இவர் யாரென்று தெரிகிறதா..? குருப் விமர்சனம்

இவர் யாரென்று தெரிகிறதா..? குருப் விமர்சனம்

ஒன்லைன்… 1975-1980/களில் கேரளாவில் பேசப்பட்ட கொலை குற்றவாளியும், இந்தியளவில் போலீசாரால் இன்றளவிலும் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான குருப் என்பவரின் உண்மைச் சம்பவம்தான் இப்படக் கதை.

கதைக்களம்..

எப்படியாவது தன் மகனுக்கு நல்ல வழி காட்டிவிட வேண்டும் என துல்கர் சல்மானை அவரது பெற்றோர் இந்திய ராணுவ விமானப் படையில் சேர்த்து விடுகின்றனர்.

ஆனால் அவருக்கோ அதில் ஈடுபாடு இல்லை. அங்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார். பயிற்சியை சரியாக முடிக்காமல் அங்குள்ள சரக்குகளை ப்ளாக் மார்கெட்டில் விற்கிறார்.

மேலும் உடல்நிலை சரியில்லை என விடுமுறையில் செல்கிறார். அப்போது தான் அவர் ஊருக்கு சென்ற பின் தற்கொலை செய்து கொண்டார் என செய்தியை ராணுவ மையத்திற்கு தெரிவிக்கிறார்கள்.

ஆனால் உயிரோடு இருக்கும் அவர் பெர்ஃஷியா செல்கிறார். அங்கு பெரிய செல்வந்தராக மாறுகிறார். தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்கிறார். ஒரு கட்டத்தில் கேரளா வருகிறார்.

வெளிநாட்டில் தான் இன்சூரன்ஸ்க்கு கட்டிய பணத்தை உயிரோடு இருக்கும்போதே அனுபவிக்க நினைக்கிறார்.

அதற்காக தன் கூட்டாளிகளுடன் இணைந்து சட்டவிரோதமாக ஒரு திட்டம் தீட்டுகிறார்.

அந்த திட்டம் என்ன? சட்டவிரோதமாக என்ன செய்தார்? இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைத்ததா? இவர் செய்த தில்லு முல்லு என்ன? போலீசார் என்ன செய்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

குருப் ஆக துல்கர் சல்மான். 1970 80களில் கமல் ரஜினி படங்களில் அவர்களின் ஸ்டைலிஷ் உடைகள் மற்றும் அவர்களின் மேனரிசங்களை ரசித்திருப்போம்.

1980களின் கமல் ரஜினியை ஜெராக்ஸ் எடுத்துள்ளார் துல்கர் சல்மான். அந்த கேரக்டராக மாறியிருக்கிறார். அந்த காலத்து நடை, உடை, பாவனைகளை கொண்டு வந்துள்ளார்.

தாடியை மாற்றி மீசையை மாற்றி பல கெட்டப்புகளை போட்டு அசத்தலாக இருக்கிறார். ஆனால் ஒரு குற்றவாளி தன்னை மாற்றிக் காட்ட வேண்டுமென்றால் முடி அலங்காரம் மொட்டை என வரை மாற்றியிருக்க வேண்டாமா.? வெறும் மீசை தாடியை மட்டுமே மாற்றுகிறார்.

இவரின் காதல் மனைவியாக வரும் சோபிதா படம் முழுக்க சோகமயமாகவே வருகிறார். வேறு நாயகிகளே இல்லையா? முகத்தில் புத்துணர்ச்சியே இல்லை.

மற்றொரு நாயகி கேரக்டரில் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ஒரே காட்சியில் வந்து செல்கிறார். பாவம்.

நேர்மையான கம்பீரமான போலீசாக வரும் இந்திரஜித் திரைக்கதைக்கு நல்ல தேர்வு. படத்தின் கதையே இவரிடம் இருந்து ஆரம்பமாகி க்ளைமாக்ஸில் முடிகிறது. இவர் செய்யும் இன்ஸ்வெட்டிகேசன் ரசிக்கவும் வைக்கிறது.

துல்கரின் ப்ரெண்டாக வரும் ஷைன் டாம் சாக்கோ படத்தின் 2வது ஹீரோ என சொல்லலாம். மெகா குடிகாரனாக மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார். யாரூய்யா இந்த ஆளு என கண்டிப்பாக கேட்க வைப்பார். இவர் நல்லவனா? கெட்டவனா? என யோசிக்கவும் வைப்பார்.

விமான பயிற்சி மைய ப்ரெண்ட் கேரக்டரும் கவனம் பெறுகிறது. இவர்களுடன் டோவினோ தாமஸ், பரத் (தமிழ் நடிகர்) ஆகியோரும் உண்டு. இவர்களுக்கு பெரிதாக வேலையில்லை. ஆனாலும் கேரக்டர்கள் நிறைவு.

டெக்னிஷியன்கள்..

இந்த படத்தை ஒட்டுமொத்தமாக 4 பேர் தாங்கியுள்ளனர். ஒருவர் துல்கர். மற்ற 3 பேர்கள்… ஒளிப்பதிவாளர் கலை இயக்குனர் & இசையமைப்பாளர்.

பாராட்டும் வகையில் ஒளிப்பதிவு உள்ளது. அதே போல 1965 வரை காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப கலை இயக்குனர் பாடுபட்டுள்ளார். இவர்களுடன் இசையமைப்பாளரும் கைகோர்க்கிறார். பின்னணி இசை மிரட்டல். இப்படத்தின் சுவாரஸ்யத்தை இசை ஆங்காங்கே கூட்டியுள்ளது.

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி மற்றும் கலை இயக்குனர் மனோஜ் ஆகியோர் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். சுஷின் ஷியாம் இசையில் பாடல்கள் ஓகே.

உண்மை சம்பவத்தை சினிமாவிற்கு ஏற்றார் போல் திரைக்கதையை அமைத்து இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீநாத். வலுவான இந்த கதையை நான் லீனியர் பேட்டர்னில் கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். ஆனால் படத்தின் நீளம்… சோர்வை தருகிறது. இடைவேளை வருவதற்கே 1.30 மணி நேரம் ஆகிறது.

மேலும் கதை ஓடிக் கொண்டிருக்கும்போது அன்றைய காலகட்டம் என மாற்றி மாற்றி காட்சிகளை காட்டியிருப்பது ரசிகர்களை சற்றே குழப்பமடைய செய்யும்.

திரைக்கதை.. கதை ஓட்டம் ஆகியவை போரடித்தாலும் படத்தின் மேக்கிங் நம்மை படத்தை ரசிக்க வைக்கிறது.

KURUP movie tamil review

Related Articles