‘அழகி’ படத்தில் சண்முகத்திற்கு காதலி இருந்தது போல் வளர்மதிக்கு காதலன் இருந்தால்..; பார்த்திபன் பேச்சு

‘அழகி’ படத்தில் சண்முகத்திற்கு காதலி இருந்தது போல் வளர்மதிக்கு காதலன் இருந்தால்..; பார்த்திபன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அழகி’ படத்தில் சண்முகத்திற்கு காதலி இருந்தது போல் வளர்மதிக்கு காதலன் இருந்தால்..; பார்த்திபன் பேச்சு

தனலட்சுமியை பிடிக்குமா ? வளர்மதியை பிடிக்குமா ?” பார்த்திபனிடம் கேள்வி கேட்ட தேவயானி, அழகி-2’வை இயக்குவது தங்கர் பச்சானா ? பார்த்திபனா ?

கடந்த தலைமுறையினர் பார்த்து ரசித்த பல நல்ல தரமான படைப்புகள் தற்போது டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.. அப்படி இன்றைய இளைஞர்கள் பார்க்கவேண்டிய அன்றைய நல்ல படங்களின் பட்டியலில் ‘அழகி’ படத்திற்கு ஒரு தனி இடம் உண்டு..

கடந்த 2022ல் வெளியாகி இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரின் மனதையும் கரைய வைத்த ‘அழகி’ இப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு இன்று (மார்ச்-29) திரையரங்குகளில் ரீ ரிலீஸாகியுள்ளது..

இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அழகி படத்தின் தயாரிப்பாளர் D.உதயகுமார், நாயகன் பார்த்திபன், நாயகி தேவயானி, இளம் வயது பார்த்திபனாக நடித்த சதீஷ் ஸ்டீபன், ராமு சரவணன், கட்டையன், கட்டச்சி கதாபாத்திரங்களில் நடித்த செல்வம், சரஸ்வதி, அழகி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் K.M.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம், பாடலாசிரியர் கருணாநிதி, இணை இயக்குநரும், சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் தங்கர் பச்சான் பாராளுமன்ற தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக போட்டியிடுவதால் தேர்தல் பணிகளில் இருப்பதாலும் நந்திதா தாஸ் மும்பையில் இருப்பதாலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இயலயவில்லை என்பதை தொகுத்து வழங்கிய சுதர்சன் குறிப்பிட்டார்.

பாடலாசிரியர் கருணாநிதி பேசும்போது…

“இளையராஜாவின் இசையில் பாடல்கள் படத்திற்கு தூணாக இருந்தன. இந்தப்படத்தில் சமூகத்தின் பல பிரச்சனைகளை இயக்குநர் தங்கர் பச்சான் சொல்லியிருக்கிறார். நடிகைகளின் சிவாஜி என்றால் தேவயானி தான்” என பாராட்டினார்.

கட்டையன் கதாபாத்திரத்தில் நடித்த செல்வம் தற்போது இந்தியன் கப்பற்படை வீரராக பணியாற்றி வருகிறார். அவர் பேசும்போது..

“22 வருடங்கள் கழித்து இந்தப்படம் மறு பொழிவு பெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவரமே தெரியாத வயதில் எங்களை அழைத்து வந்து வசனங்கள் சொல்லிக் கொடுத்து இப்படி ஒரு அற்புதமான படத்தை எடுத்த தங்கர்பச்சான் சாருக்கு நன்றி. இரவின் நிழல்களாக இருந்த எங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்காக இந்த படத்திற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.

கட்டச்சி கதாபாத்திரத்தில் நடித்த சரஸ்வதி பேசும்போது…

“நான் இப்போது மூன்று குழந்தைகளுடன் குடும்பத்தை கவனித்துக் கொண்டு இருக்கிறேன். நான் நடித்த படத்தை மறுபடியும் என் குழந்தைகளுடன் பார்ப்பது மிகப்பெரிய சந்தோஷம். தங்கர் பச்சான் சார் 22 வருடம் கழித்து என்னை தொடர்பு கொண்டு அழைத்தார். அன்று இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை. அவருடைய ஞாபகத்தில் நான் இருப்பேனா என்கிற சந்தேகம் இருந்தது. இங்கே வந்த சமயத்தில் அவரை பார்க்க முடியவில்லை என்கிற ஒரே ஒரு வருத்தம் மட்டும்தான் இருக்கிறது” என்று கூறினார்

அழகியை ரீ ரிலீஸ் செய்யும் மீனாட்சி சுந்தரம் பேசும்போது, “இதற்கு முன்பு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தை ரிலீஸ் செய்தேன். 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது. அதன் பிறகு காதலர் தினத்தன்று 96 படத்தையும் ரிலீஸ் செய்தேன் அந்த படத்திற்கு சரியாக தமிழகம் முழுவதும் 96 தியேட்டர்கள் அமைந்தது. அதேபோல இந்த அழகி படமும் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு சென்று சேர வேண்டும் என இதன் ரீ ரிலீஸ் பணிகளில் இறங்கினேன். தமிழகத்தில் 50 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது. இன்றைய இளைஞர்களுக்கு தங்களது கடந்த காலத்தை நினைவு கூறுவதற்கு ஒரு ஆதாரமாக இந்த படம் இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

அழகி படத்தின் இணை இயக்குநரும் தற்போதைய சின்னத்திரை இயக்குனர் சங்கத்தின் தலைவருமான தளபதி பேசும்போது…

“படம் வெளியாகி 22 வருடம் ஆகியும் கூட இப்போது வரை இந்த படம் குறித்து பல தகவல்களை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் துவங்கிய காலத்தில் நானும் தங்கர் பச்சான் இருவரும் தயாரிப்பாளர் உதயகுமாரை சந்தித்து இந்த கதையை கூறி அன்றே அவரிடம் சம்மதம் பெற்றோம். இந்த படத்திற்கு முக்கிய நட்சத்திரங்களை எளிதாக தேர்வு செய்து விட்டோம்.. ஆனால் சிறுவயது கதாபாத்திரங்களை தேடுவதற்காக பல பள்ளிக்கூடங்களுக்கு நேரிலேயே சென்று மாணவர்களை தேர்வு செய்தோம். அப்படி நாங்கள் ஒரு பள்ளிக்கு சென்ற போது எங்களைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினோம். அப்படியே பார்த்திபன் சார் சாயலில் அச்சு அசலாக இருந்த அவரை பார்த்து ஆச்சரியப்பட்டு போனோம். ஆனால் அவர் உண்மையிலேயே தூங்கவில்லை என்பதும் எங்கே பார்த்திபன் போல சாயலில் இருக்கும் தன்னை பார்த்தால் கூப்பிட்டு விடுவார்களோ என்று பயத்தில்தான் அப்படி செய்ததாக பின்னாளில் கூறினார்.

