ஒரு மருந்தை வாங்கி வரச்சொல்கிறார் டாக்டர். அரசு மருத்துவனையில் இல்லாத காரணத்தால் வெளியே இருந்து வாங்கி வரச்சொல்கிறார்.

எனவே அப்புசாமி தனியார் ஏடிஎம்’ல் பணம் எடுக்கிறார். அதில் 500 100 ரூபாய் நோட்டுக்கள் இல்லாத காரணத்தினால் ரூ 2000 நோட்டு மட்டுமே கிடைக்கிறது. அந்த ரூபாய் நோட்டில் பேனாவால் எழுதப்பட்டுள்ளது. அவரின் வங்கி கணக்கில் வேறு பணமும் அவரிடம் இல்லை.

அந்த நோட்டில் எழுதப்பட்டதால் மருந்து கடைகளில் இந்த நோட்டு செல்லாது எனக்கூறி மருந்தினை தர மறுக்கின்றனர். அவர் செல்போனை வைத்துக் கொண்டு மருந்து கொடுங்கள் என கூறினாலும் அவர்கள் வாங்க மறுக்கின்றனர்.

வேறு வழியில்லாமல் அருகில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்று அந்த 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக வேறு ரூபாய் கேட்கிறார். ஏடிஎம்களில் இதுபோல் நோட்டுக்கள் இருக்காது. நீங்கள் எங்கள் வங்கி வாடிக்கையாள்ர் கிடையாது என பல காரணங்களை கூறி மேனேஜர் வேறோரு நோட்டு தர மறுக்கிறார்.

இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை செல்கிறது. இதுபோன்ற கால தாமத்தால் சரியான நேரத்திற்கு மருந்து கிடைக்காமல் குழந்தை இறந்துவிடுகிறது.

20 வருடங்கள் காத்திருந்து பெற்ற குழந்தை இப்படி ரூபாய் நோட்டில் எழுதப்பட்டதாலும் வங்கி அதிகாரிகளின் அலட்சியத்தாலும் இறந்துவிட்டதே என ஆவேசப்படும் அப்புசாமி அவர்களுக்கு பாடம் புகட்ட புறப்படுகிறார்.

அப்போது அப்புசாமிக்கு உதவும் நோக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் இவரை சந்திக்கும் சமூக சேவை வழக்குரைஞர் பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்கிறார்.

குழந்தையின் மரணத்திற்கு காரணமே ஏடிஎம்’ல் இருந்து எடுக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுதான் என பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கிறார்.

இதில், தவறு செய்தவர்களை நீதிமன்றம் எப்படி தண்டித்தது.? தண்டிக்க சட்டத்தில் இடம் உண்டா.? வழக்கறிஞர் எப்படி வாதாடினார்? அரசு தரப்பு வக்கீல் இவரை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

உண்மையான கடமை தவறாத வழக்குரைஞராக வந்த பாரதி கிருஷ்ணகுமார் தான் படத்தின் கதையின் நாயகன் எல்லாம். இவர் மறந்து கூட ஆங்கில வார்த்தைகளை பேசவில்லை படத்தில். செல்போனை கூட அலைபேசி என்றே அழைக்கிறார்.

கோர்ட்டில் ஜட்ஜை கூப்பிடும் போது கூட அம்மா அம்மா என்றே அழைக்கிறார். இவர் அப்புசாமிக்காக வாதாடும் போது இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

ஒரு சாதாரண ரூ 2000 நோட்டுதானே.. அதில் எழுதியது குற்றமா? என நாம் நினைக்கலாம். ஆனால் இதில் எத்தனை விஷயங்கள் அடங்கியுள்ளது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா பணி என்ன? அதற்கு அரசுக்கும் என்ன சம்பந்தம்?

வங்கியின் வேலை என்ன? ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அதனை நிர்வகிக்கும் ஏஜெண்ட் எப்படி? அவர்களின் பணி என்ன? செக்யூரிட்டியின் பணி என்ன? என பக்கம் பக்கமாக பாடம் நடத்தியுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் இத்தனை அதிகாரிகள் உள்ளார்களா? அவர்களின் பணி என்ன? தீர்ப்புக்கு எதிராக இந்திய அரசே இதில் தலையீடுவது ஏன்-? அரசு தரப்பு வக்கீல் சாட்சிகளை மாற்றுவது எப்படி? போலீஸ் அதிகாரிகள் எப்படி பொய் சாட்சிகளை உருவாக்குகிறார்கள்? என ஜெய்பீம் படம் போல கண் முன் காட்டியுள்ளார்.

பாவப்பட்ட ஆசாமியாக அப்புசாமி. அவரும் ஒரு டிவியில் நிகழ்ச்சியில் பேசும்போது கவனிக்க வைக்கிறார்.

அரசு வழக்குரைஞராக நடித்துள்ள கராத்தே வெங்கடேஷ் என்பவரும் நம்மை கவனிக்க வைக்கிறார். இந்த சின்ன விஷயத்திற்காக ரூ 1 கோடி வரை அவர் லஞ்சம் கொடுக்க ரெடியாகிறார். அப்படி என்றால் இந்த 2000 நோட்டின் விவகாரத்தை நீங்களே படம் பார்த்து புரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரு கட்டத்தில் மருத்துவமனையில் மருந்து இல்லாத காரணத்தினால் தானே அந்த குழந்தை இறந்தது. அதற்கு ஏடிஎம் மற்றும் வங்கி பொறுப்பல்ல. அரசு மருத்துவமனையே பொறுப்பு என இவர் சொல்லும்போது அரசுக்கு எதிராக இவரே செயல்படுவாரோ? என வியப்பும் வருகிறது.

இப்படத்தின் நடுவே சாதி திருமணம்… ஆணவக் படுகொலை என்பதையும் காட்டியிருக்கிறார் இயக்குனர் ருத்ரன்.

இதனை காட்டியிருப்பதால் படம் வேறு ரூட்டில் சில நேரம் பயணிக்கிறது.

ஒரு நாட்டுக்கு தேவையான விழிப்புணர்வை சொல்ல வந்த இயக்குனர் ஒரு சீரியல் போல சொன்னதால் சோர்வை தருகிறது. மேலும் படத்தின் காட்சிகளில் நாடகத்தன்மை அதிகமாக உள்ளது.

படத்தின் முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை கோர்ட்டை மட்டுமே காட்டியிருப்பதுடன் அதில் சுவாரஸ்யம் கலந்து சொல்லியிருக்கலாம்.

இனியவனின் தன் இசையில் இன்னும் மெனக்கெட வேண்டும். பிரிமூஸ் தாஸின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் வைத்த கேமராவை அப்படியே வைத்தது போல உள்ளது. நிறைய காட்சிகளில் இதுவே எரிச்சலைத் தருகிறது.

நாம் அலட்சியமாக ரூபாய் எழுதுவதால் இத்தனை பிரச்சினைகளா? என வியக்க வைத்த இயக்குனர் ருத்ரனை பாராட்டலாம். இதற்காக ஒரு அரசாங்கமே இறங்கி வருவதும்.. உள்துறை அமைச்ச அதிகாரிகள் வரை பேரம் பேசுவதும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

ஆக.. 2000 படம் இந்தியர்களுக்கு சரியான பாடம்.

Rs 2000 movie review rating

Related Articles