கோப்ரா விமர்சனம் 3.25/5.; சீறும் சீயான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

கணித மூளையில் சிறந்து விளங்கும் ஒருவன் தன் எதிரிகளை தான் படித்த படிப்பை வைத்து வேட்டையாடும் கதை தான் இந்த கோப்ரா.

கதைக்களம்…

ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரைக் கொல்ல பாதிரியார் வேடத்தில் அறிமுகமாகிறார் விக்ரம். அதேபோல இந்தியாவிலும் ஒரு மாநில முதல்வரை மாறு வேடத்தில் வந்து கொள்கிறார் விக்ரம்.

இந்த இரண்டு கொலைகளுக்கும் கணித முறைப்படி ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை அறிகிறார் மேக்ஸ் மாணவி மீனாட்சி.. எனவே ஒரு ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரை எழுதுகிறார்.

அது பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தியா வருகிறார் இன்டர்போல் போலீஸ் அதிகாரி இர்பான் பதான்.

விக்ரம் செய்யும் கொலைகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார். யார் அவரை செய்ய வைக்கிறார் என்பதை உலகிற்கு தெரியப்படுத்துகிறார் கம்ப்யூட்டர் ஹாக்கர்.

இந்த சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா.? விக்ரம் தப்பினாரா? ஹேக்கர்ஸ் யார்? என்பதுதான் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

தனக்கு கொடுக்கப்படும் கேரக்டரில் முழு அர்ப்பணிப்பை கொடுப்பவர் விக்ரம். இதிலும் கொடுத்துள்ளார்.. வித்தியாசமான கெட் அப்… வித்தியாசமான குரல்.. வித்தியாசமான பாடி லாங்குவேஜ் என ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இன்டர்போல் அதிகாரியாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். நிச்சயமாக இது அவருக்கு முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். முதல் பந்தில் (படத்தில்) சிக்ஸர் அடித்திருக்கிறார்.

படத்தில் நான்கு நாயகிகள்… ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி மீனாட்சி & மியா ஜார்ஜ் ஆகியோர்.

விக்ரமை ஒருதலையாகக் காதலிப்பவராக ஸ்ரீநிதி ஷெட்டி. வழக்கமான நாயகி வேடம்தான். ஆராய்ச்சி மாணவியாக மீனாட்சி. ஸ்ரீநிதியை விட அதிகக் காட்சிகளில் வருகிறார் அதுவும் க்யூட்டாக.

இள வயது விக்ரம் காதலியாக மிருணாளினி மின்னுகிறார். இள வயது விக்ரம் கேரக்டரில் அவரின் சொந்த மகன் துருவ் நடித்திருக்கலாம். முகச்சாயலுக்கு பொருத்தமாக இருந்திருப்பார். இவருக்கு விக்ரம் வாய்ஸ் கொடுத்துள்ளார் அதுவும் சிறப்பு சேர்த்திருக்கிறது. சர்ஜன் காலித் நடித்துள்ளார்.

வில்லன் ரோஷன் மேத்யூ. பெரிய மிரட்டல் இல்லை. இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர், ஜான் விஜய், ஆனந்த் ராஜ், மியா ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பு ஓகே.

டெக்னீஷியன்கள்…

3 மணி நேரத்தை தாண்டி ஓடும் படத்தை 2 1/2 மணி நேரமாக சுருக்கியிருக்கலாம். இன்று விமர்சனங்களில் பெரும்பாலான மக்கள் சொன்ன கருத்து இதுதான்.

இரண்டு விக்ரமை மாற்றி மாற்றி காட்டுவதாலும் மாறி மாறி காட்டுவதாலும் நமக்கு குழப்பமாக தெரிகிறது. இதனால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. தெளிவாகவும் இல்லை.

அதிலும் விக்ரம் & ஆனந்தராஜ் இருவரும் கோரசாக ஒரே டயலாக்கை பேசும் காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அதிலிருந்து இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் ??

படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் பரபரப்பான ஹாலிவுட் த்ரில்லர் கோப்ரா கிடைத்திருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கிருஷ்ணன் தன் பணியில் சிறப்பு. முக்கியமாக வெளிநாட்டில் காட்டப்படும் காட்சிகள் சூப்பரோ சூப்பர். ஃபாரின் பறந்தது போல ஓர் உணர்வு.

சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயன். ஆக்ஷன் ரசிகர்களுக்கு அல்வா தான். அத்தனையும் சிறப்பு.

மேக்கிங்கில் ஹாலிவுட் படங்களை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.