அதேபோல இளம் வயது நந்திதா தாஸ் கதாபாத்திரத்தில் நடித்த மோனிகா தேர்வு செய்யப்பட்டதும் கூட ஒரு சுவாரஸ்யம் தான். கிட்டத்தட்ட அதே வயதில் உள்ள 25 பெண்களை ஆடிஷன் செய்து அதில் ஜெனிபர் என்கிற ஒருவரை தேர்ந்தெடுத்து மறுநாள் படப்பிடிப்பிற்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தோம். அப்போது ஏதேச்சையாக நடிகர் சங்கம் சென்றபோது அங்கிருந்த ஒருவர் மூலமாக மோனிகாவின் புகைப்படம் கிடைத்தது பின்பு அவரை வரவழைத்து ஆடிசன் செய்த போது நந்திதா தாஸின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாக இருந்தார். அதன்பிறகு மறுநாள் நேராக படப்பிடிப்பிற்கு கிளம்பி வந்தார்.

இந்தப் படத்திற்கான வேலைகளை துவங்கிய போது நாயகியாக நடித்த நந்திதா தாஸ் என்னை அழைத்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறினார். காரணம் எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது.. குறைவாகத்தான் உங்களுக்கு வசனம் இருக்கும் என சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்போது அதிகப்படியான வசனங்களை எனக்கு அனுப்பி உள்ளீர்கள் என்று கூறினார். பிறகு அவர்களை சமாதானம் செய்து வசனங்களை இன்னொரு வெர்ஷன் எழுதி அவரை நடிக்க வைத்தோம்.

பார்த்திபன் சார் கூட சில முறை கோபித்துக் கொண்டு சென்றுள்ளார். அவரை நான் தான் சமாதானப்படுத்தி அழைத்துப்பு வந்தேன். தேவயானி மேடத்திற்கு கூட அந்த நேரத்தில் ஒரு சிறிய கேப் விழுந்தது (இப்படி அவர் கூறியவுடனே அவரை திரும்பிப் பார்த்த தேவயானி, என்ன கேப் விழுந்தது ? என் திருமணமானதும் உடனே நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் படம் இதுதான்.. எந்த ஒரு கேப்பும் இல்லை என்று பதில் கொடுத்தார்). இந்த படம் தயாராகி முடிந்ததும் அப்போது முன்னணியில் இருந்த ஒரு தயாரிப்பாளருக்கு தனியாக படத்தை திரையிட்டு காட்டினோம். படத்தைப் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் சென்ற அவர் ஒரு வாரம் தயாரிப்பாளரை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அலைக்கழித்த பின்னர் எதற்காக இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள். இனிமேல் இந்த படத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டாம். அது கூட நஷ்ட்டமாகத்தான் முடியும் என்று கூறினார். அப்போது தயாரிப்பாளர் எந்த அளவிற்கு வேதனைப்பட்டார் என்பதை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அதற்குப் பிறகு பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் இந்த படத்தை பார்த்தார்கள். பார்த்த அனைவருமே படம் முடிந்து தங்களை அறியாமல் கண்களை துடைத்துக் கொண்டு அழுததை நான் பார்த்தேன். ஆதலால் படம் உடனடியாக விற்றுவிடும் என நினைத்தால் அனைவருமே தயக்கம் காட்டினார்கள். அதை எல்லாம் தாண்டி அழகி இவ்வளவு பெரிய சரித்திரம் படைத்துள்ளது. தயாரிப்பாளர் மனம் தளர்ந்த சமயத்தில் எல்லாம், இந்தப் படத்திற்கு என தனிக்கதை கிடையாது.. ஆனால் எந்த வயதில் இருக்கும் ஆண், பெண் இருவருமே இந்த படத்துடன் தங்களை எளிதாக தொடர்பு படுத்திக் கொள்வார்கள் என அவரை ஊக்கப்படுத்துவேன். இப்போது ரீ ரிலீஸின் போதுகூட அவர் சற்று தயங்கியபோது இந்த படம் வெளியான சமயத்தில் பிறக்காதவர்கள் கூட இந்த படத்தை அழகாக ரசிப்பார்கள் என்று அவருக்கு தைரியம் கொடுத்தேன்” என்று கூறினார்.

நடிகை தேவயானி பேசும்போது,

“22 வருடம் கழித்து மீண்டும் எங்கள் படம் ரிலீஸாவது ஒரு மகிழ்ச்சியான தருணம். 22 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும் போது இப்படி மீண்டும் ஒருமுறை ரீலீஸ் ஆகும் என அப்போது நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. உண்மையிலேயே இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மிராக்கிள்.

அப்போதும் நடந்தது.. இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு சந்தோஷ தருணம். ஒரு திரைப்படம் தயாரிப்பது பிரசவம் போல தான்.. 22 வருடத்திற்கு முன்பு ஒரு படத்தை சிரமப்பட்டு தயாரித்து அதை வெளியிட்டு வெற்றி பெற்ற பின்னர், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அந்த படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்கிறார் என்றால் நிச்சயமாக தயாரிப்பாளருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப். இது ஒரு சாதாரண விஷயம் கிடையாது.

இத்தனை வருடம் கழித்து நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோமே, இதுவே சந்தோசமான விஷயம். இதில் நடித்த குட்டிக்குழந்தைகள் எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். இதுபோன்ற அழகான படங்களை ரீ ரிலீஸ் செய்து இப்போது இருக்கிற இந்த தலைமுறையினருக்கு இதைக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும். அவர்கள் இதிலிருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள முடியும்.

என்னுடைய முதல் படமான காதல் கோட்டையில் தங்கர் பச்சான் சார் தான் ஒளிப்பதிவாளர். தேசிய விருது வரை அந்த படம் சென்றது. எனக்கும் பெரிய பெயர் கிடைத்து என் வாழ்க்கையிலேயே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு மறுமலர்ச்சி எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பிறகு பாரதி படம் எடுத்தபோது அதில் என்னை செல்லமா கதாபாத்திரத்தில் நடிக்க சொன்னதே தங்கர் பச்சான் தான். இதேபோல அவருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளேன். மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர்.

அவரது ஒளிப்பதிவே ஒரு பெயிண்டிங் போல இருக்கும். அவருடைய ஒளிப்பதிவில் நாம் மேக்கப் போடவே தேவையில்லை. இயல்பாக வந்து நடித்துவிட்டு போகலாம். உணர்வுகளுடன் விளையாடக்கூடிய ஒரு படைப்பாளி அவர்.

