தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 40 வருடங்களாக மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் ரகுமான்.
இரண்டு மொழிகளிலுமே இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் தனியாக இருக்கின்றது.
அதிலும் பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரகுமான் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.
குறிப்பாக 1990களில் அதிக இளம்பெண் ரசிகைகளை கொண்டவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘துருவங்கள் 16’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவரது திரையுலக பயணம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த மதுராந்தகர் இவரது கதாபாத்திரமும் கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி படம் முடிவதும் தமிழ் சினிமாவில் இப்போதும் நடிகர் ரகுமானுக்கான முக்கியத்துவத்தை பறைசாற்றுவது போல அமைந்துவிட்டது.
நடிகர் ரகுமான் தற்போது தனது 55வது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். பொதுவாகவே மலையாள திரையுலகில் நடிகர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் ரகுமானின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை சற்றே வித்தியாசமான முறையில் பிறருக்கு பயனுள்ள வகையில் கொண்டாடி அசத்தியுள்ளனர்.
கேரளாவில் திருச்சூர் பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் பெண்கள் இல்லத்தில் நடிகர் ரகுமானின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் சேர்ந்து கேக் வெட்டி நடிகர் ரகுமானின் பிறந்த நாளை கொண்டாடினர். மேலும் அனைவருக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
நடிகர் ரகுமானின் பிறந்தநாள் என்றதுமே அங்கிருந்த பெண்கள் பலர் உணர்ச்சிவசப்பட்டு அவர் நடித்த படங்களின் பாடல்களை பாடி அவருக்கு எங்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை உணர்த்தினார்கள்.
அதில் ஒரு முதிய பெண்மணி அங்கிருந்த ரசிகர் மன்ற தலைவரிடம் தான் ரகுமானிடம் பேச விரும்புவதாக கோரிக்கை வைக்க, உடனடியாக இந்த தகவல் நடிகர் ரகுமானுக்கு தெரிவிக்கப்பட்டது.
அடுத்த நிமிடமே வீடியோ காலில் வந்த ரகுமான் அங்கிருந்த ஒவ்வொருவருடனும் பேசி நலம் விசாரித்தார். அனைவரும் அவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இன்னொரு பெண்மணி ரகுமானின் பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என விரும்ப தனது வீட்டில் அடுத்த அறையில் இருந்த குழந்தையை தூக்கி வந்து வீடியோ காலில் காட்டி அந்த பெண்மணியின் ஆசையை நிறைவேற்றினார் ரகுமான்.
இதேபோல கேரளாவில் பல இடங்களில் நடிகர் ரகுமானின் ரசிகர்கள் பலருக்கும் பலவிதமான சமூக உதவிகளை செய்து அவரது பிறந்த நாளை கொண்டாடினார்கள்.
Fans celebrated his birthday by singing Rahman song