ஏஆர் ரஹ்மான் இசையில் 2 பாடல்கள் கேட்கும் ரகம்.. பின்னணி இசை ரகுமான் பாணியில் இல்லை. அவர்தான் இசையமைத்தாரோ? ஆனாலும் சில இடங்களில் மிரட்டல் ரகம் தான்.

வித்தியாசமான கணித கதை… அர்ப்பணிப்பான நடிகர்… திறமையான நடிகைகள்… மிரட்டலான முதல் பாதி.. என அசத்தியிருக்கிறார் அஜய் ஞானமுத்து

பெரிய ஹீரோ விக்ரம் கிடைத்திருப்பதால் அவரை வைத்து சில கணித விளையாட்டுகளை காட்ட நினைத்து இருக்கிறார் அஜய் ஞானமுத்து.

மேக்ஸ்… சயின்ஸ்.. பல கெட் அப்… ட்வின்ஸ்.. கார்ப்பரேட் அரசியல் என அனைத்தையும் ஓவர் டோஸாக கொடுத்து விட்டார் குழப்பத்திற்குக் காரணம்.

ஆக.. இந்த ‘கோப்ரா’.. சீறும் சீயான்

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் (3.25).; ரஞ்சித்தின் காதல் (ஜா)தீ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

காதல் புனிதமானது.. எதையும் முறியடிக்கும் சக்தி காதலுக்கு உண்டு.. என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்… காதலில் ஜாதி புகுந்தால் என்ன பிரச்சனை வரும்.. அதிலும் அரசியல் கலந்தால் அதனால் யாருக்கு லாபம்? என்பதை அலசியுள்ளது இந்த நட்சத்திரம் நகர்கிறது.

மேலும் காதல் என்பது.. ஒரு ஆணுக்கு பெண்ணின் மீதும் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதும் வருவது மட்டுமல்ல. ஒரு ஆணுக்கு மற்றொரு ஆணின் மீதும் வரலாம்.. ஒரு பெண்ணுக்கு மற்றொரு பெண்ணின் மீதும் வரலாம்.. என்பதை ரஞ்சித் தன் பாணியில் சொல்லி இருக்கிறார். திருநங்கை காதலும் உண்டு.

கதைக்களம்…

ஒரு நாடக பயிற்சி கல்லூரியில் சில நட்சத்திரங்கள் இணைகின்றனர்.. அவர்கள் காதல் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்ற போது அவர்களுக்குள் ஏற்படும் காதலும் மோதலும் தான் கதை.

துஷாரா மற்றும் காளிதாஸ் ஆகியோரின் உடலுறவு காட்சி தான் படத்தின் ஓப்பனிங்.

அப்போது இளையராஜா பாடலை துஷாரா பாட அதை நிறுத்தச் சொல்கிறார் காளிதாஸ்.. இளையராஜாவை உனக்கு பிடிக்கவில்லை என்றால் உன்னை எனக்கு பிடிக்காது என்கிறார் துஷாரா..

ஒரு கட்டத்தில்..”உங்கள் ஜாதி புத்தி மாறவே இல்லை” என்கிறார் காளிதாஸ். அப்போது முதல் அவர்களின் காதல் ஜாதியால் உடைபடுகிறது.

இவர்கள் பயிற்சி பெறும் நாடக குழுவில் கலையரசன் வந்து இணைகிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதி கதை.

கேரக்டர்கள்…

ரஞ்சித் இயக்கத்தில் இணைந்து விட்டால் கலையரசனுக்கு எங்கிருந்துதான் கலை ஆர்வம் வருமோ தெரியாது.? அப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். அதுவும் அவர் திக்கி திணறி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது சூப்பர்.

இடைவெளி காட்சியின் போது கலையரசன் குடித்துவிட்டு செய்யும் கலாட்டா செம.

அடக்கமான அமைதியான சாக்லேட் பாயாக காளிதாஸ். நிதானமாக தன் கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்.

இந்த படத்தின் அனைத்து நட்சத்திரங்களையும் ஓரங்கட்டி விட்டு சிங்கிளாக துவம்சம் செய்திருக்கிறார் துஷாரா.

நான் என்றால்.. நான் மட்டுமல்ல என் சமூகமும் தான். என் அடையாளத்தால் உடைக்கப்பட்ட கண்ணாடி துண்டுகளை நானே இப்போது இணைத்து உருவெடுத்திருக்கிறேன் என்று துஷாரா சொல்லும் போது தியேட்டரில் கைதட்டல் பறக்கும்.

யதார்த்த பெண்ணாக பெண்ணியவாதியாக வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்கிறார் இந்த நட்சத்திரம் துஷாரா.