என் திருமணம் முடிந்த சமயத்தில் இந்த படத்தில் நடிக்கும்படி தங்கர் பச்சான் கேட்டார். என்னதான் காதல் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் ஒரு மனைவி தனது கணவனை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்கிற அந்த கதாபாத்திர வடிவமைப்பு எனக்கு ரொம்பவே பிடித்தது. அந்த உணர்வு எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

ஒரு உண்மையான கதாபாத்திரம் தான் வளர்மதி. அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். அந்த அளவிற்கு அவர் படைப்பின் மீது நம்பிக்கை இருந்தது. இந்த படத்தை என்னுடைய மகள்களுடன் சேர்ந்து திரையரங்கில் சென்று பார்க்கப் போகிறேன். இது எல்லோருக்கும் கிடைக்காத ஒன்று எனக்கு கிடைத்திருக்கிறது. நான் ரொம்பவே கொடுத்து வைத்தவள் என்று நினைக்கிறேன். பார்த்திபன் சாருடன் இணைந்து பல நல்ல வெற்றி படங்களில் நடித்துள்ளேன். அதில் அழகியும் ஒன்று..

இப்போது பார்த்திபன் சாரிடம் ஒரு கேட்கிறேன்.. உங்களுக்கு வளர்மதி பிடிக்குமா ? தனம் தான் பிடிக்குமா ?” என்கிற ஒரு கிடுக்கிப்பிடி கேள்வியையும் வீசினார்!
கேள்வியை கேட்டதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தன்னை மறந்து கைதட்ட, இப்பவே பதில் சொல்லுங்க சார் என்று தேவயானி கேடக.. நான் பேசும் போது பதில் சொல்கிறேன் என்று சொன்னார்.

தயாரிப்பாளர் உதயகுமார் பேசும்போது…

“இந்த படத்தில் நடித்த அத்தனை பேரின் முகத்திலுமே அந்த மகிழ்ச்சி தெரிகிறது. இதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள். பண்ருட்டியில் சின்னச்சின்ன வீடுகளில் தங்கி கூட நடித்தார்கள். 22 வருடம் கழித்து இவர்களை எல்லாம் பார்க்கும்போது நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை பார்ப்பது போன்ற சந்தோச உணர்வு தான் ஏற்படுகிறது.

இந்த அழகி படத்தை ஏன் ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என தோன்றியது என்றால் என்னுடைய டீனேஜ் வயதில் இருக்கும் பேரன்கள் எல்லோரும் இந்த அழகி படத்தை டிவியில் தான் பார்ப்பார்கள்.. அப்போது இதை நாங்கள் பெரிய திரையில் பார்க்க முடியாதா தாத்தா என்று என்னிடம் கேட்பார்கள். என் நண்பர்களும் இதே கேள்வியை கேட்டார்கள். அதன் பிறகு தங்கர்பச்சான், தளபதி ஆகியோரிடம் இது பற்றி பேசினேன்.. 20 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்ததால் இதன் ரீ ரிலீஸ் பற்றி கேட்டு அறிந்து கொண்டு இப்போது அதற்கான 4K, 5.1 சவுண்ட் போன்ற டிஜிட்சல் வேலைகளை எல்லாம் செய்து முடித்து திரைக்கு கொண்டு வந்துள்ளோம்.

அன்றைய பள்ளிக் காலங்களில் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் நண்பர்களுடன் சேர்ந்து மைதானத்தில் விளையாடுவது, ஆற்றில் குளிப்பது என பல விஷயங்கள் கிடைத்தன. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு அது எதுவுமே கிடைக்கவில்லை. இப்போது குழந்தை பருவத்திலேயே அவர்களுக்கு பலவிதமான பாரத்தை கொடுக்கிறோம். அதேபோல அன்றைய காலகட்டத்தில் காதலை சொல்ல எப்படி எல்லாம் தயங்கினார்கள் ? சொல்லாமலேயே பல காதல் எப்படி போனது ? இன்று உடனடி காதல், உடனடி காதல் முறிவு என மாறிவிட்டது. பழைய படங்களை டிவியில் கூட பார்க்க இப்போது இருப்பவர்கள் விரும்புவதில்லை. அதனால்தான் இப்போது இருக்கும் இளைஞர்களுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக தான் இந்த அழகியை ரீ ரிலீஸ் செய்கிறோம்” என்று கூறினார்.

நடிகர் பார்த்திபன் பேசும்போது…

“தங்கர் பச்சான் ஒரு அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர இந்த படத்தை வேறு யாராலும் இந்த அளவிற்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. என்னிடம் வந்து ஒரு நல்ல படம் எடுப்பதற்கு என்னை விட்டால் வேறு இயக்குனர் யார் இருக்கிறார் சார் என்று என்னிடமே கேட்பார். நானே ஒரு டைரக்டர்.. என்னிடமே அப்படி கேட்பார். இப்போது அவர் தேர்தல் பிரச்சாரத்திலும்.. என்னை விட்டால் உங்களுக்கு நல்லது செய்ய வேறு யாராவது இருக்கிறார்கள் என்று அதையேதான் பேசிக் கொண்டிருப்பார்.

அதனால் நிச்சயம் அவர்தான் அந்த தொகுதியின் நாளைய எம்பி. அவருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

இங்கே தளபதி பேசியது எல்லாமே உண்மை விஷயங்கள்தான்.. ஆனால் உண்மைக்கு நாட்டில் மரியாதையே கிடையாது. பொதுவாகவே விநியோகஸ்தர்களுக்கு என ஒரு எண்ணம் இருக்கும். ஆனால் அதை அழகி போன்ற படங்களின் மூலமாக உடைத்தது எல்லாம் ரசிகர்கள் தான்.

நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பெயர் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு பெயர் ‘அழகி’ தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவிற்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்த படத்தின் ரீ ரிலீஸ். காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால் தான் இந்த அழகியும் தோற்கவில்லை.

சண்முகத்திற்கு ஒரு காதல் இருந்தது போல வளர்மதிக்கும் அப்படி ஒரு காதல் இருந்து அதை சொல்லியிருந்தால் சண்முகம் நெருங்கி போயிருப்பார்.

பொதுவாக பெண்கள் குடும்பத்தை கவனித்து கொண்டு, கணவனை எல்லாவிதமாகவும் அரவணைத்து செல்வதால் காதலியை விட மனைவியை பலருக்கும் பிடிக்கும். இந்த போஸ்டரில் கூட நந்திதா தாஸின் படத்தை விட தேவயானியின் படத்தை பெரிதாக வைத்திருக்க வேண்டும். காரணம் நமக்கு கிடைக்காத ஒரு விஷயத்தின் மீது மிகப்பெரிய பூரிப்பு இருக்கிறது. ஆனால் கிடைத்த விஷயத்தின் மகிமை பற்றி நாம் புரிந்து கொள்வதே கிடையாது. அப்படி ஒரு மகிமையான கதாபாத்திரம் தான் வளர்மதி என நான் எப்போதுமே சொல்வேன். (உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா தேவயானி ?) . தேவயானி கதாபாத்திரமும் அவர் அதில் நடித்த விதமும் சிறப்பாக இருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய இரண்டு நாட்களிலேயே நந்திதா தாஸ் என்னிடம் எனக்கு இது செட் ஆகாது போல தெரிகிறது, நான் கிளம்புகிறேன் என்று கூறினார். ஆனால் படப்பிடிப்பில் நான் அவருக்கு வசனங்கள் சொல்லித்தந்து அந்த படத்தின் நடிக்க உதவிஎதை சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த பலரும் இதில் பார்த்திபனின் காட்சிகளை அதிகப்படுத்துங்கள், அவருடைய குழந்தை பருவக் காட்சிகளை குறையுங்கள் என்று சொன்னார்கள்.

