தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் – தமிழருவி மணியன்

தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர் – தமிழருவி மணியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamilaruvi manianதமிழகத்தின் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியுற்ற கோடானுகோடித் தமிழர்களில் எளியனும் ஒருவன். அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும், கலை உலகிலும் அவர் அளித்த பங்களிப்பைப் புறந்தள்ளிவிட்டு எந்த மனிதராலும் தமிழக வரலாற்றை வரைந்துவிட முடியாது.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் ஒரே மையப்புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள். ஓசூருக்குப் பக்கத்தில் தொரப்பள்ளி என்ற குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால், இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக உயர்ந்தவர் இராஜாஜி. சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்த விருதுபட்டியில் பிறந்து, காங்கிரஸ் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்ட தமுக்கடித்தத் தொண்டராகத் திகழ்ந்து தன்னுடைய தன்னலமற்றத் தியாகத்தால், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மகத்தான தலைவராக உயர்ந்தவர் காமராஜர். திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள திருக்குவளைக் கிராமத்தில் பிறந்து வலிமைமிக்க எந்தப் பின்புலமுமில்லாமல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துத் தன்னுடையக் காந்தச் சொற்களாலும், கடும் உழைப்பாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்து, 1996 முதல் இந்தியப் பிரதமர்களை உருவாக்குவதில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.

பேசத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியாது. பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு மக்கள் நலன் சார்ந்து சோர்வறியாமல் உழைக்கும் உள்ளம் இருக்காது. அளப்பரிய பேச்சாற்றல், வியக்கத்தக்க எழுத்தாற்றல், சோர்வறியா கடும் உழைப்பு ஆகியவற்றின் பூரண வடிவமாகத் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட அபூர்வமான தலைவர் கலைஞர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வாய் மலர்ந்த அண்ணாவின் வழியில், திறமையுள்ளவர்கள் தனக்கு எதிர் வரிசையில் நின்றாலும், அவர்களை அன்பால் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் பரந்த மனம் கொண்ட கலைஞரைப்போல் வேறொருவரை இந்தப் பாழ்பட்ட அரசியலில் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.

எண்பது ஆண்டுகள் இடையறாத பொதுவாழ்வுப் பணி, அறுபதாண்டுகள் சட்டப்பேரவையில் சரித்திர சாதனை, ஐம்பதாண்டுகள் தி.மு. கழகத்தின் கட்டுமானம் கலைந்து விடாமல் காப்பாற்றியக் கட்சித் தலைமை, தேர்தல் காலங்களில் சூழலுக்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்திய நேர்த்தி, தமிழின்பால் கொண்ட தனிப் பெருங்காதல், பேனா முனையில் பிரசவித்த இலக்கிய மணம் கமழும் வசீகரமான வார்த்தைகளின் அணிவகுப்பு, சமூக நீதிக்காகவும் சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் ஆற்றிய அரும்பணிகள் ஆகிய அனைத்தும் இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும்.

மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இடம் ஒதுக்கிய தமிழக அரசு, கண்மூடும் வரை அண்ணாவைப் போற்றி வாழ்ந்த கலைஞருக்கு, அண்ணா கண்ணுறங்குமிடத்தில் இளைப்பாறுவதற்கு அனுமதி வழங்குவதுதான் முறையான செயல். அதைத் தமிழக அரசு செய்யத் தவறினாலும், நீதிமன்றம் செய்திருப்பது வரவேற்கத் தக்கது.

கலைஞர் நூறாண்டு கடந்தும், இந்த மண்ணில் மக்கள் நலன் சார்ந்து களப்பணியாற்றிட வேண்டும் என்பதுதான் தமிழினத்தின் கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேறாத நிலையில் கலங்கித் தவித்திடும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் என் ஆறுதல் வார்த்தைகளை வழங்குவதற்கு மேல் வேறென்ன என்னால் செய்ய இயலும்!

கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது : கருணாஸ் MLA

கலைஞர் எனும் உதயசூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது : கருணாஸ் MLA

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karunasஅரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழர் நெஞ்சங்களில் ஒலித்துக் கொண்டிருந்த மாபெரும் அரசியல் சகாப்தத்தின் சப்தம் மெளனித்தது. ஆம் கண்ணீர்த்துளிகள் எங்களில் கண்களில் வழியாக ஊற்றெடுக்கிறது என்பதைவிட எங்கள் இதயத்தின் வழியாக குருதியாக வழிகின்றது.

கலைஞர் என்ற பெயர்ச்சொல் சுழலும் அரசியல் சக்கரத்தின் அச்சாணி! இந்த அச்சாணி முறிந்ததே என்று கதறுகிறோம்! கலைஞர் என்ற உயிர்க்கரு இருட்டைக் கிழிக்க வந்த சூரியன் அது மறைந்ததே என்று இயற்கையிடம் மன்றாடுகிறோம்! மனசெல்லாம் புகைமூட்டமாய் இருள் சூழ்கிறது! மீண்டும் வெளிச்சம் வாராதோ என்று விம்மி அழுகிறோம்!

தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சியை வலுவான அடித்தளத்தின்மீது அமரவைத்ததோடு மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்தும் சக்தியாக உருவெடுத்த மாபெரும் தலைவரை தமிழகம் இழந்து தவிக்கிறதே என்று அழுது தவிக்கிறோம்.

திராவிடம் என்ற கலாச்சார சொல்லை கண்டறிந்தவர் பெரியார்! அதற்கு அணிசேர்த்தவர் அண்ணா! ஆனால் இரத்தமும் – சதையும் வழங்கி உயிர்சேர்ந்தவர் கலைஞர்.

கலைஞரின் நீண்ட அரசியல் வாழ்வு, தமிழர் வரலாற்றைப் திருப்பிக்காட்டும் காலக்கண்ணாடி.. தமிழ்நாட்டில் சமூக நீதியின் சாதனைகளை இந்தியக் கூட்டாட்சியின் உச்சியில் நின்று காலம் அறிந்து கூவிய சேவல் கலைஞர்! சமூகநீதிக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக உருமாற்றி அதன் வழி இன்றைய தலைமுறைக்கான திசைக்காட்டியான நிற்பவர் கலைஞர்!

60 ஆண்டுகளுக்கு மேலாக சட்டமன்றத்தில் உறுப்பினராகி உயர்ந்தவர் கலைஞர் அன்றி வேறுயார்? இது வரலாற்றின் உச்சம்! ஒரு இயக்கத்திற்கு தலைவராக 50 ஆண்டு காலம் நின்று உழைத்தவர் இவரின்றி வேறுயார்! இதுதான் அசாத்தியத்தின் அடையாளம்!

தமிழ்நாட்டு அரசியல் ஆணிவேருக்கு தண்ணீரைப் பாய்ச்சிய தமிழ்நதி வற்றிவிட்டதை நினைத்து வேதனை அடைகிறோம்! காற்றை செலுத்திய கதிரவன் மூச்சை நிறுத்தியதை கண்டு சொல்லெண்ணா துயரம் அடைகிறோம்!

கலைஞர் எனும் காலச்சுவடுகளை கரையான்கள் அறித்துவிடமுடியாது! கலைஞர் எனும் உதய சூரியன் மறைந்தாலும் மடிந்துவிடாது! தமிழுக்கு தொண்டு செய்தோன் சாவதில்லை என்றான் பாவேந்தன்! கலைஞர் தமிழுக்கு தமிழருக்கு தொண்டு செய்து தமிழ்வேந்தன் அவர் சாவைத் தழுவினாலும் அவரது புகழ் என்றுமே சாகாது!

இவ்வாறு தனது அறிக்கையில் எம்.எல்.ஏ., கருணாஸ் புகழஞ்சலி செலுத்தினார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை *எம்பிரான்* பூர்த்தி செய்வான்.. : தயாரிப்பாளர் சுமலதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

