அறிவார்ந்த படமெடுக்க அன்பான அட்வைஸ்..; அன்பறிவு விமர்சனம் 2/5

அறிவார்ந்த படமெடுக்க அன்பான அட்வைஸ்..; அன்பறிவு விமர்சனம் 2/5

ஒன்லைன்.. இரட்டை குழந்தைகள் பிரிகிறார்கள். பின்னர் உண்மை தெரிகிறது.. இருவரும் இடம் மாறுகிறார்கள்.. பின்னர் இணைகிறார்கள்.. எண்ணிடலங்கா படங்களில் பார்த்த அதே இரட்டை வேட கதைதான்.

கதைக்களம்..

ஊர் பெரியவர் நெப்போலியனின் மகள் ஆஷாசரத் (லட்சுமி) சாய்குமாரை காதலிக்கிறார்.

முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நெப்போலியன் பின்னர் சாய்குமார் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் சம்மதிக்கிறேன் என்கிறார்.

அதன்படி திருமணம் நடக்க இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் (அன்பு & அறிவு) பிறக்கிறது.

நெப்போலியன் வீட்டில் வேலை பார்க்கும் விதார்த் ஒரு கட்டத்தில் மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் கலகம் மூட்டி கணவன் மனைவியை பிரிக்கிறார்.

அன்றைய தினம் நள்ளிரவில் தனக்கு பிறந்த இரடைக் குழந்தைகளில் ஒரு குழந்தையை (அறிவு) சாய்குமார் எடுத்து செல்கிறார்.

மற்றொரு குழந்தை (அன்பு), தனது அம்மா ஆஷா மற்றும் தாத்தா நெப்போலியுடன் வளர்கிறார். மதுரைக்கே உரிய வீரத்துடன் வளர்கிறார். அடி தடி வெட்டு குத்து என எதையும் யோசிக்காமல் வளர்க்கப்படுகிறார்.

உன் அம்மா இறந்துவிட்டார் என அறிவை வளர்கிறார் சாய்குமார். இவர்களின் குடும்பம் கனடாவில் பெரும் பணக்காரர்களில் ஒன்று.

25 வருடங்களுஙக்கு பிறகு தாய் உயிரோடு இருப்பதை அறியும் அறிவு மதுரைக்கு வருகிறார்.

மதுரையில் காலடி வைத்த அன்றே ஒரு பிரச்சினையில் அன்பு அறிவு இருவரும் இடம் மாறுகின்றனர். அதாவது அன்பு இடத்தில் அறிவு வருகிறார். கனடாவிற்கு அன்பு கடத்தப்படுகிறார்.

இறுதியில் பிரிந்த குடும்பம் ஒன்றானதா.? வில்லன் விதார்த்தை பழி வாங்கினாரா? தாத்தா பேரன்களை ஏற்றுக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்..

ரஜினி படங்களுக்கே உரிய செம பில்டப்போடு அறிமுகம் ஆகிறார் ஹிப்ஹாப் ஆதி. ஆனால் பார்க்கத்தான் நம்மால் முடீயல. ஒரு ஆதி வந்தாலே தாங்காது இதுல ரெண்டு ஆதி வேற.. மனுசன் வச்சி செஞ்சிட்டார்.

நிறைய காட்சிகளில் ஓவர் ஆக்டிங். நல்லவேளை இந்த படத்தில் அவரது வழக்கமான ப்ரெண்ட் கேரக்டர்களை பயன்படுத்தவில்லை. இரண்டு கேரக்டர்களை வேறுபடுத்த (பாடி லாங்குவேஜ்) கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாமே ப்ரோ.. அடுத்த படத்திலாவது உங்க ஹேர் ஸ்டைலை மாத்துங்க ஆதி.

தீனாவின் டைமிங் காமெடிகள் சில இடங்களில் கை கொடுத்துள்ளன.

2 ஹீரோ இருந்தா 2 ஹீரோயின்கள் இல்லாமலா.? காஷ்மிரா மற்றும் ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர்.

இதில் காஷ்மீராவை கனடாவில் வசிக்கும் பெண்ணாக காட்டியிருக்கலாம். அவரின் கலருக்கு கால் சட்டை போட்டு வந்தால் கூட ஓகே. அதுபோல ஷிவானியை மதுரை பெண்ணாக காட்டியிருக்கலாம். இரண்டு பேர் இருந்தும் நம்மை யாருமே கவரவில்லை. காஷ்மிரா கொஞ்சம் ஓகே.

3 கேரக்டர்களை நிச்சயம் பாராட்டலாம். நெப்போலியன் தன் கேரக்டரில் செம கெத்து காட்டியிருக்கிறார். பைட் சீனிலும் வருகிறார்.