ஆனால் அந்த குழந்தைகளின் போர்ஷன் தான் படத்தின் வெற்றிக்கு மிகமிக முக்கிய காரணம். அதை மனதில் வைத்து தான் தற்போது 13 குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் டீன்ஸ் என்கிற ஒரு அட்வென்சர் த்ரில்லர் படத்தை எடுத்து வருகிறேன். அடுத்த மாதம் அது வெளியாகிறது.

அழகி படத்தை தேவயானி ஒரு மேஜிக் என்றார். அதையே தான் தமிழில் கண் கட்டு வித்தை என்று சொல்வேன். சண்முகம் போன்ற ஒரு கால்நடை மருத்துவர் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது காதலியை பார்த்தால் ஒரு வேலைக்காரியாக கொண்டு போய் சேர்த்து விட்டிருக்க மாட்டார்.

ஒரு குடிசை எடுத்து ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்து அங்கே அவளை கவுரவமாக வைத்திருக்க முடியும். இந்த சந்தேகத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே தங்கர் பச்சானிடம் கேட்டேன். ஆனால் இது காதலியை பற்றிய கதை இல்லை, ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் காதலைப் பற்றிய கதை என்று கூறி கேள்விகள் கேட்காமல் நடிக்கும்படி கூறிவிட்டார். அதுதான் எத்தனை வருடங்கள் கழித்தும் இந்த படத்தை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

அழகி ரீ ரிலீஸில் இந்த படம் வெற்றி அடைந்து அழகி-2வாக இந்த படம் மாற வேண்டும் என்பது. தங்கர்பச்சானின் நீண்ட நாள் ஆசை.. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட அழகி-2க்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.

பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பார்த்திபன் & தேவயானி பல சுவாரஸ்யமான பதில்களை அளித்தனர்,

“உங்களுக்கு நிஜத்தில் இதுபோன்று காதலிகள் இருந்திருக்கிறார்களா ? அவர்களை மீண்டும் பார்க்கும் அனுபவம் ஏற்பட்டதா ? என்று பார்த்திபனிடம் கேட்டதற்கு,
“நந்திதா தாஸை ரோட்டோரத்தில் பார்த்தபோது எனக்கு என்ன உணர்வு ஏற்பட்டதோ, அதுபோல பலமுறை நிஜத்திலும் ஏற்பட்டுள்ளது.

இன்னும் அது மாதிரி நிறைய முறை ஏற்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்னுடைய அடுத்த புத்தகத்தின் பெயர் கூட ‘வழிநெடுக காதல் பூக்கும்’ என்பதுதான்.. காதல் என்பது ஒரு முறை மட்டும் வந்து போய்விடாது. அது வந்து கொண்டே இருக்கும். அழகி படத்தின் ரீ ரிலீஸ் மிகப்பெரிய வெற்றி அடைந்தால் தயாரிப்பாளர் எங்களுக்கு ஒரு சின்ன வீடாவது வாங்கி கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.
ஒரு பக்கம் புதிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காத நிலையில் இப்படி பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டபோது, “எப்போதுமே நல்ல விஷயங்கள் பழையதாக இருந்தாலும் திரும்பத் திரும்ப அலைகள் போல மீண்டும் மீண்டும் தேடி வரும்.

இந்த அழகி படம் கூட தேவதாஸின் இன்னொரு வெர்ஷன் தான். இது ஒரு சிறந்த மைதானம். யார் வேண்டுமானாலும் விளையாடலாம்.. பொங்கல் தீபாவளி சமயத்தில் ஏன் பெரிய படங்களை ரிலீஸ் செய்கிறார்கள் ? அந்த சமயத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்யுங்கள்.. காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதே ஒரு தீபாவளி, பொங்கல் போல பண்டிகை தானே..?

என்னுடைய புதிய பாதை படத்தை ரீ ரிலீஸ் செய்யாமல் அதையே மீண்டும் படமாக எடுக்கப் போகிறேன். 33 வருடங்கள் கழித்து மீண்டும் நானே ஹீரோவாக நடித்து அந்த படத்தை ரீமேக் செய்யப் போகிறேன். அதற்கு ‘டார்க் வெப்’ என்று பெயர் வைத்துள்ளேன். என்னுடைய ‘டீன்ஸ்’ படம் வெளியான பிறகு அந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பேன்.

ஒரு நடிகையாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அதை விட்டுவிட்டு ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக சென்று தேவயானி வேலை பார்த்தாரே அவர் தான் ‘அழகி’.. இல்லையில்லை பேரழகி. அழகி படத்தின் வெற்றிக்கு பிறகு நானும் நந்திதா தாஸும் அடிக்கடி பேசும் சமயத்தில், நான் ஒரு கதையை தயார் செய்தேன்.

ஆனால் அது அழகி 2 அல்ல. ஆனால் அதில் சண்முகம், தனலட்சுமி மட்டுமே இருப்பார்கள். அந்த கதையை கேட்டு அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அப்போது தங்கர் பச்சான் அதற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். ‘அழகி 2’ என்கிற பெயரில் எடுக்கக் கூடாது என கூறிவிட்டார். ஆனால் இப்போதும் நந்திதா தாஸ் இந்த படத்தை எப்போது துவங்குகிறீர்கள் எனக் கேட்டு வருகிறார். தங்கர் பச்சன் சார் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என நான் வாழ்த்தியதற்கு காரணமே இந்த அழகி 2 படத்தை நான் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான்.. நான் ஒரு பயங்கர சுயநலவாதி.

அழகியின் 51 சதவீதம் இளையராஜா சார் தான்.. மீதி 49 சதவீதம் தான் நாங்கள்.

இந்த காலகட்டத்தில் ரஜினி சார் மட்டுமே பத்தாது என்று இந்த பக்கம் விஜய் சேதுபதி, அந்த பக்கம் இன்னொரு பெரிய ஹீரோயின் தேவைப்படுகிறது.

மணிரத்னம் பத்தாது என்று இந்த பக்கம் கமல்ஹாசன் தேவைப்படுகிறார்.. அவர் பத்தாது என்று பகத் பாஸில் தேவைப்படுகிறார். இப்படி பெரிது பெரிதாக போராடிக் கொண்டிருக்கும்போது நான் வெறும் 13 திறமையாளர்களை மட்டுமே நம்பி ‘டீன்ஸ்’ என்கிற ஒரு படத்தை எடுத்து வருகிறேன்.

