தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மகாராஜா விமர்சனம் 4.5/5.. மகள் பாதம் பட்ட மண்ணில் மலர்ந்த நேசம்
ஸ்டோரி…
தேனப்பன் நடத்தும் ராம்கி சலூனில் வேலை செய்து வருகிறார் விஜய் சேதுபதி.. ஒரு அழகான குடும்பம் மகள் என வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில் வீடு இடிந்த விபத்தில் தன் மனைவியை இழக்கிறார்.. அப்போது தன் மகளைக் காப்பாற்றிய ஒரு குப்பை தொட்டியை எடுத்து லட்சுமி என்று பெயரிட்டு வணங்கி வருகிறார்.
மகள் வளர்ந்து பெரியவள் ஆனதும் மகள் ஜோதி பெயரில் சலூன் நடத்தி வருகிறார்.. இந்த சூழ்நிலையில் 10 நாட்கள் பள்ளி முகாமிற்காக தன் மகள் வெளியூர் செல்கிறார்..
அந்த சமயத்தில் வீட்டில் உள்ள லட்சுமி என்ற குப்பைத் தொட்டியை 3 திருடர்கள் எடுத்து செல்கின்றனர்.. எனவே காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார் விஜய் சேதுபதி.
ஆனால் இந்த புகாரை போலீஸ் நட்டி மற்றும் அருள்தாஸ் முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் ஏற்க மறுக்கின்றனர்… தன் குடும்ப உறுப்பினராக இருக்கும் அந்த குப்பைத் தொட்டியை கண்டுபிடித்தால் ஏழு லட்சம் வரை தர சம்மதிக்கிறார் விஜய்சேதுபதி.
எனவே காவல்துறை வேட்டையில் இறங்குகிறது.. 500 ரூபாய் கூட மதிப்பில்லாத குப்பைத்தொட்டிக்கு 7 லட்சம் வரை விஜய்சேதுபதி செலவழிப்பது ஏன்.? போலீசார் என்ன செய்தனர்? திருடர்கள் என்ன செய்தனர்? என்பதெல்லாம் மீதிக்கதை.!
கேரக்டர்ஸ்…
பொதுவாக நடிகர்கள் 50 வது படம் 100வது படம் என்றால் மாஸ் காட்டி நடிக்க வேண்டும் கமர்சியலாக இருக்க வேண்டும் என்ற விரும்புவார்கள். ஆனால் பாசமிக்க தந்தையாக.. மனிதநேய மக்கள் செல்வனாக.. சாந்தமான சவரத் தொழிலாளியாக தன் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி..
தன் மகள் செய்யாத குற்றத்திற்காக கல்லூரி நிர்வாகம் அவரை திட்டிய பின் மன்னிப்பு கேட்க சொல்லும் விஜய் சேதுபதியும் அந்த பிடிவாத காட்சியும் தியேட்டரையே அதிர வைக்கும்..
விஜய் சேதுபதியின் மகளாக நடித்தவரும் அருமை.. தன் தந்தையை திட்டுவது அவருக்கே பிடிக்கும் என்று சொல்லும் காட்சியில் செல்ல மகளாக ரசிக்க வைக்கிறார்.
பிடி பீரியட் தானே என அலட்சியம் காட்டும் ஆசிரியர்களுக்கு அதிரடி பதில் கொடுக்கிறார் PT Teacher மம்தா மோகன்.
பாலிவுட் வில்லன் அனுராக் காஷ்யாப் அதிரடியாக மிரட்டி இருக்கிறார். சாதாரண மொபைல் கடை நடத்தும் நபராகவும் ஒரு பக்கம் திருடனாகவும் அவர் போடும் நாடகம் செம வில்லத்தனம்..
வில்லன் அனுராக்கின் மனைவியாக அபிராமி.. நீண்ட நாட்களுக்குப் பிறகு அழவைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கொலைக்கார திருடனின் மனைவியா? என சொல்லும் வசனக்காட்சியில் குற்ற உணர்வை காட்டியிருக்கிறது..
நீண்ட நாட்களுக்குப் பிறகு பாய்ஸ் மணிகண்டன்.. அவரது கொடூர குணம் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.. காமெடி செய்து கொண்டிருந்த சிங்கம் புலி-யை இந்தப் படத்தில் வித்தியாசமாக நடிக்க வைத்திருக்கிறார்.. அவரைப் பார்த்தால் நீங்களே கடுப்பாகி திட்டுவீர்கள்.
வில்லனின் நண்பனாக வினோத் சாகர், போலீசாக திருடன் கல்கி உள்ளிட்டோரின் நடிப்பு கவனிக்க வைக்கிறது.
போலீஸ் நட்டி மற்றும் அருள்தாஸ்.. – கொஞ்சம் காமெடி.. கொஞ்சம் நேர்மை.. கொஞ்சம் பணத்தாசை.. கொஞ்சம் மனிதநேயத்தையும் காட்டியிருப்பது சிறப்பு..
டெக்னீசியன்ஸ்…
அனல் அரசு சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.. கற்பனைக்கு எட்டாத காட்சியை வைக்காமல் யதார்த்தமாக கையாண்டுள்ளது சிறப்பு..
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய பிலோமீன் ராஜ் எடிட்டிங் செய்திருக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் பெரிய அளவில் பேசப்படும்.. முக்கியமாக எடிட்டிங் வித்தியாசமாக கையாளப்பட்டுள்ளது.. திடீர் திடீரென நகரும் காட்சிகள் இடைவேளைக்குப் பின்பு அதற்கான விளக்கம் கொடுக்கும் ட்விஸ்ட் சூப்பர்..
கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுத அஜீனிஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். மகளுக்காக எழுதப்பட்ட பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசையில் அதிர வைத்துள்ளார் அஜீனிஷ் லோக்நாத்.
‘குரங்கு பொம்மை’ படத்தை தொடர்ந்து மகாராஜா படத்தை இயக்கி இருக்கிறார் நித்திலன்.. இவரது முதல் படத்திலேயே கிளைமாக்ஸ் அதிர வைத்திருக்கும்.. இந்த மகாராஜாவில் கிளைமாக்ஸ் காட்சி உங்களை கண்கலங்க வைக்கும்.. முக்கியமாக பாதம் பட்ட மண்ணில் ரத்தம் நிரம்பும் அந்த ஒரு காட்சியே போதும்..
அப்பா மகள் பாசத்தை காட்டும் இந்த மகாராஜாவில் ஏன் இத்தனை வன்முறை.. என்ற கேள்வி எழுகிறது.. ரத்தம் தெறிக்கும் அளவுக்கு தேவையா.?
காட்சிகளில் ஏகப்பட்ட திருப்புமுனைகள் இருப்பதால் படத்தை விவரிக்க முடியாது.. ஆனால் இடைவேளைக்கு பிறகு நகரம் ஒவ்வொரு காட்சிகளும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது..
ஆக இந்த மகாராஜா.. உங்கள் மனதை மயக்கும் ராஜா
Vijaysethupathis Maharaja review