தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இளையராஜா இசையில் ஆதிராஜன் இயக்கிய படம் ‘நினைவெல்லாம் நீயடா’.
இந்த படத்தில் பிரஜின் மதுமிதா ரோஹித் யுவலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது…
“ஆதிராஜன் நீண்ட நெடுங்காலமாகவே என்னுடைய தம்பியாக உடன் வருபவர். அவர் பத்திரிகையாளராக இருக்கும்போது சில புரட்சிகள் செய்தவர். நான் சில முறை ஜெயிலுக்கு போவதற்கும் அவர்தான் காரணம்.
ஒரு பத்திரிகையாளராக இருந்ததால் ஒரு படத்தின் தோல்விக்கான அம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்து ‘சிலந்தி’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
‘நினைவெல்லாம் நீயடா’ படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கும்போதே படம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லத் தேவையில்லை. மரியாதை குறைவான டைட்டிலாக இருந்தாலும் காதலின் நெருக்கத்தை சொல்வதற்கு பொருத்தமான டைட்டில் தான்.
இப்படத்தில் இளம் ஜோடிகளைப் பார்க்கும்போது ‘அலைகள் ஓய்வதில்லை’ கார்த்திக், ராதாவை பார்ப்பது போல இருக்கிறது.
இப்போது வரை சூப்பர் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய் ஒரு புதிய கட்சியைத் தொடங்கி இருக்கிறார். தமிழ் திரையுலகம் சார்பில் அவரை வாழ்த்துகிறேன். அவர் வெற்றி பெற வேண்டும் என்றால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் செய்த தொண்டுகளில் 15% செய்ய வேண்டும்.
மக்களிடம் இறங்கி வர வேண்டும். மேடையில் இருந்து கொண்டு புஷ்ஸி ஆனந்தை அறிக்கை விடச் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 200 கோடி சம்பளத்தையும் வேண்டாம் எனக் கூறி மக்களுக்காக இறங்கி இருக்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் நல்லது செய்வார் என நம்புவோம்” என்று கூறினார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது…
“இங்கே சரியான தலைவர்கள் நிறைய பேர் இல்லை. விஜய் ஒரு நல்ல தலைவராக வர வேண்டும் என எதிர்பார்ப்போம். நான் என்றுமே விஜய்யின் விசுவாசி தான். அவர் பெரிய தலைவராக வரவேண்டும்.
இப்படத்தின் டிரைலரை பார்க்கும்போது எனக்கு ‘பன்னீர் புஷ்பங்கள்’ படம் ஞாபகத்திற்கு வந்துவிட்டது. நம்மை பள்ளி காலகட்டத்திற்கு அழைத்துச் சென்று விட்டது. இளையராஜாவின் 1417வது படம் இது.
இந்த சாதனையை இசைஞானி ஒருவரால் தான் செய்ய முடியும். நாம் சோகமாக இருக்கும் போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டு ஆறுதல் அடைந்தோம். இன்று அவர் வீட்டில் துக்கம்.. ஆண்டவன் தான் அவருக்கு ஆறுதல் தரவேண்டும். படத்தில் நடித்துள்ள யுவலட்சுமிக்கு நடிகை சுவலட்சுமியின் குடும்பப் பாங்கான தோற்றம் அப்படியே இருக்கிறது.
காதலித்து தோல்வி அடைந்தவர்கள் அப்படியே அந்த பசுமையான நினைவுகளுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 20 வருடங்களுக்குப் பிறகு காதலியைப் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் உங்களுக்கு அவரது தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சி தான் கிடைக்கும். அதன் பிறகு மனதில் பசுமையான நினைவுகள் எதுவுமே வராது” என்று கூறினார்.
இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது…
” எல்லா உணர்வுகளுக்கும் இசை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.
இந்த காதல் உணர்வு எல்லாம் அவருக்கு சாதாரண விஷயம். படத்தின் நாயகி யுவலட்சுமிக்கு இந்த பாடல் மூலமாகவே மிகப்பெரிய ரீச் கிடைக்கும்.
முன்பெல்லாம் நாங்கள் தயாரிப்பாளர்களின் இயக்குநர்களாக இருந்தோம். இப்போதைய காலம் நடிகர்களின் தயாரிப்பாளர்களாக அவர்கள் மாறிவிட்டார்கள்.
முதன்முறையாக இளையராஜா தனது ஆடியோ உரிமையை எடுத்துக் கொள்ளாமல் இவர்களிடமே கொடுத்துவிட்டார். அதுதான் இளையராஜா. விஜய் சாரைத் தொடர்ந்து எல்லா நடிகர்களும் ஒரு கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் நமக்கெல்லாம் நிறைய வேலை கிடைக்கும்” என்று கூறினார்.
Vijay should follow MGR route in politics says K Rajan