இந்த படத்தை பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் பெரிய அளவில் மரியாதை கொடுத்தால் அழகி படத்தில் இதேபோல் நடித்த இளைஞர்கள் பட்டாளத்தை வைத்து ஒரு படம் எடுப்பேன்” என்று கூறினார்.

Parthiban speaks about Devayani and Azhagi

காதலிப்பதிலும் கோபத்திலும் எக்ஸ்ட்ரீம் நிலையில் நான்… – விஜய் தேவரகொண்டா

காதலிப்பதிலும் கோபத்திலும் எக்ஸ்ட்ரீம் நிலையில் நான்… – விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதலிப்பதிலும் கோபத்திலும் எக்ஸ்ட்ரீம் நிலையில் நான்… – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா நடிக்கும் தி ஃபேமிலி ஸ்டார் பட பத்திரிக்கையாளர் சந்திப்பு..

தெலுங்கிலும் தமிழ் திரையுலகிலும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் விஜய் தேவரகொண்டாவின் ‘ தி ஃபேமிலி ஸ்டார்’. இந்தத் திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க ஜோடியாக மிருனாள் தாக்கூர் நடிக்கிறார்.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கே. யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதை முன்னிட்டு படக்குழுவினர் தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இப்படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது விஜய் தேவரகொண்டா, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் தில் ராஜு பேசுகையில்…

‌” விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படத்திற்கு பிறகு, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படத்தை இரண்டாவது படமாக தயாரித்திருக்கிறேன்.

இந்த திரைப்படம் நடுத்தர வர்க்கத் இளைஞரின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்களுடைய குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுபவர்கள் தான் ‘தி ஃபேமிலி ஸ்டார். இதை வலியுறுத்தும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது.

இதில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிருனாள் தாக்கூரும் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ‘கீதா கோவிந்தம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் பரசுராம் பெட்லாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த காபி இருக்கிறது. இட்லி சாம்பார் இருக்கிறது. தாலி இருக்கிறது. .ஃபுல் மீல்ஸ் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து மக்களின் பொருளாதார ஸ்டேட்டஸ் உயரவும், குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கவும் போராடும் ஒரு இளைஞனின் கதை தான் இப்படத்தின் கதை.

இந்தப் படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் வகையில் காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்சன் என கமர்சியல் விசயங்கள் இடம் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

என்னுடைய நண்பரும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்வரூப் – இந்த படத்தை தமிழக முழுவதும் வெளியிடுகிறார்.‌ விஜய் தேவரகொண்டாவும் – பரசுராமும் இணைந்து நிகழ்த்தி இருக்கும் மேஜிக்கைக் காண ஏப்ரல் ஐந்தாம் தேதி திரையரங்கத்தில் வருகை தந்து ஆதரவு தாருங்கள்” என்றார்.

படத்தின் நாயகனான விஜய் தேவரகொண்டா பேசுகையில்…

”தமிழ் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த போது அந்தப் பயணம் மிகவும் இனிமையாக இருந்தது. சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

என்னுடைய நடிப்பில் வெளியான முதல் படம் ‘அர்ஜுன் ரெட்டி’க்கு நீங்கள் அளித்த ஆதரவு மறக்க இயலாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும், தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன்.

இயக்குநர் பரசுராமுடன் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து ‘தி ஃபேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்திருக்கிறேன். இது அந்த படத்தை விட கூடுதல் உயரத்திற்கு என்னை அழைத்துச் செல்லும் என நம்புகிறேன்.

இதற்கு முன் எனது நடிப்பில் வெளியான ‘குஷி’ திரைப்படத்திற்கும் உங்களின் ஆதரவு பிரமிப்பாக இருந்தது. இதே போல் இந்த படத்திற்கும் உங்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடுத்தர வர்க்கத்தை இளைஞராக நடித்திருக்கிறேன். அன்பு செலுத்துவதிலும் … காதலிப்பதிலும்… நேசிப்பதிலும்… கோபத்திலும் ஒரு எக்ஸ்ட்ரீம் நிலையை எதிர்கொள்பவன்தான் இப்படத்தில் நாயகன்.‌ இது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

படத்தின் நாயகியான மிருனாள் தாக்கூர் அற்புதமான ஒத்துழைப்பை வழங்கிய சக கலைஞர். மும்பையில் வேறு ஒரு பணியில் இருப்பதால், அவரால் இங்கு வர இயலவில்லை. இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து, தன்னுடைய நடிப்பு முத்திரையை பதித்திருக்கிறார். அவருக்கும் படக்குழுவின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தத் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி அன்று தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது.” என்றார்.

படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்வரூப் பேசுகையில், ” தயாரிப்பாளர் தில் ராஜு அருமையான நண்பர். இந்தப் படம் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் ஆசீர்வதிக்கப்பட்டவராகவும் உணர்கிறேன்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு படக்குழுவினர் பதிலளித்தனர்.

Vijay Devarakonda speaks about The family Star movie

உலகத்தில் இதுவே முதன்முறை..: 2 நாய்கள் நடித்த படம் CLEVER

உலகத்தில் இதுவே முதன்முறை..: 2 நாய்கள் நடித்த படம் CLEVER

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த படம் |
உலக திரைப்பட வரலாற்றில் புதுமுயற்சி!.

இரண்டு நாய்கள் மட்டுமே நடித்த ஒரு முழு நீள திரைப்படத்தை கார்த்திகேயன் பிரதர்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் “கிளவர் ” என்ற படத்தை திப்பம்மாள் தயாரித்துள்ளார்.

தேவர் பிலிம்ஸ் படங்களிலும்
இராமநாராயணன் இயக்கிய படங்களிலும் நடிகர்களுடன் பாம்பு, குரங்கு, நாய், மாடு முதலான விலங்குகள் நடித்து பல படங்கள் வந்துள்ளன. அதன் பிறகு விலங்குகளை வைத்து ஒரு சில படங்களே வந்துள்ளன.

சிறிய இடை வெளிக்கு பிறகு
கிளவர் என்ற படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ளன. மதுரை மாவட்டத்தில் உள்ள டி.இராமநாதபுரம் கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வளர்ந்துள்ள இந்தப் படத்திற்கு வாசு ஒளிப்பதிவையும் முத்துமுனியசாமி படத்தொகுப்பையும், ரகுநாத் இசையையும் , தீபக்கார்த்திகேயன் , சஞ்சய் கார்த்திகேயன் இருவரும் இணைத்தயாரிப்பையும் கவனித்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள செந்தில்குமார் சுப்ரமணியம் படத்தை பற்றி கூறுகையில்..