இவர்களுடன்…

ஹரிகிருஷ்ணன் – யஸ்வந்திர
வினோத் – சேகர்
ஞானபிரசாத் – அய்யாதுரை
சுபத்ரா ராபர்ட் – கற்பகம்
சபீர் கல்லாரக்கல் – சகஸ் ரட்சகன்
ரெஜின் ரோஸ் – சுபீர்
தாமு – ஜோயல்
ஷெரின் செலின் மேத்யூ – சில்வியா
வின்சு ரேச்சல் சாம் – ரோஷினி ஆகிய நட்சத்திரங்களும் உண்டு.

டெக்னீஷியன்கள்…

ஒளிப்பதிவு கிஷோர் குமார்.. பாண்டிச்சேரியின் கடல் அழகை இன்னும் சிறப்பாக காட்டியிருக்கிறார். ஆரோவ்வில் கலாச்சாரத்தையும் ரசிகர்களுக்கு காட்டியுள்ளார்.

தென்மாவின் இசையில் பாடல்கள் ஓகே. இசையும் கதையுடன் பயணிப்பதால் நம்மால் அந்த கதைக்குள் பயணிக்க முடிகிறது. பாடல்களை உமாதேவி மற்றும் அறிவு எழுதி உள்ளனர்.

படத்தின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். படத்தொகுப்பு : செல்வா R.K.

தயாரிப்பு – யாழி பிலிம்ஸ் –
விக்னேஷ் சுந்தரேசன்.
மனோஜ் லியோனல் ஜேசன்.

தமிழகத்தில் நாம் நிஜத்தில் கண்ட ஆணவக் கொலைகளையும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் சமூகத்தையும் நேரடியாக காட்டி இருக்கிறார்.

காதலின் பெயரால் இங்கு சிலர் விளையாடும் அரசியலையும் தைரியமாக சொல்லி இருக்கிறார் ரஞ்சித். தாழ்த்தப்பட்ட சமூகம் ஒடுக்கப்பட்ட சமூகம் என்று மறைமுகமாக சொல்லாமல் எஸ்சி SC சமூகத்தைச் சார்ந்த பெண் என்பதையெல்லாம் ஓபனாகவே பேசி இருக்கிறார் டைரக்டர்.

இது தியேட்டர் டிராமா கதை என்பதால் அது அப்படியே ஓடவிட்டு படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். சில நேரம் அது நமக்கு சோர்வை தருகிறது. ஒரு சினிமாவை பார்ப்பது போல் அல்லாமல் ஒரு டாகுமெண்டரி படத்தை பார்ப்பதாக தோன்றுகிறது.

மேலும் படத்தின் வசனங்கள் நமக்கான அரசியலை புரிய வைத்தாலும் அது ஒரு பாடம் எடுப்பது போன்ற உணர்வை தருகிறது அதை தவிர்த்து இருக்கலாம். ரஞ்சித்தின் வழக்கமான சாதிய படம் இது.

ஆக… நட்சத்திரம் நகர்கிறது… ஜாதீயில் ரஞ்சித் வைத்த காதல் தீ..

Natchathiram Nagargiradhu Movie review and rating

‘ஜான் ஆகிய நான்’ திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

311 OTT மற்றும் 311channel.com என்ற இணையத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் படம் ‘ஜான் ஆகிய நான்’.

டார்க் லைட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுப்பிரமணியன் தயாரிப்பில், அப்பு கே.சாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

‘ஜான் ஆகிய நான்’ என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்..

கதைக்களம்…

ஒரு கொலை என்றாலே ஊரே நடுநடுங்கும்.. ஆனால் இந்தப் படத்தில் 44 கொலைகள் ஒரே ஊரில் நடக்கின்றன. அப்படி என்றால் இந்த படத்தின் கதையை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்..

அந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து டிவி பேட்டி ஒன்றில் ஊர்க்காரர் டொச்சு பாண்டி -அருள் அன்பழகன் என்பவர் விவரிக்கிறார்.

இதன் உண்மை தன்மையை ஆராயாமல் டிவியில் ஒளிபரப்பு ஆகிறது. இதனால் , அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அதிகாரியான நாயகன் அப்பு கே.சாமியிடம் விளக்கம் கேட்கிறது காவல்துறை.

அன்பழகன் சொன்னவை அனைத்தும் பொய் என்பதை அறிகிறார் அப்பு கே.சாமி.

எனவே களத்தில் இறங்குகிறார். அந்த கொலைகளின் உண்மையான பின்னணி என்ன? என்பதை தன் பாணியில் விவரிப்பது தான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ரிக்கவரி பாண்டி மற்றும் போலீஸ் ஜான் என்ற இரண்டு வேடங்களில் அப்பு கே.சாமி, நடித்திருக்கிறார். ஒரு கேரக்டர் காமெடி காதல் என்றால் அடுத்த கேரக்டர் கடமை கம்பீரம் என வேறுபடுத்தி காட்டி இருக்கிறார்.