embiran stills ‘எம்பிரான்’ படக்குழு மிகுந்த மனநிறைவுடன் மிக உற்சாகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தயாரிப்பாளர்கள் பி. பஞ்சவர்ணம் மற்றும் வி சுமலதா ஆகியோர், மிகச்சிறப்பான ட்ரைலரால் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் வி சுமலதா கூறும்போது, “ஒரு புதிய குழுவுடன் படத்துக்காக இணையும்போது எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சூழ்நிலை உருவாகும். கதை விவரிப்பு மிகவும் அசாதாரணமானதாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் கிட்டத்தட்ட ‘குருட்டுத்தனமான வாய்ப்பு’ முறையில் பட வாய்ப்பை வழங்குவார்கள். ட்ரெய்லரை காணும் வரையில் இந்த நிலையில் தான் இருப்பார்கள். ஆனால் எம்பிரானை பொறுத்தவரையில், தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ அது நிச்சயம் கிடைக்கும் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக இருந்தோம். ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் டிரெய்லர் நாங்கள் எதிர்பார்த்தததை விட சிறப்பாக வந்திருக்கிறது. ஒருவேளை, இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீடாக தெரியலாம், ஆனால் தயாரிப்பாளர்களாக எங்களுக்கு இது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்றார்.

இயக்குனர் கிருஷ்ணா பாண்டி கூறும்போது, “படம் இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் அதற்கு தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் சார் மற்றும் சுமலதா மேடம் தான் மிக முக்கிய காரணம். வழக்கமாக, ஒரு புதிய குழுவுடன் இணையும் போது, தயாரிப்பாளருக்கு பட உருவாக்கத்தின்போது சில சந்தேகங்கள் ஏற்படும். பின்னர் படப்பிடிப்புக்கு வந்து என்ன நடக்கிறது என்று அவ்வப்போது ஆய்வு செய்வார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அது தான் பேப்பரில் இருந்த திரைக்கதை அப்படியே திரையில் வர உதவியாக இருந்தது” என்றார்.

ட்ரைலர் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த டி. மனோஜ் (படத்தொகுப்பு), பிரசன் பாலா (இசை) மற்றும் எம். புகழேந்தி (ஒளிப்பதிவு) ஆகியோருக்கு நிபந்தனையற்ற நன்றி தெரிவிக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா.

ரெஜீத் மேனன், ராதிகா பிரீத்தி, பி. சந்திர மவுலி, கல்யாணி நடராஜன், கிஷோர் தேவ், வள்ளியப்பன் மற்றும் இன்னும் சில நடிகர்கள் இந்த ரொமண்டிக் திரில்லர் படத்தில் நடித்திருக்கிறார்கள். இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும்.

ஆண் தேவதை-யான கலைஞரின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.. : தயாரிப்பாளர் மாரிமுத்து

ஆண் தேவதை-யான கலைஞரின் ஆன்மா ஆசிர்வதிக்கும்.. : தயாரிப்பாளர் மாரிமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aan devathai stillsசமுத்திரகனி மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குனர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான “ஆண் தேவதை” படத்தின் இசை வெளியீடு இன்று 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழின தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாக கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து “ஆண் தேவதை” திரைப் படத்தின் திரை அரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் productions என்கிற நிறுவனத்தின் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில் “ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கு இந்த காலக் கட்டம் சோதனையானது.

கலைஞர் அவர்கள் தமிழ் திரை உலகிற்கு செய்த சேவைகள் , சாதனைகள் அதிகம். “ஆண் தேவதை” இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்ய.வேண்டிய கட்டாயம். கலைஞர் அவர்களுக்கு மரியாதை என்று வரும் போது இந்த இடையூறுகள் பெரிய விஷயமா என்ன, என்று எண்ணியாவாறே நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம்.

ஆனாலும் இசை வெளியீடு தொழில் நுட்ப முறை கட்டாயத்தில் இன்று வெளி ஆவதை தவிர்க்க முடியாதது என்று இசை உரிமையை பெற்ற சரிகம நிறுவனம் கூறியபோது மறுக்க முடியவில்லை.
தமிழ் சமுதாயத்துக்கு மிக நல்ல கருத்துகளை சொல்லும் இந்த படத்துக்கு நம்மை சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி விட்டு சென்ற கலைஞரின் ஆன்மா ஒரு “ஆண் தேவதை” போல் இருந்து ஆசிர்வதிப்பார் என்று நம்புகிறேன். எல்லோருக்கும் உகந்த மற்றுமொரு நாளில் இசை விழா நடைபெறும்” என்று தெரிவித்தார் மாரிமுத்து.