” உலக திரைப்பட வரலாற்றில் முதல்முறையாக இரண்டு நாய்களை மட்டுமே நடிக்க வைத்து இந்தப் படத்தை இயக்கி உள்ளேன். அம்மா நாயிடமிருந்து குட்டி நாயை ஒரு சைக்கோ திருடி சென்றுவிடுகிறான். தனது குட்டியை மீட்க அம்மா நாய் எப்படி கண்டுபிடித்து மீட்டு வருகிறது என்பதை கதைக்களமாக்கி அதை விறுவிறுப்பான திரைக்கதையில் திகிலும், திரில்லும் கலந்து படத்தை டைரக்ட் செய்துள்ளேன்.

புது முயற்சியாய் இந்த படத்தில் இரு நாய்களை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்கவில்லை. கமர்ஷியலாக படத்தை மக்கள் பார்த்து ரசிக்கும்படி என் முதல் படமான கிளவர் படத்தை இயக்கி உள்ளேன். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது” என்று இயக்குனர் செந்தில்குமார் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

First time in World Only 2 dogs acted in Clever movie

ஹோலியை ஜாலியாக கொண்டாட ‘ஃபேமிலி ஸ்டார்’ கொடுத்த மதுரமு கதா

ஹோலியை ஜாலியாக கொண்டாட ‘ஃபேமிலி ஸ்டார்’ கொடுத்த மதுரமு கதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோலியை ஜாலியாக கொண்டாட ‘ஃபேமிலி ஸ்டார்’ கொடுத்த மதுரமு கதா

ஹோலி கொண்டாட்டமாக ஃபேமிலி ஸ்டார் படத்திலிருந்து ‘மதுரமு கதா’ எனும் மூன்றாவது சிங்கிள் பாடல்..

நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் “ஃபேமிலி ஸ்டார்” திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதா’ பாடலின் லிரிகல் வீடியோ, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள மை ஹோம் ஜூவல் கேட்டட் கம்முயூனிட்டியில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஹீரோ விஜய் தேவரகொண்டா, நாயகி மிருணாள் தாகூர், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கலந்து கொள்ள, மை ஹோம் ஜூவல் குடும்பத்தினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஹோலி பண்டிகை நாடகம், நடனம் மற்றும் திரைப்படக் குழுவினருடன் புகைப்படங்கள் என கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தயாரிப்பாளர் தில் ராஜு…

“எங்கள் ‘ஃபேமிலி ஸ்டார் ‘ படக்குழுவை உற்சாகமாக வரவேற்ற அனைத்து குடும்பங்களுக்கும் நன்றி. ‘பேமிலி ஸ்டார்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகிறது.

‘பேமிலி ஸ்டார்’ என்றால் என்ன என்பதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டேன். தங்கள் குடும்பத்தை உயர்த்த கடுமையாக உழைக்கும் ஒவ்வொருவருமே ‘பேமிலி ஸ்டார்’ தான்.

இந்த கதையை முதலில் கேட்டது விஜய் தான். பரசுராம் தொலைபேசி வழியே இந்த அட்டகாசமான கதையை என்னிடம் சொன்னார்.

கதையைக் கேட்ட 15 நிமிடங்களில் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். நடுத்தர குடும்பங்களை பிரதிபலிக்கும் அழகான கதை இது.

நடுத்தர குடும்பத்தின் அனைத்து வகை உணர்ச்சிகளையும், விஜய்யின் கதாபாத்திரத்தின் வழியே படம்பிடித்துள்ளார் இயக்குநர். பாடல்கள், வசனங்கள் மற்றும் ஹீரோவின் பழக்கவழக்கங்கள் என இப்படத்தின் அனைத்து அம்சங்களும் உங்கள் சொந்த வாழ்க்கையை பிரதிபலிக்கும்படி இருக்கும். வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி, பார்வையாளர்கள் குடும்பங்களோடு திரையரங்குகளுக்கு வருவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

படம் குறித்து ஹீரோ விஜய் தேவரகொண்டா கூறுகையில்…

“வண்ணங்களால் உடை கறைபட்டுவிடும் என்ற பயத்தில், பள்ளிக் காலத்தில் ஹோலி பண்டிகையை தவிர்த்து வந்தேன், ஆனால் தேர்வுக்காலத்தின் போது அனைவரும் கலர் கலராக இருப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

ஆனால், இங்கு ஹோலியை உங்களுடன் கொண்டாடுவது தான் உண்மையான கொண்டாட்டமாக இருக்கிறது. இப்போது உங்கள் தேர்வுகள் முடிந்துவிட்டதால், ஏப்ரல் 5 ஆம் தேதி எங்களுடன் திரையரங்குகளில் ‘பேமிலி ஸ்டார்’ படத்தை பார்க்க வாருங்கள். இது நம்மைப் போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் கதை, குடும்பத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களின் கதை. ஒரு நல்ல சினிமா அனுபவம். என்றார்.”

நாயகி மிருணாள் தாகூர் கூறுகையில்…

“நான் வழக்கமாக மும்பையில் ஹோலி கொண்டாடுவேன், ஆனால் இந்த முறை, ‘ஃபேமிலி ஸ்டார்’ படக்குழுவினருடனும், உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் ஃபேமிலி ஸ்டார் குழுவின் ஹோலி நல்வாழ்த்துக்களை, உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஃபேமிலி ஸ்டாரை’ பார்த்து ரசியுங்கள் என்றார்.

ஸ்ரீமணியின் வரிகள் மற்றும் கோபி சுந்தரின் இசையமைப்பில், ஸ்ரேயா கோஷலின் குரலில் ‘மதுரமு கதா’ மூன்றாவது சிங்கிள் அழகாக அமைந்துள்ளது. பாடலின் வசீகரிக்கும் வரிகள், அதை உடனடி ஹிட் ஆக்கியுள்ளது. இதுவரை வெளியான “ஃபேமிலி ஸ்டார் ” படத்தின் அனைத்துப் பாடல்களும் உடனடி சார்ட்பஸ்டர்களாக மாறியுள்ளன.

மேலும் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘மதுரமு கதை’ பாடலும், இசை ரசிகர்களை கவர்ந்திழுத்து அதே போல் பெரிய ஹிட்டாகியுள்ளது. “ஃபேமிலி ஸ்டார்” படத்தின் டிரைலர் மார்ச் 28ஆம் தேதி வெளியாகிறது.

“ஃபேமிலி ஸ்டார்” படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற புகழ்பெற்ற பேனரின் கீழ் நட்சத்திர தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். வாசு வர்மா கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 5ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது.