அப்பாவியாக அறிமுகமாகும் அன்பழகன் திடீரென அதிரடி காட்டி விஸ்வரூபம் எடுப்பது எதிர்பாராத ட்விஸ்ட்.

நாயகியாக ஹேமா.. அட வாம்மா.. என நம்மை கவரும் பாத்திரத்தில் நக்‌ஷத்ரா ராவ். எளிமையும் எதார்த்தமும் நிறைந்த நடிகை.

நீண்ட நாட்களாக சினிமா ரசிகர்கள் மறந்து இருந்த பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் நடித்திருக்கிறார். மொக்கை ஜோக்குகள் போட்டு வெறுப்பேற்றுகிறார். ஆனால் அவருக்கு பெரிதாக காட்சிகள் இல்லை என்பதால் ரசிகர்கள் தப்பித்தனர்.

ராஜநாயகம் கதாப்பாத்திரத்தில் ஜாக்சன் பாபு. காமெடி வில்லன் தான் என்றாலும் சில இடங்களில் தன் வில்லத்தனத்தை காட்டி இருக்கிறார்.

டாக்டராக நிழல்கள் ரவி.. தொழிலதிபராக ஆதேஷ் பாலா.. இவர்களின் கேரக்டர் சிறியது என்றாலும் தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்…

கவியரசனின் ஒளிப்பதிவு மற்றும் 311 ஸ்டுடியோஸின் இசை, படத்தொகுப்பு கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

இந்த படத்தை இயக்கி் ஹீரோவாக நடித்த அப்பு கே.சாமி வித்தியாசமான முறையில் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார்.

இது நாம் அடிக்கடி பார்த்து பழகி போன பழிவாங்கல் கதைதான் என்பதால் அதை சற்று திரில்லர் கலந்து சொல்லி இருக்கலாம்.. சில காட்சிகளில் தனக்கு மட்டுமே புரியும் படியான காட்சிகளை ரசிகர்களுக்கும் புரியும் படி வைத்திருந்தால் இந்த திரைக்கதையில் ரசிகர்களின் ரசனை கூடி இருக்கும்.

வேலையில்லாத இளைஞர்களை சமூக விரோத கும்பல்கள் எப்படி வளைக்கிறது.?

சில ஊடகங்களில் சொல்லப்படும் பொய்கள் எப்படியான தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

கூடுதல் தகவல்..

குறிப்பு : ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைலிலோ , உங்கள் வீட்டு தொலைகாட்சி பெட்டியிலோ இலவசமாக பார்க்க விருப்பமா .?!
அதற்கு Google Play Store ல் கீழ்காணும் App ஐ டவுன்லோட் செய்து, அதில் கீழ்காணும் User Details ,
user name & Password ஐ பயன்படுத்தி அதில் பணம் செலுத்த வேண்டிய இடத்தில் கீழ்காணும் Free purchase coupon code : 5555 ஐ பயன்படுத்தினால் நீங்களும் Free of cost-ல்: ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை கண்டு களிக்கலாம்.

App link :
https://play.google.com/store/apps/details?id=com.tamilottplatdorm.app

User Details
user name : preview@311channel.com
password : 270820222000

311 மொபைல் ஆப் மற்றும் 311channel.com இணையத்தில், Free purchase coupon code : 5555 என்ற எண்ணை பயன்படுத்தி ’ஜான் ஆகிய நான்’ திரைப்படத்தை இலவசமாக பார்க்கலாம்.

டைரி விமர்சனம்.; நாவல் பாதி.. தாவல் மீதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்…

நிகழ்காலத்துடன் கடந்த காலத்தை இணைக்கும் ஒரு திரில்லர் கதை தான்.

இன்று நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் சில வருடங்களுக்கு முன்பு நடந்தேறி இருக்கும். இரண்டிற்கும் உண்டான ஒரு தொடர்பியலே இந்த டைரி. ஆங்கிலத்தில் RECREATION என்பர்.

கதைக்களம்…

16 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு கொலை வழக்கைக் கையிலெடுக்கிறார் உதவி ஆய்வாளர் அருள்நிதி.

ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்லும் ஒரு பேருந்தில் நடைபெறும் சம்பவங்களும் 13வது HAIR PIN வளைவில் நடைபெறும் விபத்துகளுமே கதையின் மையப்பகுதி.

இதனைத் தொடர்ந்து அருள்நிதி மேற்கொள்ளும் விசாரணைகளே இதன் க்ளைமாக்‌ஸ்.

