தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பூமரக் காத்து திரை விமர்சனம்..: விதை
ஸ்டோரி…
பள்ளிப்பருவத்தில் நாயகனுக்கு காதல் வருகிறது.. ஆனால் நாயகியிடம் காதலை சொல்ல நினைக்கும் போது நாங்கள் எல்லாம் நண்பர்கள் எங்களுக்கு படிக்கும் வயதில் காதலும் கிடையாது கத்திரிக்காயும் கிடையாது என நாயகி சொல்கிறார்.
எனவே காதலை மறைத்து வாழ தொடங்குகிறார் நாயகன்.. இதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவரை மாமன் மகள் காதலிக்கிறார்.. ஆனால் அவரையும் காதலிக்காமல் தான் செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டில் ஜன்னல் ஓரம் எப்போதும் அமர்ந்திருக்கும் ஜெனி என்ற கிறிஸ்தவ பெண்ணை காதலிக்கிறார்.
இவரை சந்திக்க வரும்போது நாயகிக்கு விபத்து ஏற்பட்டு கால் ஊனமாகிறது.. இதனையடுத்து தன்னால்தான் அந்த பெண் ஊனமானார் என்பதை அறிந்து அவளையே திருமணம் செய்து நினைக்கிறார்.. இதனால் வீட்டில் எதிர்ப்புகிறது..
அதன் பிறகு நாயகன் என்ன செய்தார்? குடும்பத்திற்கு கட்டுப்பட்டாரா? ஊனமுற்ற பெண்ணை மணந்து கொண்டாரா? அவரின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
விதுஷ், சந்தோஷ் சரவணன், மனிஷா, மனோபாலா, தேவதர்ஷினி, சிங்கம் புலி, ஓ.எஸ்.மணி, முத்துக்காளை, போண்டாமணி, சிஸ்ஸர் மனோகர், குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி & பலர் நடித்துள்ளனர்..
மனோபாலா மற்றும் தேவதர்ஷினிக்கு ஒரு பிளாஷ் பேக் காதல் காட்சி இருக்கிறது.. இருவரும் பள்ளி மாணவர்களாக வருவது சகிக்க முடியாத கற்பனை.. (அட்லீஸ்ட் கல்லூரி காதல் போல காட்டி இருக்கலாம்..) அந்த காட்சிகளை வெட்டி எறிந்து படத்தின் நீளத்தை குறைத்து நம்மையும் காப்பாற்றி இருக்கலாம்.
நாயகன் நாயகி கஷ்டப்படும்போது நிச்சயம் அடுத்தவர் மனதும் கலங்கும்.. அதுவும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவர்கள் போராடும் காட்சி நெகிழ்ச்சி..
பள்ளி மாணவியாக நாயகி மனிஷா.. அழகும் திறமையும் நிறைந்த நடிகை ஆனால் சில காட்சிகளில் மட்டும் வந்து சென்று விடுகிறார்..
பள்ளி மாணவனாக சந்தோஷ் சரவணன்.. வளர்ந்த பிறகு விதுஸ்.. ஐடி வேலைக்கு பொருத்தமான இவரது முகம் மெக்கானிக் வேலையில் ஈடுபடும் போது பொருந்தவில்லை.. நடிப்பில் பாஸ் மார்க் பெற முயற்சித்திருக்கிறார்..
ஊனமுற்ற பெண்ணாக மீனா நடிப்பில் கலங்க வைக்கிறார்.. சிங்கம்புலி, முத்துக்காளை, சிசர் மனோகர், சூப்பர் குட் லட்சுமணன், ஜி.எஸ்.மணி, காதல் அருண், தேனி முருகன், தீப்பெட்டி கணேசன், விஜய் கணேஷ், போண்டாமணி, நேல்லை சிவா, செவ்வாழை உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே உள்ளது.. இருந்தும் பயனில்லை..
டெக்னீசியன்ஸ்…
ஜோவின் ஒளிப்பதிவும் அரவிந்த் ஸ்ரீராம் ஈஸ்வர் ஆனந்தின் இசையும் அருமை..
அரவிந்த் ஶ்ரீராம் மற்றும் ஈஸ்வர் ஆனந்த் ஆகியோரது இசையில், இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜாவின் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது.. டெக்னிக்கலாக இந்த படம் இன்னும் வலுப்பெற வேண்டும்..
ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கியராஜா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பூமர காத்து’.
ஞான ஆரோக்கியராஜா இந்தப் படத்தை இயக்கி முடித்து சென்சருக்கு அனுப்பும் சமயத்தில் அவர் கண் பார்வை இழந்து விட்டார்.. தற்போது இந்த படம் ரிலீசான பிறகு தான் பார்வை பெற கண் சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆங்காங்கே காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.. முக்கியமாக மைனர் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் புகை பிடிக்கும் நபர் பலர் இருக்கும் இடத்தில் புகை பிடிக்கக் கூடாது.. தன்னையும் கெடுத்து புகை புடிக்காத அடுத்தவரையும் கெடுக்க கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
இத்துடன் கிளைமாக்ஸ் காட்சியில்.. வறுமைக்கு எப்போதுமே தற்கொலை தீர்வாகாது.. தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்… நாம் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வரும்போது நாம் பெற்ற பிள்ளைகளை கொல்ல எந்த உரிமையும் கிடையாது என்ற கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார்..
இந்தப். பூமரக்காத்து தலைப்பு குறித்து கேட்டபோது.. மண்ணில் புதைந்து கிடக்கும் விதை எப்படியாவது ஒரு பெரிய மரமாக வளர்ந்து காய்கனிகள் நிழல் கொடுக்கும் அது போல நம்முடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஞான ஆரோக்கியராஜா.
Poomara Kaathu movie review





