ஒன்லைன்.. ஹீரோ பிறந்த நேரம் 3:33. 30 வருடங்களுக்கு பிறகு அந்த நேரமே அவருக்கு எமனாக மாறுகிறது.
அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு இயக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் சான்டி ஹீரோவாக நடித்துள்ள படம் “3:33”. ஸ்ருதி நாயகியாகவும், ரமா, ரேஷ்மா உள்ளிட்டோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளார். Bamboo Trees ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ளார்.
கதைக்களம்..
தந்தையை இழந்தவர் நாயகன் சாண்டி. தன் அம்மா மற்றும் அக்கா, அக்கா குழந்தை ஆகியோருடன் வசித்து வருகிறார். எவ்வளவு வேலை தேடினாலும் சரியான வேலை கிடைக்காமல் அலைகிறார்.
இதற்கெல்லாம் காரணம், நீ பொறந்த நேரம் அப்படி என்பதே இவரின் காதுகளில் ஒலிக்கிறது.
இவர்கள் நால்வரும் ஒரு வீட்டிற்கு குடித்தனம் செல்கின்றனர். அங்கு சென்ற பின்தான் அந்த 3:33 மணி இவரை பாடாய்படுத்துகிறது.
அப்படி என்ன ஆனது? அந்த அமானுஷ்ய சக்தி என்ன செய்யும்? தன் குடும்பத்தை அதனிடம் இருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக்
கதை..
கேரக்டர்கள்..
பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகிய இருவருமே தங்கள் படங்களில் ஆட்டம் போட்டு கலக்கியிருப்பார்கள். அதுவும் தேவைக்கு மீறியே பாடல்கள் இருக்கும். ஆனால் சாண்டி தன் முதல் படமாக இருந்தாலும் ஒரு ஆட்டம் பாட்டம் கூட இல்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளதே பெரிய விஷயம்.
தன் கேரக்டரை புரிந்து அவர் நடித்துள்ளது சிறப்பு. ஆனால் அமானுஷ்ய சக்தி வந்தபின்னர் அவர் ஒரு மாதிரியாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் படம் முழுக்கவே ஒரு மாதிரியாகவே இருக்கிறார். அது ஏனோ.?
ஒரே கருப்பு கலர் சட்டை, தலையே சீவாத முகம்… முகம் முழுக்க தாடி என வருகிறார். அதை கொஞ்சம் மாற்றியிருக்கலாம்.
வழக்கம்போல இந்த படத்திலும் நாயகி ஸ்ருதிக்கு பெரிதாக வேலையில்லை. சில நேரம் பேய் போலவும் மிரட்ட முயற்சித்துள்ளார்.
அம்மா ரமா, அக்கா ரேஷ்மா இருவரும் கதைக்கு சரியான தேர்வு. கொடுத்த கேரக்டரில் நிறைவான நடிப்பு.
ஆனால் படத்தில் கெளதம் மேனன் எதற்கு வருகிறார்? பெரிய இயக்குனருக்கான மதிப்பு இதில்லை.
டெக்னிஷியன்கள்…
சதீஷ் மனோகரனின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஒரு காட்சியில் டோர் லாக் தானாகவே திறக்க முற்படும். அதற்கேற்ப கேமரா ஆங்கிளை ஆட்டி வைத்திருப்பது நிஜமாலுமே சூப்பர் சார்.
ஹர்ஷவர்தனின் பின்னனி இசை ரசிகர்களை நிச்சயம் மிரட்டும்.
இதுவும் வழக்கமான பேய் பட பாணியில் தான் பயணிக்க ஆரம்பிக்கிறது. ஆனால் டைம் கான்செப்ட் வித்தியாசமாக உள்ளது. ஆனால் முதல் பாதிவரை அதே டைம்.. அதே வீடு.. அதே காட்சிகள் திரும்ப திரும்ப வருவதால் போதும்டா சா(மி)ண்டி என சொல்ல வைக்கிறது.
படத்தின் கடைசி 15 நிமிடங்கள் மனதில் நிற்கிறது. முதல்பாதி காட்சிகளை கட் செய்து கொஞ்சம் காதல்.. காமெடி என திருப்பியிருந்தால் போரடிப்பது தெரியாமல் இருந்திருக்கும்.
நாயகன் மேல் நம்பிக்கை வைக்காமல் கதையின் மேல் நம்பிக்கை வைத்து கதையை நகர்த்திய நம்பிக்கை சந்துருக்கு வாழ்த்துக்கள்..
ஆக.. இந்த 3:33 கொல்லும் நேரம்
333 Moonu Muppathi Moonu review rating