பல திருப்பங்களைக் கொண்ட இந்த வழக்கில் இறுதியில் என்ன நடந்தது என்பதே இந்த ‘டைரி’ பட கதை.

கேரக்டர்கள்..

வழக்கம்போல போலீசுக்கு உரித்தான கம்பீரமாக வருகிறார் அருள்நிதி. ஆனால் ஆரம்பத்தில் காட்டப்படும் அந்த கம்பீரம் போக போக குறைகிறது.

பஸ்ஸில் பயணம் செய்யும்போது தான் போலீஸ் என்று காட்டுவதற்காகவே சிலரை அடிப்பது போல உள்ளது.

இன்னொரு உதவி ஆய்வாளராக அறிமுக நடிகை பவித்ரா மாரிமுத்து. இவரின் அறிமுகக் காட்சியில் அடித்து தூள் கிளப்புகிறார். அதன் பிறகு பெரிதாக ஒன்றும் இல்லை.

இவரையும் பஸ்ஸில் ஏற்றி பயணிக்க வைத்திருக்கலாம். அட்லீஸ்ட் காட்சிகள் இருந்திருக்கும். அதுவும் இல்லாமல் போய்விட்டது.

சாம்ஸ் மட்டும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். ஷா ராவுக்கும் சில காமெடி காட்சிகள் உண்டு. ஆனால் நிறைய டபுள் மீனிங் வசனங்கள் உண்டு.

சட்டமன்ற உறுப்பினராக ஜெயபிரகாஷ் நடித்துள்ளார். இவரின் க்ளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று.

கிஷோருக்கும் செம்பிக்கும் கௌரவ தோற்றம் தான்.

டெக்னீஷியன்கள்…

ஊட்டி குளிரையும் இரவு காட்சிகளில் மிரட்டலாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். அந்த பஸ்ஸில் பயணிக்கும் ஆரம்பக் காட்சிகள் மிரட்டல்.

அதுபோல மலை உச்சியின் மீது இருந்து பஸ் வெளிச்சத்திற்கு காட்டப்படும் சாலைகள் நமக்கு கண்களுக்கு விருந்து.

இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹான் பின்னணி இசை ஹாரர் காட்சிகளில் கொஞ்சம் பயத்தை கொடுக்கிறது.

சில காட்சிகளை வெட்டி இருக்கலாம் எடிட்டர் ராஜ சேதுபதி. கலை இயக்குநர் ராஜூவின் உழைப்பு சிறப்பு.

படத்தின் ஆரம்பம் இது போலீஸ் இன்வெஸ்டிகேஷன் என்பது போல தெரிகிறது. திடீரென பேய் படம் போல மாறுகிறது. ஆனால் மீண்டும் இன்வெஸ்டிகேஷன் என்பதாய் வருகிறது.

இதனால் படம் எதை நோக்கி பயணிக்கிறது என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே அமைந்துவிடுகிறது.

சில காட்சிகள் ஒரு அதிரடியான நாவல் பக்கங்களைப் போல உள்ளது. திடீரென அடுத்தடுத்த ஜானர்களை தாண்டி செல்வதால் மீதி தாவலாக தெரிகிறது.

அதன்படி… அனைத்து ஜானர்களைக் கலந்து பதை பதைப்பைக் கூட்டி எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன்.

ஆக.. இந்த ‘டைரி’.. நாவல் பாதி.. தாவல் மீதி

Arulnithi starring Diary movie review

தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம் 3.5/5.; சினிமாவை சீரழிக்கும் சிலந்தி.. (விஜய்யை வச்சி செஞ்சிட்டீரே.)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் பிரபல நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கியுள்ளது.

ஆனால் இந்த முறை வெப் சீரிஸில் களம் இறங்கியுள்ளது. தமிழ் சினிமாவுக்கு எமனாக அமைந்துள்ள தமிழ் ராக்கர்ஸை அழிக்க இந்த நிறுவனம் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த வெப் சீரிஸ் 8 எபிசோடுகளாக ஆகஸ்ட் 19ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் இந்த வெப் சீரிஸ் ஓடுகிறது.

ஏ வி எம் புரடக்ஷன்ஸ் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் ஷ்யாம் தயாரிக்க, அருண் விஜய், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன் , அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், வினோதினி, மாரி முத்து, தருண் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒன் லைன்..

ஒரு புதிய திரைப்படம் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப்சைட்டில் (இணையதளத்தில்) வெளியாகி ஒட்டுமொத்த படத்தின் வசூலை பாதிக்கிறது.

இதனால் திரையுலகிற்கு தீராத தலைவலியாக தமிழ் ராக்கர்ஸ் திகழ்கிறது.