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு:
ஒளிப்பதிவு: கே.யு.மோகனன்
இசை: கோபி சுந்தர்
கலை இயக்குநர்: ஏ.எஸ்.பிரகாஷ்
எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வாசு வர்மா தயாரிப்பாளர்கள்: ராஜு – ஷிரிஷ்
எழுதி இயக்கியவர் : பரசுராம் பெட்லா

Vijay Devarakonda starrer Family star 3rd single

தாய் மகள் சகோதரி மனைவி உணர்வுகளை சொல்லும் ஜெயம் ரவியின் ‘ஜீனி’

தாய் மகள் சகோதரி மனைவி உணர்வுகளை சொல்லும் ஜெயம் ரவியின் ‘ஜீனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாய் மகள் சகோதரி மனைவி உணர்வுகளை சொல்லும் ஜெயம் ரவியின் ‘ஜீனி’

ஜெயம் ரவியின் ‘ஜீனி’ ஃபர்ஸ்ட் லுக்,

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் மகிழ்விக்கும்படியான படைப்புகளை எப்போதும் கொடுத்து வருகிறார்.

இப்போது, அவர் ‘ஜீனி’ மூலம் பார்வையாளர்களுக்கு வியக்க வைக்கும் சினிமா அனுபவத்தைக் கொடுக்க இருப்பதை உறுதியளித்துள்ளார்.

ஜெயம் ரவி நடித்துள்ள இந்தப் படத்தின் வித்தியாசமான முதல் பார்வை இதற்கு சான்றாக அமைந்துள்ளது. இயக்குநர் மிஷ்கினின் ’பிசாசு’ மற்றும் ’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணீயாற்றிய அர்ஜூனன் Jr. இதில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அர்ஜுனன் Jr….

“ஜெயம் ரவியுடன் இணைந்து பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருடைய அர்ப்பணிப்பும் ஈடுபாடும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஸ்கிரிப்ட் விவாதங்கள் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். ஆனால், படப்பிடிப்பை அரை நாளில் முடித்து விடுவோம். ஒரு சரியான ஷாட்டுக்காக கூடுதலாக உழைக்கும் ஜெயம் ரவியிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம்” என்றார்.

படம் குறித்து மேலும் அவர் கூறியதாவது…

“குடும்பம் மற்றும் ரிலேஷன்ஷிப்பை மையமாகக் கொண்டு ஆக்‌ஷன், ஃபன், எமோஷன் போன்ற விஷயங்கள் கலந்து ’ஜெனி’ திரைப்படம் உருவாகி இருக்கிறது.

மேலும், படம் வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக கொண்டது என்பது அதன் முதல் பார்வையில் இருந்து தெரிகிறது.

ஒரு தாய், மகள், சகோதரி மற்றும் மனைவியின் உணர்ச்சிகளை சுற்றி படம் இருக்கும். வன்முறை, போதைப்பொருள் மற்றும் இரத்தம் இதெல்லாம் இல்லாமல் மகிழ்ச்சியான ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுப்பதுதான் என் நோக்கம். கிட்டத்தட்ட 75% படப்பிடிப்பை முடித்துள்ளோம். இன்னும் 3 பாடல்கள் மட்டுமே உள்ளன. அதோடு படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து விடும்” என்றார்.

மேலும், ஜெயம் ரவிக்கு இந்தப் படத்தில் இதுவரை பார்க்காத முற்றிலும் புதுமையான மற்றும் ஆச்சரியமான தோற்றத்துடன் கூடிய அசாதாரண கதாபாத்திரம் என்பதையும் இயக்குநர் தெரிவித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி மற்றும் வாமிகா கபி அனைவரும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. அவரது பாடல்கள் மற்றும் இசை அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் அனைவருக்கும் விருந்தாக இருக்கும் என்று படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

தி புரொடக்ஷன் ஹவுஸ் இந்த படத்தை பிரமாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படத்தைத் தயாரிப்பில் இயக்குநர் அர்ஜுனன் Jr. படத்தை இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி மற்றும் தேவயானி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்க, பிரதீப் இ ராகவ் திறமையாக படத்தை எடிட் செய்துள்ளார். யானிக் பென் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி அசத்தலாக செய்திருக்கிறார்.

Ravi Keerthy Kalyani starring Genie look goes viral

IRAVIN KANGAL EVENT ரஜினி சொன்னது போல் சிஸ்டம் கெட்டு போச்சு – பேரரசு..; ஹீரோக்கள் மாறனும்.. – உதயகுமார்

IRAVIN KANGAL EVENT ரஜினி சொன்னது போல் சிஸ்டம் கெட்டு போச்சு – பேரரசு..; ஹீரோக்கள் மாறனும்.. – உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

IRAVIN KANGAL EVENT ரஜினி சொன்னது போல் சிஸ்டம் கெட்டு போச்சு – பேரரசு..; ஹீரோக்கள் மாறனும்.. – உதயகுமார்

இரவின் கண்கள் திரைப்பட இசை வெளியீடு

Prathab Enterprises பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரதாப் தயாரிப்பில், இயக்குநர் பாப் சுரேஷ் இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும் இருக்கும் தொடர்பைச் சொல்லும் சயின்ஸ் பிக்சன் வகையில் உருவாகியுள்ள படம் “இரவின் கண்கள்”.

வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியதாவது…

Prathab Enterprises ல் அடுத்தடுத்து நிறைய நல்ல படைப்புகள் வரவுள்ளது அதில் இப்படத்தை வெளியிடச் சொல்லி என்னை அணுகினார்கள். படத்தின் ஐடியாவே எனக்கு மிகப்பிடித்திருந்தது. ஒரு செல்ஃபோன் என்ன செய்யும் என்பதே இன்றைய காலகட்டத்தில் ஆச்சரியகரமாக இருக்கிறது. அதில் ஏ ஐ வைத்து ஒரு அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. திரையரங்கில் அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

எடிட்டர் இமான் பேசியதாவது…

இது சின்ன பட்ஜெட் படம் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த படத்தைப் பெரிதாக எடுத்துச் செல்லும் தயாரிப்பாளருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

ஒளிப்பதிவாளர் கீதா கரண் பேசியதாவது…

மிக சின்னதாக ஆரம்பித்த படம், இந்த அளவு பெரிதாக எடுத்து வந்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் பாப் சுரேஷுக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்

கிரி துவாரகேஷ் பேசியதாவது…
இரவின் கண்கள் முதல் நன்றி இயக்குநர் சுரேஷ்க்கு தான். ஏ ஐ பயன்படுத்தி ஒரு வித்தியாசமான கதையை உருவாக்கியுள்ளார். பாப் சுரேஷ் நாளைய இயக்குநரில் வித்தியாசமான குறும்படங்கள் செய்தவர். அவரது பல நாள் ஆசை, இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

இசையமைப்பாளர் சார்லஸ் தனா பேசியதாவது…
எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. மிக வித்தியாசமான திரைக்கதையை இயக்குநர் உருவாக்கியுள்ளார். படத்திற்குள் நிறைய டிவிஸ்ட் ஆச்சரியங்கள் இருக்கிறது. இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள்.

