தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கருடன் விமர்சனம் 4.25/5… கலக்கல் சம்பவம்
ஸ்டோரி…
சசிக்குமாரும் உன்னி முகுந்தனும் சிறு வயது முதலே சிறந்த நண்பர்கள்.. இவர்களுடன் இணைந்து கொண்டவர் சூரி.. சிறு வயது முதலே இவர்கள் ஒன்றாக வளர்கிறார்கள்.. உன்னிக்கு எதிராக எவன் வந்தாலும் சூரி எதிர்த்து நிற்பார்.. சசியின் அன்புக்கு கட்டுப்பட்டாலும் உன்னி முகுந்தனுக்கு விசுவாசி இவர்தான்.. அப்பத்தா வடிவுக்கரசி பெற்ற பிள்ளைகளை போல வளர்த்து வருகிறார்.
இவர்களின் நட்பை பார்த்து ஊரே பொறாமைப்படுகிறது.. ஒரு சிலர் பிரிக்க நினைத்தாலும் அது முடியாமல் போகிறது..
எந்த ஒரு பிரிக்க முடியாத உறவாக இருந்தாலும் அதை பிரித்து விடும் மூன்று பெண் பொன் மண் என்பது தெரிந்த ஒன்றுதான்.. இந்த மூன்று ரூபத்திலும் இந்த நண்பர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது..
இந்த சூழ்நிலையில் மினிஸ்டர் ஆர்வி உதயகுமார் மற்றும் தியேட்டர் ஓனர் மைம் கோபியின் சதி வலையில் விழுகிறார் உன்னி முகுந்தன்.. இதனால் சசிக்கு முன்னிக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.
இதன் பிறகு என்ன நடந்தது.? சூரி யாருக்கு ஆதரவாக செயல்பட்டார்? இவர்கள் பிரிந்தார்களா? வில்லன் சதித்திட்டம் வென்றதா என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரேவதி ஷர்மா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விடுதலைப் படத்திலேயே விஸ்வரூப கதை நாயகனாக உருமாறி இருந்தார் சூரி.. அதனை மிஞ்சும் வகையில் இந்த கருடன் படத்தில் டன் கணக்கில் நடிப்பை கொடுத்திருக்கிறார். விசுவாசத்திற்கு மறுபெயர் சொக்கன் என்ற கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
அண்ணனிடம் விசுவாசம் அண்ணியிடம் பாசம் காதலியிடம் நேசம் என அனைத்து விதத்திலும் சொக்கன் கேரக்டரில் சொக்க வைத்து விட்டார் சூரி.
சூரி இனி காமெடி செய்ய மாட்டாரா? என ஏங்கிய ரசிகர்களுக்காக ஒரு காட்சியில் பிரிகிடா அவரின் காதலை சொல்லும் போது தன்னை காதலித்து விட்டாரோ என எண்ணி இவர் செய்யும் ரகளை சூப்பர்..
தமிழ் சினிமாவில் நட்புக்கு கை கொடுக்கும் ஒரே நடிகர் சசிகுமார் தான்.. அந்த கேரக்டருக்கு பொருந்தி போகிறார் அவரது முடிவு சோகமா பெரும் சோகம்..
மலையாள நடிகர் உன்னி முகுந்தன் மிரட்டி இருக்கிறார்.. தவறான பாதையில் சென்றாலும் நட்புக்காக தயங்கி நிற்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.. அதே சமயம் திடீரென இவர் விஸ்வரூபம் எடுக்கும் காட்சிகள் மிரட்டல் ரகம்.. அவரது லாங் ஹேர் ஸ்டைல் தோற்றமும் வேற லெவல்..
மிகவும் நேர்மையான போலீசாக சமுத்திரக்கனி.. வில்லன் கோஷ்டி போலீசை பார்த்து எல்லா விஷயத்தையும் சொல்லியாச்சா? என்று அவர் கேட்கும் போது சிரிக்காமலும் சிந்திக்காமல் இருக்க முடியாது.
அப்பத்தா வடிவுக்கரசி… தன் அழகான நடிப்பின் மூலம் கேரக்டருக்கு சிறந்த வடிவம் கொடுத்திருக்கிறார்
சசிகுமாரின் மனைவியாக ஷிவதாநாயர், மற்றும் உன்னி முகுந்தனின் மனைவி, சூரியின் காதலியாக ரேவதி ஷர்மா & உன்னி மச்சானின் மனைவியாக பிரிகிடா உள்ளிட்டோரும் சிறப்பு..
இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டும் துரோகி என சூரியை ஷிவதாநாயர் மண் தூற்றி திட்டும் காட்சி கண்கலங்க வைக்கும்.
நாயகி ரேவதி ஷர்மாவின் மேனியும் அழகான கண்களும் வைத்த கண் வாங்காமல் பார்க்க தூண்டும்..
வில்லன்களாக வரும் ஆர்வி உதயகுமாரும் மைம் கோபியும் வில்லத்தனத்தில் சிறப்பு..
டெக்னீசியன்ஸ்…
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்… யுவன் இசையில் பாடல்கள் செம.. இன்டர்வெல் சீனில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.. சூரிக்கு சாமி வந்து மிரட்டும் காட்சி வேற லெவல் ரகம்..
படத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து.. எடிட்டரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம்தான் இந்த கருடன்.. அழகான கதை நட்பு பாசம் துரோகம் விசுவாசம் என அனைத்தையும் மையப்படுத்தி கதை எழுதி இருப்பது சிறப்பு.
இந்த படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இதுவரை அவர் இயக்கிய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை எடுத்து இருக்கிறார்.
இதுவரை கொடுத்த அனைத்து படங்களுமே நல்ல பெயரை பெற்ற போதிலும் ஏன் இந்த நீண்ட இடைவெளி என்பது தான் தெரியவில்லை. அடுத்தடுத்து படங்கள் கொடுக்க துரை செந்தில் குமார் அவர்களை வாழ்த்துவோம்..
ஆக கருடன்.. கலக்கல் சம்பவம்
Garudan movie review