கதைக்களம்..

பிரபல நடிகர் அஜய் நடித்த மாய லோகம் படம் திருட்டுத்தனமாக வெளியானதால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறது சினிமா.

இதன்பின்னர்.. அதிரடி ஸ்டார் ஆதித்யாவை வைத்து ரூ. 300 கோடியில் ‘கருடா’ என்ற பிரம்மாண்ட படம் எடுக்கிறார் தயாரிப்பாளர் அழகம்பெருமாள்.

இந்த படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு சில காட்சிகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகிறது. இதனால் காவல்துறையில் புகார் கொடுக்கிறார் தயாரிப்பாளர்.

ஆனாலும் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே எங்கள் இணையத்தளத்தில் ‘கருடா’ படம் வெளியாகும் என சவால் விடுகிறது தமிழ் ராக்கர்ஸ். இதனால் ஆதித்யா ரசிகர்களும் டென்ஷன் ஆகின்றனர்.

இந்த பிரச்சனை திரையுலகிற்க்கும் காவல்துறைக்கு பெரிய சவாலாக அமைகிறது. இதனால் அருண் விஜய் அவரது உதவியாளர் வினோத் சாகர் மற்றும் சைபர் கிரைமில் உள்ள வாணி போஜன் மற்றும் வினோதினி ஆகியோர் களத்தில் இறங்குகின்றனர்.

தமிழ் ராக்கர்ஸ் யார்? அவர்கள் எங்கிருந்து செயல்படுகிறார்கள்? என்பதை கண்டுபிடிக்க விசாரணை தொடர்கிறது.

இறுதியில் வென்றது யார்? கருடா படம் தியேட்டரில் வெளியானதா? இணையதளத்தில் வெளியானதா? ஆதித்யா ரசிகர்கள் என்ன செய்தார்கள்? அருண் விஜய் சவாலை முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.

கேரக்டர்கள்…

அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அருண் விஜய். படத்திற்கு என்ன தேவையோ அதை அளவோடு செய்து இருக்கிறார். தமிழ் ராக்கர்ஸ் எங்கிருந்து செயல்படுகிறது என்பது பற்றி விசாரணையில் அருண் விஜய் இறங்கும் போது அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து.

இவரது மனைவியாக ஐஸ்வர்யா மேனன் கொஞ்சம் கவர்ச்சி கொஞ்சம் நடிப்பு என கவருகிறார்.

வாணி போஜன் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவும் வகையில் நடிப்பை கொடுத்துள்ளார். வாணி போஜனுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் வாய்ஸ் சூப்பர்.

அதிரடி ஸ்டார் ஆதித்யாக வருபவர் நடிகர் விஜய் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அவரின் முகத்தை திரையில் காட்டாவிட்டாலும்.. விஜய்யின் மேனரிசம் போலவே உள்ளன.

மேலும் விஜய் பண்ணை வீட்டில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து போடுவதும்.. ரசிகர்கள் அவருக்காக காத்திருப்பதும் என பல காட்சிகளை காட்டி உள்ளனர்.

மேலும் ஆதி்த்யாவின் அப்பாவாக வருபவரும் எஸ்ஏ சி போலவே செயல்படுகிறார். விஜய்க்காக அந்த காட்சிகளை மாற்றவும் இந்த காட்சிகளை மாற்றவும்… இந்த காட்சியை ரசிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றெல்லாம் நிபந்தனைகள் போடுவது அப்பட்டமாகவே தெரிகிறது.

சைபர் கிரைம் அதிகாரி வாணி போஜனின் அப்பா தமிழ் ராக்கர்சால் பாதிக்கப்பட்டு உடல் நல குன்றிய படத் தயாரிப்பாளர் ஆவார். அவர்தான் எம் எஸ் பாஸ்கர். ஒரே காட்சி என்றாலும் நடிப்பில் அசத்தல் சார்.

டெக்னீஷியன்கள்…

ராஜசேகரின் ஒளிப்பதிவும் சாபு ஜோசப்பின் படத் தொகுப்பு, விகாசின் பின்னணி இசையும் தரம்.

ஆனால் 5 எபிசோடில் சொல்ல வேண்டிய கதையை 7- 8 எபிசோடுகள் என இழுத்து இருப்பது ரொம்ப போர். ஒவ்வொரு காட்சியும் பாமர மக்களுக்கும் சென்று சேர கடுமையாக உழைத்துள்ளனர் எனத் தெரிகிறது.

மனோஜ் குமார் கலைவாணன் கதையில்,
அறிவழகன், மனோஜ் குமார் கலைவாணன், ராஜேஷ் மஞ்சு நாத், முருகப்பன் மெய்யப்பன், சுப்ரியா கொப்பா, ஆகியோரின் திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ளது.

