தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 91) நேற்று மாலை 6:40 மணிக்கு காலமானார்.
தனது ஊரான திருவாரூர் பெயரையும், தன் பெயர் யேசுதாஸில் உள்ள பிற்பாதியையும் இணைத்து ஆரூர்தாஸ் என பெயர் மாற்றிக் கொண்டார்.
1960-70-களில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரத்தின் படங்களுக்கு ஆரூர் தாஸ் வசனம் எழுதியுள்ளார். இவரது வசனங்கள் அந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளன.
ஆரூர்தாஸ் மறைவுக்கு பிரபல குணச்சித்திர நடிகர் எம் எஸ் பாஸ்கர் தன் இரங்கலை கவிதை வடிவில் தெரிவித்துள்ளார்.
“அப்பாவுக்கு அஞ்சலி”.
————-
தமிழ் ஓய்ந்ததோ?
தன்னிகரற்ற எழுத்து சாய்ந்ததோ?
தமிழை தங்கு தடையின்றி, பிழையறப்பேச இந்த எளியவனுக்கு படிப்பித்த என் ‘ஆசான்’ விண்ணுலகம் சென்றாரோ…?
“டேய்..பாஸ்கரா” என்று என்னை அன்போடு அழைத்த அக்குரலை இனி எப்பிறப்பில் கேட்பேன்?
அரவணைத்தும், கண்டித்தும் என்னை வழி நடத்திய என் குருநாதர் அமரரானாரோ?
இந்நிலையல்ல… எந்நிலைக்கு யான் சென்றிடினும் என்னை ஏற்றி விட்ட ஏணி அவரன்றோ..?
மறக்க இயலுமோ? என் இறுதி மூச்சு உள்ளவரை ‘அப்பா’ தங்களை மறக்க இயலுமோ?
தாங்கள் பேசாவிட்டாலும் தங்கள் வசனங்கள் காலாகாலத்திற்கும் பேசப்படுமன்றோ..?
மீண்டும் தங்கள் வசனங்களை தாங்கள் சொல்லித்தர தங்கள் முன்பு நின்று தங்கள் சீடன் நான் ‘டப்பிங்’ பேசுவேனா?
“சென்று வாருங்கள் அப்பா”…
மாதாவின் நிழலில் இளைப்பாற…
கண்ணீருடன்
தங்கள் மாணாக்கன்
எம்.எஸ்.பாஸ்கர்.