தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : மிஷ்கின், ராம், பூர்ணா மற்றும் பலர்
இயக்கம் : ஜிஆர். ஆதித்யா
இசை : அரோல் கரோலி
ஒளிப்பதிவு: கார்த்திக் வெங்கட்ராமன்
எடிட்டிங்: ஜீலியன்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு: மிஷ்கின்
கதைக்களம்…
காலை முதல் மாலை 5 மணிக்குள் நடக்கும் ஒரு கதைதான் இதன் ஒன்லைன்.
ராம் முடி வெட்டும் தொழில் செய்பவர். இவரின் பிரதான ஆயுதமே சவரக்கத்தி தான். இவரின் மனைவி பூர்ணா. இவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
பூர்ணாவின் தம்பியின் திருட்டு கல்யாணத்திற்கு தன் குடும்பத்துடன் பைக்கில் செல்கிறார் ராம்.
அப்போது ஒரு சின்ன விபத்து. அந்த காரில் மிஷ்கின் இருக்கிறார்.
அப்போது மிஷ்கின் ஒரு பெரிய தாதா என்பதை தெரியாமல் அவரை கேவலமாக திட்டு விடுகிறார் ராம்.
இதனால் மிஷ்கினின் ஆட்கள் ராமை விரட்ட அவர் ஓடிக் கொண்டே இருக்கிறார்.
அதன் பின்னர் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை நகைச்சுவையோடு பரிமாறியிருக்கிறார் டைரக்டர் ஆதித்யா.
சவரக்கத்தி வென்றதா? வெட்டுக்கத்தி வென்றதா? என்பதே க்ளைமாக்ஸ்.
கேரக்டர்கள்…
ராம் யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். தன்னால் சண்டை போட முடியாது என்பது தெரிந்தாலும், தன் குழந்தைகள் முன் அவமானப்பட முடியாமல் திருப்பி அடிக்கும்போது அப்பா ஒரு ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார்.
ஒரு வரியில் சொன்னால் பிச்சை கேரக்டரில் பிச்சி எறிந்திருக்கிறார் ராம்.
இவருக்கு இணையான கேரக்டரில் மிஷ்கின். அடிதடி தாதா என வலம் வந்தாலும் விட்டுக் கொடுத்து செல்வதில் தன் கேரக்டரை உயர்த்தியிருக்கிறார்.
சின்ன சின்ன முகபாவனைகளால் மிஷ்கின் மிளிர்கிறார்.
காது கேளாத கேரக்டரில் பூர்ணா. தன் சொந்த குரலில் பேசி அப்பாவி பெண்ணாக மனதில் நிறைகிறார்.
கர்ப்பிணியாக இருந்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசங்கள் அதகளம்.
இவர்களுடன் மிஷ்கின் அடியாட்களாக வரும் ஒவ்வொருவரும் செம. அதிலும் அந்த பச்சை டிசர்ட்க்காரர் கவனம் ஈர்க்கிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
மிஷ்கின் எழுதி பாடியுள்ள சவரக்கத்தி தங்ககத்தி பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். அரோல் கரோலி இசை ரசிக்க வைக்கிறது.
ஒரு சில இடங்களை சுற்றி சுற்றி காட்சிகள் வைத்திருந்தாலும் அதையும் போராடிக்காமல் அழகாக கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமன்.
படத்தின் இயக்குனர் ஜிஆர். ஆதித்யா என்றாலும் முழுக்க முழுக்க மிஷ்கின் படம்தான். அவரது பாணியில் சவரக்கத்தியை பட்டை தீட்டியிருக்கிறார்.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்திற்கு சென்றால் ரசிக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சி நிச்சயம் நம்மை கலங்க வைக்கும்.
சவரக்கத்தி.. தங்ககத்தி