இயக்கம் பற்றிய அலசல்…

ஒரு சினிமா என்பது ஒரு பெரிய குழுவின் உழைப்பாகும். தயாரிப்பாளர்.. நடிகர்.. நடிகை.. பைனான்சியர் என்பது மட்டுமில்லாமல்.. தயாரிப்பாளர்களின் உதவியாளர்.. கார் டிரைவர்.. நடிகரின் அப்பா.. அவரின் குடும்பத்தார்.. நடிகரின் ரசிகர்கள்.. அவர்களின் குடும்பம் என திரைத்துறை சார்ந்த அனைவரையும் காட்டி உள்ளனர்.

ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் ஒரு நடிகருக்காக எப்படி எல்லாம் வேலை செய்கிறார்கள் என்பதையும் அப்பட்டமாக காட்டியுள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு விசிடி என்பது தமிழகத்தில் மிக பிரபலம். திருட்டு விசிடி விற்கும் போது காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு கும்பல் எடுக்கும் அவதாரமே தமிழ் ராக்கர்ஸ் என்பதாக காட்டியுள்ளனர்.. இது உண்மைதானா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.?!?!

மேலும் பணத்துக்கு ஆசைப்பட்டு உதவி இயக்குனர்களே தமிழ் ராக்கர்ஸ் க்கு துணை போவதாகவும் காட்சிகள் உள்ளன.

ஒரு படம் ரிலீசுக்கு தயாரான சூழ்நிலையில் அந்த படத்தின் காப்பி டப்பிங் தியேட்டரில்.. எடிட்டிங் தியேட்டரில்.. டி ஐ ஸ்டுடியோவில்.. நடிகர் அலுவலகத்தில்.. பைனான்ஸ்சியர் அலுவலகத்தில்.. என பல வகையாக காப்பிகள் அனுப்பப்படுகிறது.

இதில் ஏதேனும் ஒரு இடத்தில் கறுப்பு ஆடுகளால் படம் லீக்காக கூடும் என்பதையும் காட்டியுள்ளனர்.

தியேட்டரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுவதும் பிளாக்கில் விற்கப்படுவதும் பாப்கார்ன் மற்றும் உணவு வகைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதும் தமிழ் ராக்கர்ஸ் வளர்ச்சிக்கு ஒரு காரணமாக காட்டப்படுகிறது.

தமிழ் ராக்கர்ஸ் என்ற எமனை அழிக்க வேண்டும் என்றால் திரையுலகினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். சினிமாவில் போட்டி பொறாமை என்பது நீடித்தால் தமிழ் ராக்கர்ஸ் அவர்களை விலை கொடுத்து வாங்கிவிடுவார்கள் என்பதையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.

தமிழ் ராக்கர்ஸ் ஒழிக்க இத்தனை ஆக்ஷன் காட்சிகள் தேவையா என்று கேள்வி எழுகிறது. அதே சமயத்தில் எவருக்குமே தெரியாமல் ஏதோ ஒரு இடத்தில் இருந்து ஒட்டு மொத்த சினிமாவை அழிக்கும் தமிழ் ராக்கர்ஸ் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் ரசிகன் மனதில் எழும்.

Tamil Rockerz Review and Rating

FIRST ON NET திருச்சிற்றம்பலம் விமர்சனம் 4/5.; திருப்தியான பழம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ & ‘உத்தம புத்திரன்’ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, முனீஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, ஸ்டன்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைக்களம்…

பாரதிராஜா பெயர் திருச்சிற்றம்பலம். இவரது பேரன் தனுஷ். இவரது பெயரும் திருச்சிற்றம்பலம். தனுஷின் அப்பா பிரகாஷ்ராஜ். இவரது பெயர் நீலகண்டன்.

இவர்கள் மூவர் மட்டும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். ஒரு விபத்தில் தன் தாய் மற்றும் தங்கையை பறி கொடுத்து விடுகிறார் தனுஷ். இதற்கு தன் தந்தை தான் காரணம் என நினைக்கும் தனுஷ் அவரிடம் 10 வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருக்கிறார்.

தனுஷின் கீழ் வீட்டில் வசிக்கும் பெண் நித்யா மேனன். இவரது பெயர் ஷோபனா. தனுஷும் நித்தியாவும் சிறு குழந்தை முதலே நல்ல நண்பர்கள்.

காதல் திருமணம் செய்ய விரும்பும் தனுஷ் தன்னுடன் படித்த மாணவி ராசி கண்ணாவை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து அவரிடம் தன் காதலை சொல்கிறார்.