ஹன்சிகாவின் 50-வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் ஜமீல்

ஹன்சிகாவின் 50-வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் ஜமீல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hansikaதிரையில் நாயகர்களே கோலோச்சி கொண்டு இருந்து, நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து விட்டார்கள். பல படங்களில் சமீபத்திய வெற்றி இந்த முடிவை உறுதி படுத்துகிறது.

இளம் இயக்குனர் U R ஜமீல் தன்னுடைய முதல் படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்து அவருக்கே மட்டும் பொருந்தும் ஒரு பிரதானமான கதா பாத்திரத்தை படைத்து இருக்கிறார்.இந்த படம் ஹன்சிகாவின் 50.ஆவது படம் என்பதுக் குறிப்பிட தக்கது.இந்த படத்தின் தலைப்பு வருகின்ற 11ஆம் தேதி வெளி ஆக இருக்கிறது, என்ற தகவலையும் தெரிவித்தார் ஜமீல்.

“இந்த கதையையும் , திரை கதையையும் மெருகேற்றும் இறுதி கட்ட பணிகள் நடை பெற்று கொண்டு இருந்து, இப்பொழுது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.இந்த கதையின் நாயகி அழகும், அறிவும், தீரமும், இளமையும், நிறைய பெற்றவள்.ஹன்சிகா உரிமையுடன் இந்த கதா பாத்திரத்துக்கான ஆசனத்தில் வந்து அமர்ந்து விடுகிறார்.

வருகின்ற 11ஆம் தேதி , அவரது 50 ஆவது படத்தின் title மற்றும் முதல் பார்வை வெளி வருவது எனக்கு மிக பெரிய பெருமை. தனுஷ் சார் தலைப்பை வெளியிட இருக்கிறார். Etcetra entertainment என்கிற நிறுவனத்தின் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளர் ஜிப்ரான் ஆவார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2019 ஆம் ஆண்டின் விடியல் மற்றுமொரு லேடி சூப்பர் ஸ்டாரை சந்திக்க உள்ளது” என்கிறார் U R ஜமீல் நம்பிக்கையுடன்.

பாடல்கள் தான் படத்தின் முகவரியே ; *தீதும் நன்றும்* படம் குறித்து சி.சத்யா

பாடல்கள் தான் படத்தின் முகவரியே ; *தீதும் நன்றும்* படம் குறித்து சி.சத்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director sathyaநாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கியுள்ள படம் தான் ‘தீதும் நன்றும்’. இந்தப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார் ராசு ரஞ்சித், மற்ற இரண்டு ஹீரோக்களாக சந்தீப் ராஜ், ஈசன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜிமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார்.

‘எங்கேயும் எபோதும்’ புகழ் சி.சத்யா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே கொடுத்தாலும் துள்ளலான இசையால் ரசிகர்களை மகிழ்விக்கும் வித்தை தெரிந்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. தற்போது இசையமைத்துள்ள ‘தீதும் நன்றும்’ படம் குறித்த தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

“பொதுவாக நாளைய இயக்குனர் மாதிரி டீம் எல்லாம் புது டெக்னீஷியன்களா தான் ஒரு கூட்டணி அமைப்பாங்க.. இந்தப்படத்தோட இயக்குனர் ராசு ரஞ்சித் என்கிட்டே வந்து, இது சின்ன பட்ஜெட் படம்.. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொள்வீர்களா என கேட்டபோது, இந்த சந்தேகத்தை வாய்விட்டே கேட்டுவிட்டேன்.. அதற்கு அவர் இந்தப்படத்தின் கதை கொஞ்சம் அழுத்தமான, ஆழமான கதை.. அதனால் உங்களை தேடிவந்தோம் என கூறினார்.. எனக்கும் புது ஆட்களுடன் பணிபுரிய வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்ச நாட்களாகவே இருந்துவந்தது. கதையும் எனக்கு பிடித்திருந்தது.. அவர்கள் எதிர்பார்ப்பை ஓரளவு ஈடுசெய்துள்ளதாகவே நினைக்கிறேன்..