டாலி ஐஸ்வர்யா பேசியதாவது…

எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைவருக்கும் நன்றி. இப்படம் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இயக்குநர் பாப் சுரேஷ், ஜினீத் என எல்லோருக்கும் நன்றி. இந்தப்படம் மிக வித்தியாசமான கான்செப்ட், மனதிற்கு நெருக்கமான மிகவும் பிடித்த படம். வளர்ந்து வரும் எங்களைப் போன்ற புதியவர்களை ஆதரிக்க வேண்டுகிறேன். இப்போது ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்

நடிகர் பிரஜன் பேசியதாவது…

இயக்குநர் என்னிடம் இப்படத்தின் கதையைச் சொன்னார் மிக அருமையாக இருந்தது. வேறொரு கதை தான் அவர் செய்வதாக இருந்தது, அந்த நிலையில் இப்பட வாய்ப்பு கிடைக்கவே இதை செய்தார். புதிய முகங்கள் மிகவும் அர்ப்பணிப்போடு உழைத்து இப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்தப்படம் வெற்றியடைந்து பிரதாப் சார் அவர்களுக்கு மிகப்பெரிய லாபம் தர வேண்டும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

இயக்குநர் பாப் சுரேஷ் பேசியதாவது…

எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இப்படம் மிக சின்னதாக ஆரம்பித்த படம் இப்படம் வெளியாகுமா என எங்களுக்கே சந்தேகம் இருந்தது, இன்று இப்படம் இந்த நிலைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை வெளியிடும் ஹரி உத்ரா அவர்களுக்கு நன்றி. பிரதாப் சாருக்கு நன்றி. சயின்ஸ் பிக்சன் ஜானரில் சுவாரஸ்யமான படம் தந்துள்ளோம், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் பிரதாப் பேசியதாவது…

எங்கள் படத்தை ஆதரிக்க வந்த அனைத்து திரை பிரபலங்களுக்கும் நன்றி. இந்த படத்தைச் சிறிய அளவில் ஆரம்பித்து இப்போது பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறோம், ஆனாலும் திரையரங்குகள் குறைவாகவே கிடைக்கும், பத்திரிகையாளர்கள் மனதை வைத்து ஏற்படத்தை பாராட்டினால் எங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும் ஒரு நல்ல திரைப்படத்தை எடுத்துள்ளோம். ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

எனக்கு பிரசாத் லேப் சொந்த வீடு போல் ஆகிவிட்டது. இப்போதெல்லாம் இயக்குநர்கள் கதை சொல்வதே இல்லை. ஆனால் அப்போதெல்லாம் கதை சொல்லும்போதே படம் பார்த்த மாதிரி இருக்கும். சிலர் கதை சொன்னது போல் படம் எடுப்பதில்லை. அங்கு தான் பிரச்சனை.

நான் அப்போது விஜய் சாரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி விட்டேன். படமும் முடிந்து விட்டது. இந்த தியேட்டரில் தான் நானும் விஜய் சாரும் திருப்பாச்சி படம் ஃபர்ஸ்ட் காபி பார்த்தோம். அப்போது விஜய் சார் நீங்க கதை சொன்னதை விட மூன்று மடங்கு பலமாக இருக்கிறது என்றார். அப்போது தான் மகிழ்ச்சி வந்தது.

இதோ இந்த இரவின் கண்கள் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும். இப்படத்தில் வித்தியாசமான கதை சொல்லியுள்ளார்கள். ஏ ஐ வைத்து வித்தியாசமாக யோசித்துள்ளார்கள். ரஜினி சார் சொன்னாரே சிஸ்டம் கெட்டுப்போச்சு என்று அது போல் பாப் சுரேஷ் சிஸ்டம் கெட்டுப்போனதை வைத்து படம் பண்ணியிருக்கிறார்.

படம் வித்தியாசமான திரில்லர் மூவி. படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

ஹாலிவுட்டில் சமீபத்தில் ஏ ஐ வைத்து நடிகரே இல்லாமல் நடிகரை ஏ ஐ இல் உருவாக்கிப் படமெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் ஹாலிவுட்டே சேர்ந்து ஏ ஐ க்கு எதிரான பெரிய போராட்டம் செய்தது.

அதனால் இனிமேல் ஏ ஐ வைத்துப் படமெடுப்பதில்லை என முடிவெடுத்து விட்டார்கள். தம்பி பாப் சுரேஷ் அந்த ஏ ஐ வைத்து, வித்தியாசமான கதையைச் சொல்லியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது அவருக்கு வாழ்த்துக்கள். இன்றைய காலகட்டத்தில் வாழ்வியலைப் படமாக எடுப்பது குறைந்து விட்டது.

இப்போதெல்லாம் ஓடிடி விற்றால் தான் படம் ரிலீஸ் செய்ய முடிகிறது. ஓடிடி உலகமெல்லாம் இருக்கக் கூடிய ஒரு தளம் அதில் படம் பார்ப்பவர்கள் இரவில் தான் பார்க்கிறார்கள் அவர்கள் அந்த இரவில் சில காட்சிகள் இருந்தால் தான் பார்க்கிறார்கள். அந்த மாதிரி காட்சிகள் படத்திலிருந்தால் தான் படம் ஓடிடி வாங்குகிறார்கள். பேரரசு படமெடுத்தால் இனி அது மாதிரி தான் படமெடுக்கவேண்டும். இன்றைக்கு வந்த ஆல்பம் பாடலில் அந்த மாதிரி மஜா காட்சிகள் இருக்கிறது. உணர்வுப்பூர்வமான படங்கள் வருவதில்லை என்கிறார்கள் ஆனால் அப்படிப் படமெடுத்தால் படம் ஓடாது.

இப்போது படத்தில் கஞ்சா, பத்துப்பேர் தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் தான் வருகிறது. பெரிய ஹீரோக்கள் மாற வேண்டும், உணர்வுப்பூர்வமான படங்களில் நடிக்க வேண்டும். இப்போதுள்ள இயக்குநர்கள் நல்ல தரமான படங்களை எடுக்க முன் வாருங்கள். மாணவர்கள் மனதில் வக்கிரத்தைப் படங்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு நடக்கும் குற்றங்கள் சினிமாவின் தாக்கம் இருக்கிறது.

இரவின் கண்கள் திறந்திருக்கிறது. படத்தின் டிரெய்லர் அருமையாக இருக்கிறது, முதல் படம் போல் தெரியவில்லை, நல்ல அனுபவம் உள்ளது போல் உருவாக்கியுள்ளார்கள். படம் பெரிய வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். டோலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : கீதா கரண்
இசை : சார்லஸ் தனா
எடிட்டிங் : இமான்
பாடல்கள் : மூர்த்தி
மக்கள் தொடர்பு : மணவை புவன்
கதை, திரைக்கதை : பாலசுப்ரமணியம் K. G
திரைக்கதையமைத்து, இயக்கி நாயகனாக நடித்துள்ளார் – பாப் சுரேஷ்.

இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Top heroes must avoid violence says RV Udhayakumar at Iravin Kangal event

More Articles
Follows