ஆனால் உன் வாழ்க்கை முறை வேற.. என் வாழ்க்கை முறை வேற என்று தனுஷை நிராகரிக்கிறார்.

அதன் பின்னர் கிராமத்து பெண் பிரியா பவானி சங்கரை காதலிக்க நினைக்கிறார். இதற்கு நித்தியாவும் உதவி செய்கிறார்.

ஆனால் பிரியாவும் தனுஷை நிராகரிக்கிறார். இதனால் விரக்தி அடைகிறார் தனுஷ். அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.

கேரக்டர்கள்..

இந்தப் படத்தைப் பற்றி நாம் சிலரிடம் பேசுகையில்… தனுஷ் பெரிய ஹீரோ. அவருக்கு இதுபோல குடும்ப கதைகள்.. ஒரு கோழையாக காட்டலாமா என்றெல்லாம் பேசினார்கள்.

இதனால் தான் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் வித்தியாசமான கேரக்டர்களை தொட மறுக்கிறார்கள். ஒரு நடிகர் என்றால் எந்த ஒரு கேரக்டரும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பதை மலையாள நடிகர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைந்துள்ளார்.

நாம் அன்றாடம் சந்திக்கும் புஃட் டெலிவரி வாலிபராக திருச்சிற்றம்பலமாக நமக்கு பிடித்த நபராகவே வாழ்ந்திருக்கிறார்.

தனுஷ் & பாரதிராஜா இருவரும் படத்திற்கு பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக்கி இருக்கிறார்கள். காதலுக்கு ஐடியா கொடுத்து பேசும் வசனங்கள் சூப்பரோ சூப்பர்.

ஷோபனா என்ற கேரக்டரில் நம் மனதில் ஷோபா போட்டு நிறைகிறார் நித்யா. அதிலும் நித்யா நட்பை காட்டும் போது அடடா நம்ம வீட்டு பக்கத்தில இப்படி ஒரு பெண் தோழி இல்லையே என அனைவரையும் ஏங்க வைப்பார் நித்யா.

கிளைமாக்ஸ்சில் இவர்கள் பேசும் வசனங்கள் ஒரு அழகான பாசத்தை நமக்கு எடுத்துச் சொல்லும்.

ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் சில காட்சிகள் வந்தாலும் சிறப்பு. சின்ன கேரக்டர் என்றாலும் அதனை ஒப்புக்கொண்ட இருவருக்கும் பாராட்டுக்கள்.

பிரகாஷ் ராஜ், ஸ்ரீரஞ்சனி, முனிஷ்காந்த் அறந்தாங்கி நிஷா ஆகியோர் படத்தின் கதையோட்டத்திற்கு உதவியுள்ளனர்.

நித்யா மேனனின் அம்மா மற்றும் தம்பி கேரக்டர்களும் அருமை. தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

டெக்னீஷியன்கள்..

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பும் பக்கா.

படத்தின் மைனஸ் என்னவென்றால் தனுஷ் தன் அப்பாவை வெறுப்பதால் அவன் இவன் என்று சொல்கிறார். ஆனால் தாத்தாவை கிழட்டுப் பயல் என்கிறார்.

அதுபோல நித்யாவும் கிழடு.. கிழவன் என்றெல்லாம் பேசுவது மரியாதை குறைவாக உள்ளது.

அது போல் தாத்தா பேரன் இருவரும் சேர்ந்து சரக்கு அடிக்கும் காட்சிகள் ஒரு தவறான முன் உதாரணம்.

பாடல்கள் மூலம் அனிருத் உயிரோட்டிருக்கிறார். ஆனால் எல்லா பாடலையும் தனுஷ் பாட நினைத்திருப்பது தான் பெரிய தவறு.

சிறந்த பாடகர்களுக்கும் கொஞ்சமாவது வாய்ப்பு கொடுங்கள் தனுஷ். உங்கள் குரலை ரசிக்க உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் பாடுவதாக நினைத்து பேசிக் கொண்டிருப்பது போல உள்ளது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பு. இளையராஜா பாடல்கள் ஆங்காங்கே வந்துபோகின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப கதையை மிக எளிமையாக யதார்த்தமாக கவர்ச்சி இல்லாமல் வன்முறை இல்லாமல் அழகாக எடுத்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவகர்.

ஒரு பெண்ணை கண்டதும் காதல் வயப்படுவது என சில விஷயங்களையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்மை விட்டு விலகிய பின்னர் தான் அதன் மதிப்பு நமக்கு தெரியும் என்பதையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் டைரக்டர்.

ஆக.. திருச்சிற்றம்பலம் : திருப்தியான பழம்

Thiruchitrambalam movie review and rating in Tamil

More Articles
Follows