பேய் இல்லாத பேய் மிரட்டல்… லிப்ட் விமர்சனம் 3.5/5

பேய் இல்லாத பேய் மிரட்டல்… லிப்ட் விமர்சனம் 3.5/5

கதைக்களம்..

ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடர் பதவிக்கு, பெங்களூருவிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி ஒரு ஐடியில் சேர்கிறார் கவின். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே கம்பெனி வி.பி. அவருக்கு ஓவர் டைம் ஒர்க் கொடுக்கிறார்.

இரவு 10 மணிக்கு தான் ஒர்க் முடிகிறது. கவின் மட்டும் தனியாக வேலையை முடித்து விட்டு செல்லும்போது லிப்ட்டில் செல்லும் போது ஒரு அமானுஷ்யம் நடக்கிறது. அந்த அலுவலகத்தை அவரை செல்ல விடாமல் அது தடுக்கிறது.

அவர் எப்படி எல்லாமும் முயன்றும் தப்ப முடியவில்லை. அதே நேரத்தில் மற்றொரு கேபினில் அம்ரிதாவும் மாட்டிக் கொள்கிறார். இருவரையும் அந்த அமானுஷ்யம் துரத்துகிறது.

இவர்களை துரத்த என்ன காரணம்? இவர்களை பேயாக துரத்துவது யார்? இவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்..

கவின் யதார்த்தமான நடிப்பில் நம்மை கவனிக்க வைக்கிறார். எனக்கு காதலிக்க நேரமில்லை என அவர் சொல்லும் போதெல்லாம் பெண்களின் மனம் பாடுபடும்.

அழகான மாடர்ன் மங்கையாக மனம் கவர்கிறார் அமிர்தா ஐயர். டேய்.. NEE GAY இல்லேல்ல.. பின்ன என்னை காதலிச்சா என்ன? என அமிர்தா கேட்கும் போது குறும்பு கலந்த நடிப்பில் மின்னுகிறார்.

முதலில் ஜாலியாக வந்தாலும் பின்னர் பயம், யதார்த்தம் என அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார் அம்ரிதா.

முழுப்படமே இவர்களை வைத்து மட்டுமே செல்கிறது. அதில் முதல் பாதியில் கொஞ்சம் ரொமான்ஸ் கொடுத்திருக்கலாம். இருவரின் பதட்டமே பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.

படத்தின் வில்லனாக பாலாஜி வேணுகோபால் மிகையில்லாத நடிப்பு. பிளாஷ்பேக்கில் கொஞ்ச நேரமே வரும் காதல் ஜோடிகளாக கிரண் கொன்டா, காயத்ரி ரெட்டி நடித்துள்ளனர். இவர்களையும் பாராட்டலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்..

படத்தில் ஒளிப்பதிவாளருக்கு அதிக வேலை. அதை பாராட்டும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா. ஒரு லிப்ட்டை கூட இனி கண்டால் பயம் வரும் வகையில் கொடுத்துள்ளர்.

ஒரு பேய் படத்திற்கு என்ன அவசியமோ அதை பின்னணி இசையில் மிரட்டலாக கொடுத்துள்ளார் பிரிட்டோ மைக்கேல்.

மதனின் எடிட்டிங்க் பக்கா “ஷார்ப்”.

இயக்குனர் வினித் வரபிரசாத் அவர்களை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். காரணம்.. இந்த பேய் படத்தில் அவர் பேயை காட்டவில்லை. பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவில் நம்மை பயமுறுத்தி விடுகிறார்.

இதுபோன்ற பேய் படங்கள் என்றாலே நாயகிக்கு மேக்அப் போட்டு தலையை விரித்து போட்டப்படி வருவார்கள். பேய் பங்களா இருக்கும். ஆனால் அந்த பார்முலாக்களை உடைத்து புதிய பேய் கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

முக்கியமாக பேய் படத்தில் ஐடி வேலையில் இருக்கும் தைரியமின்மையை கூறியிருக்கிறார். டார்கெட்… ஒர்க் பிரசர்… வேலையின்மை என பல உதாரணங்களை காட்டியிருக்கிறார். இதனால் பலர் தற்கொலை செய்துக் கொள்வதையும் ஒரு கருத்துக்காக பதிவு செய்துள்ளார்.

பல காட்சிகளில் ரசிகர்கள் சீட் நுனியில் இருப்பார்கள். ஆனால் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது. இது ஓடிடியில் ரிலீசாகி உள்ளது.

லிப்ட்டில் கவின் கையில் கத்தியை வைத்துக் கொண்டு ஆடும் அந்த கொலை ஆட்டம் பிரம்மிக்க வைக்கிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகியுள்ளது.

lift movie review

Related Articles