அதுபோல பல படங்களில் மிரட்டலாக வரும் ஆஷா இதில் அம்மாவாக அசத்தல். அதிலும் சின்ன கம்பீரம் காட்டியிருப்பது சிறப்பு. இவரது டப்பிங் இவருக்கு பொருந்தவில்லை. (ரோகினி வாய்ஸ்..??)

மைனா, குரங்கு பொம்மை என பல படங்களில் ஹீரோவாக நடித்த விதார்த் இதில் வில்லனாக வித்தியாசமாக தோன்றியிருக்கிறார். பாராட்டுக்கள்.

விதார்த் பேருக்குதான் அமைச்சர். எப்போதுமே நெப்போலியன் வீட்டில்தான் அடிமையாக வருகிறார். இதான் அமைச்சரின் முழுநேரப் பணியா.?

போலீஸ் அதிகாரியாக சீரியல் நடிகர் சஞ்ஜீவ் வருகிறார் அவ்வளவுதான்.

காஷ்மிராவின் தந்தையாக மாரிமுத்து மாமாவாக அர்ஜெய். இருவரும் தங்கள் பங்கெளிப்பில் கச்சிதம். ஆரவாரமில்லாத நடிப்பில் சாய்குமார்.

ரேனுகா, ஆடுகளம் நரேன், சரத் ரவி ஆகியோருக்கு பெரிதாக வேலையில்லை.

டெக்னீஷியன்கள்..

பாவம் சத்யஜோதி பிலிம்ஸ். ஹிப் ஹாப் ஆதியுடம் மாட்டிக் கொண்டதா? தெரியல. இதுல கதை வேற ஆதியே எழுதி இசையமைத்துள்ளார்.

பொதுவாக இவரது படங்களில் பாடல்கள் நன்றாக இருக்கும். ஆனால் கேட்ட பாட்டு மெட்டுக்களை போட்டு தள்ளிவிட்டார். கிராமத்துக்கு இசையை கிராமத்து காட்சிகளுக்கு கொடுத்திருக்கலாம். அதிலும் இவரது ஹிப் ஹாப் இசையை திணறுகிறது.

பொன் பார்த்திபன் வசனம் எழுதியிருக்கிறார். க்ளைமாக்சில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். மற்றபடி வசனங்கள் மனதில் நிற்கும்படி இல்லை.

என்னடா என்னை ரெண்டுபேரும் சேர்ந்து அசிங்கப்படுத்துறீங்களா? என அர்ஜெய் கேட்கும் போது.. இல்லையே.. தனி தனியாதானே அசிங்கப்படுத்துனாங்க என வக்கீலாக வரும் முல்லை கேட்கும் போது ரசிக்க வைக்கிறார்.

மதுரை முதல் கனடா காட்சிகளில் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு ஆறுதல் தந்துள்ளது. ஆனால் மதுரையை காட்டிய அளவுக்கு கனடாவை காட்டவில்லையே..

ஒரு சண்டை காட்சியில் அறிவை அடிக்க ஓடி வருகிறார் அடியாள். ஆனால் அது அன்பு என்று அவருக்கு தெரிகிறது. எனவே அடிக்கவில்லை. அடுத்த காட்சியில் அன்பு யார் என தெரியாமல் பேசுகிறார் நெப்போலியன். அடியாளுக்கு தெரிந்த ஒன்று கூட 25 வருடமாக வளர்த்த தாத்தாவுக்கு தெரியல. இப்படி சிரிப்பாய் சிரிக்கும் சிறப்பான காட்சிகள் படத்தில் உள்ளது.

இப்படத்தை இயக்கியிருக்கிறார் அஸ்வின் ராம். இவர் அட்லியின் உதவியாளராம். இவரின் குரு சுட்ட கதையாக இருந்தாலும் சுவையாக தருவார். ஆனால் பல இரட்டை வேட படங்களில் அரைத்த மாவை இப்படி புளிக்க வைத்துவிட்டாரே அஸ்வின் ராம்.?

அறிவை நன்றாக பயன்படுத்தி அடுத்த படத்தையாவது கிரியேட்டிவ்வாக எடுங்கள் என அன்பான வேண்டுகோள் வைக்கிறோம்.
அன்பு தான் எல்லாம்… அதுவே அறிவார்ந்த செயல் என அட்வைஸ் செய்து படத்தை முடிக்கிறார்கள். இதை முதலில் சொல்லியிருந்தால் அப்போதே முடிச்சிட்டு கிளம்பியிருக்கலாம் போல…

Hip Hop Aadhis Anbarivu review rating

Related Articles