இயக்குனர் ராசு ரஞ்சித்தின் பாடல்கள் குறித்த ஆர்வம் எனனை ஆச்சரியப்படுத்தியது.. பாடல்கள் கமர்ஷியலாகவும் அதே சமயம் க்ளாஸாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு இசையமைப்பாளரிடம் எப்படி வேலை வாங்கவேண்டும் என்கிற விஷயம் தெரிந்தவராகவும் இருக்கிறார்.

ரெகுலர் சினிமா ஆட்களுக்கும் இந்த டீமுக்கும் நிறையவே வித்தியாசத்தை பார்க்க முடிந்தது. ரொம்பவே வேகமாக, அதேசமயம் புரிந்துகொள்ள கூடிய விதமாக காட்சிகள், கோணங்களை அமைத்திருக்கிறார்கள். எப்படியாவது வெற்றி பெற்றே தீரவேண்டும் என்கிற வெறி ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. . நான் எப்போதுமே எல்லோருடனும் எளிதில் இணைந்துகொள்வேன் என்பதால்இந்த குழுவினருடன் எனக்கு எந்த சிரமும் ஏற்படவில்லை. ரொம்ப லோக்கலா வேலை பார்த்திருக்கோம்.. அதேசமயம் படத்தின் மெரிட் குறையாமலும் பார்த்துக்கொண்டுள்ளோம்.

ரீரெக்கார்டிங் முடித்துவிட்டு படத்தை பார்த்தால், படம் ரொம்பவே விறுவிறுப்பாக இருக்கிறது. அதுமட்டுமல்ல.. இந்தப்படத்தில் நடித்துள்ளவர்கள் யாரும் புதுமுகங்கள் போலவே தெரியவில்லை. பொதுவாக சென்டிமென்ட் காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸாக போய்விட்டால் ஆபத்து. ஒரு சில பெரிய இயக்குனர்கள் தான் இதை சரிவர கையாளுவார்கள்.. இந்தப்படத்தில் இயக்குனர் ராசு ரஞ்சித் அப்படி ஒரு கைதேர்ந்த இயக்குனர் போல சென்டிமென்ட் காட்சிகளை அமைத்திருந்த விதம் அவரைப்பற்றிய ஆச்சர்யத்தை இன்னும் அதிகமாக்கியது. இது அவரது முதல் படம் மாதிரியே தெரியவில்லை.

இந்தப்படம் கமர்ஷியலா ஹிட்டாகிறதுக்கு உண்டான பல அம்சங்கள் இதுக்குள்ள இருக்கு.. ஏ,பி,சின்னு மூணு தரப்பு ஆடியன்ஸுக்கும் இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தில் ‘பட்டு ரோசா’ன்னு ஒரு பாடல் மெலடியுடன் கூடிய குத்துப்பாட்டாக உருவாகியுள்ளது. அழகான வரிகளை கொடுத்துள்ளார் பாடலாசிரியர் முத்தமிழ்.. மற்ற பாடல்களும் கதைக்கு தேவையான இடத்தில் தான் அமைந்திருக்கிறது.

பாடல்கள் தேவையா என சிலர் கேட்கிறார்கள்.. பாடல்கள் தான் ஒரு படத்தோட முகவரியே.. அதனால் தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாக அவற்றை யூடியூப்பில் வெளியிட்டு ரசிகர்களுக்கு படத்தை பற்றிய ஒரு புரிதலை உருவாக்கி, அவர்களை தியேட்டருக்கு அழைத்து வரும் வேலையை எளிதாக்குகிறது.. படம் பார்க்கும் ரசிகர்கர்களுக்கு ரிலாக்ஸ் தருவதும் அதுதான்.. சில பாடல்கள் கதையை மீறி படத்திற்குள் திணிக்கப்படும்போது, ரசிகர்களுக்கு போரடிப்பது தவிர்க்க முடியாதுதான். எதிர்காலத்தில் பாடல்களை மட்டும் யூடியூப்பில் வெளியிட்டுவிட்டு, படத்தில் அவற்றை கட் பண்ணிவிடுகின்ற நிலை கூட வரலாமோ என்னவோ..?” என ஒரு புதிருடன் பேட்டியை முடிக்கிறார் இசையமைப்பாளர் சி.சத்யா.

More Articles
Follows