தலைவர் பிறந்தநாள்; தமிழக தியேட்டர்களில் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று 12/12/2019 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

அவர் சென்னையில் இல்லை என்றாலும் அவர் வீட்டு முன்பு ரசிகர்கள் திரளாக கூடி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லதா ரஜினி ரசிகர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிலையில் சென்னையில் பல தியேட்டர்களில் பாட்ஷா உள்ளிட்ட பல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

மேலும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி என பல ஊர்களிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன.

தலைவர் ரஜினி பிறந்தநாள் அன்று அவரின் படத்தை பார்ப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை – நடிகை நிகிலா விமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன். சரி அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்றார். அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். எல்லோரும் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற மாட்டார்கள். ஆனால், ஜீத்து ஜோசப் தமிழில் ஒரு படம் இயக்குகிறேன் கார்த்தியின் ஜோடியாக ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறாயா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன். மேலும், தொழில்நுட்பம் மற்றும் பெரிய நடிகர்கள் இருப்பதால், ஒரு நல்ல படத்தில் நாமும் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன்.

நான் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தில் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைக்க, ஜீது ஜோசப் இயக்குகிறார். அதைப்பற்றி கதாபாத்திரமாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு ஏற்ப முக்கியத்துவமும், தொடர்பும் கொடுக்கப்பட்டிருக்கும். என்னுடைய கதாபாத்திரமும் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து செல்வது என்றில்லாமல், ஒரு புள்ளியில் கதையோடு தொடர்பு இருக்கும். நடிப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க தான் எனக்கும் விருப்பம். ஐந்து வருடங்கள் கிடைத்த படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள விருப்பமில்லை. காத்திருந்தாலும் நல்ல படம், நல்ல குழுவுடன் இணைந்து நடிப்பதே விருப்பம். என் கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் அதில் நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தால் மட்டுமே நடிப்பேன். அது வரை காத்திருப்பேன்.

‘கிடாரி’க்குப் பிறகு மலையாளத்தில் வாய்ப்பு வந்தது அதில் நான் நடித்த படம் வெற்றி பெற்றவுடன் தொடர்ந்து அதிக படங்கள் அங்கேயே நடிக்கும் படியான சந்தர்ப்பம் அமைந்தது. மேலும், சிறந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. ‘தம்பி’ படம் மூலம் தமிழில் இது மறு பிரவேசம் என்று கூட சொல்லலாம்.

எனக்கு தமிழ் தெரிந்ததால் இப்படத்தில் நடித்தது எளிதாக இருந்தது. சிறந்த இயக்குனரிடம் பணியாற்ற வேண்டும் என்று நினைத்துதான் இப்படத்தில் நடித்தேன்.

சில நடிகர்களுக்கு ஒரே பணியான படங்கள் மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி அடையாளம் வந்து விடும். ஆனால், கார்த்தி எந்தவிதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சரியாக நடிக்கக் கூடிய திறமை வாய்ந்தவர். தனக்கு என்று ஒரு தனி பாணியை வைத்துக்கொள்ளாமல் கமர்சியல் படமாக இருந்தாலும், கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இருந்தாலும், இல்லை இரண்டும் கலந்து இருந்தாலும் அவர் திறமையான நடித்து வெளிப்படுத்துவார். இதுபோன்ற நடிகருடன் நினைப்பதை பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். அதேபோல் தன்னுடைய பகுதி மட்டும் முடிந்தால் போதும் என்று நினைக்கக்கூடிய கலைஞர் கிடையாது. தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற எண்ணக்கூடிய மனிதர் தான் கார்த்தி. அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் வரும்போது, படப்பிடிப்பு தளத்தில் அலங்காரம் செய்துக் கொண்டிருப்பார். அப்போது நான் உங்களைப் பார்த்துக் கொண்டு வசனம் பேசி ஒத்திகைப் பார்த்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். இது போன்ற மனிதரைப் பார்ப்பது இதுவே முதல் முறை.

எல்லோரையும் போல் சூர்யா ஜோதிகா நானும் திரையில் கண்டிருக்கிறேன். இப்படத்தில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார். பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார். இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்குறது.

ஊட்டி, பாலக்காடு, கோயம்பத்தூர், கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. கோவாவில் கார்த்தியின் பகுதி மட்டும் நடந்தது. சரியான திட்டமிடுதல் இருந்ததால், அட்டவணைப்படி 65 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். தமிழ் படத்தில் நடித்த அனுபவத்தில் இப்படம் விரைவாகவே முடிவடைந்திருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் நன்றாக அரட்டை அடிப்போம். ஒருத்தருக்கொருத்தர் கலாய்த்துக் கொள்வோம். இதற்கிடையில், சத்யராஜ் குடும்பத்தார்கள் வந்தார்கள், கோயம்பத்தூரில் இருந்து சிவகுமாரின் உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தாருடனும் பேசுவோம். சூர்யாவும் ஒரு நாள் வந்தார். அவரிடமும் பேசினேன்.

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம். சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

பொதுவாக படப்பிடிப்பின் துவக்கத்தில் சில நாட்களுக்கு சிறு சிறு காட்சிகள் தான் கொடுப்பார்கள். ஏனென்றால், அப்போதுதான் அனைவரிடமும் நமக்கு இயல்பான நிலை வரும். ஆனால், இந்த படத்தில் எனக்கு முதல் நாள் படப்பிடிப்பே டூயட் பாடல் தான். அதுவும் உதட்டோடு பதிக்கும் முத்தக் காட்சி என்றதும் சிறிது பதட்டமாக இருந்தது. கார்த்தியைப் பார்த்ததும் இவரைப் பார்த்து நடிக்க வேண்டுமே என்ற பயம் வேறு. ஆனால், கார்த்தி என்னை சமாதானப்படுத்தி இலகுவாக இருக்கும்படி கூறினார். முதலில், பாடலைக் கேட்கும் போது பதட்டமாக இருக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று தோன்றுகிறது. இதுதவிர, விருந்து பாடலும், கோவாவில் கார்த்திக்கு ஒரு பாடலும் இருக்கிறது.

நான் கோவிந்த் வசந்தாவின் பேண்ட் வாத்தியத்தின் விசிறி. சமீபத்தில், கேரளாவில் அவருடைய இசை ஆல்பம் கேட்கும் வாய்ப்பு அமைந்தது. அவருடைய ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ’96’ மற்றும் ‘அசுரவதம்’ படத்தில் அவருடைய பின்னணி இசை பிடிக்கும்.

இப்படம் இரண்டு குடும்ப உறவுகள் கலந்த திரில்லர் படமாக இருக்கும். ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்பு இருப்பதால் இப்படத்தின் கதையை பற்றி விளக்க முடியாது. படம் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்க டிசம்பர் 20-ம் தேதி வரை நாங்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறோம். மேலும், ‘கிடாரி’ படத்தில் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என்று இன்னமும் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இந்த படத்திற்கும் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இந்த படத்திற்குப் பிறகு தொடர் தமிழ் படங்கள் இல்லாததால், மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு நடிகை நிகிலா விமல் ‘தம்பி’ படத்தில் நடித்த அனுபங்களைப் பற்றி கூறினார்.

சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தயாரிப்பாளர் S.P.சௌத்ரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது சாதாரண ரசிகன் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர் அப்படி ஒரு தீவிர ரஜினி ரசிகர் தான் பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், திரைப்பட தயாரிப்பாளரும் ஆன S.P.சௌத்ரி இவர் தற்போது நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் டகால்டி என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு,

*ஏறுபவனுக்கு இமயமலை*

*எதிர்ப்பவனுக்கு எரிமலை*

*இந்த அண்ணாமலை*

என்கிற செம பஞ்ச் வசனத்துடன் தனது மனம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழலில், தலைவரை எதிர்க்கும் அரசியல் வாதிகளுக்கு பதிலடி, தலைவர் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

பூஜையுடன் தொடங்கிய சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுவாதிஷ் பிக்சர்ஸ் வழங்கும் “பேப்பர் பாய்” படத்தின் படப்பிடிப்பு இன்று
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கேரளா ஹவுசில் பூஜையுடன் தொடங்கியது.
இயக்குனர் எஸ்ஆர் பிரபாகரன் அவர்கள் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி
வைத்தார்.

சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக PSJ பழனிராஜன் தயாரிக்கும் படம் “பேப்பர்
பாய்”. இணை தயாரிப்பு G.C.ராதா

இப்படத்தை, இயக்குனர் விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற
படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய “ஸ்ரீதர் கோவிந்தராஜ்”
இயக்குகிறார். இப்படத்திற்கு கோலி சோடா , சண்டி வீரன் போன்ற படங்களுக்கு
இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜெகதீஷ் V விஸ்வா ,
படத்தொகுப்பு எல்.வி.கே தாஸ், நடனம்- சாண்டி மாஸ்டர்

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில்….

இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற “பேப்பர் பாய்” படத்தின்
ரீமேக் ஆகும். தமிழுக்கு தகுந்தார்போல் அதில் சிறு சிறு மாற்றங்களை
உருவாக்கி உள்ளோம்.

அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர
நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும்
மாற்றங்கள் தான் இப்படத்தின் கதை.

இது முழுவதுமாக எதார்த்தங்கள் நிறைந்த கதையாக இருக்கும். காதல் காட்சிகள்
நிறைந்த படம் என்பதால் இதில் இசைக்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்துள்ளோம். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில்
ஒரு எதார்த்த காதல் கதையை நீங்கள் 2020 இல் காணலாம்.

இதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய
கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, கடலோரக் கவிதைகள்
ரேகா, ராட்சசன் பட வில்லன் சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன்,
தாரை தப்பட்டை அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும்
பல முன்னணி நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. சென்னை கேரளா மற்றும்
கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

பார்வையற்றவர்களிடம் தளபதி-64 படக்குழு கறார்.; விஜய்க்கு பகிரங்க கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 64 படக்குழுவினர் மற்றும் விஜய்க்கு தமிழக பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியிருக்கிறார். இதோ அந்த கடிதம்…

மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜய் அவர்களே!

உங்களின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து. ஆனாலும், இதையும் மீறி, அரசியல் செல்வாக்கு, சொந்த செல்வாக்கு என்ற ஏதோ ஒரு காரணத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிடுகிறீர்கள்.

அதன்பிறகு எமது பள்ளி வளாகம் படும்பாடு அடடா மோசம். ஒரு சிறு தொகையை எங்கோ செலுத்திவிட்டு, இந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு என்ற பெயரில் படப்பிடிப்புக்குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்துகொண்டதெல்லாம் பெரு அநியாயம்.

முதலில் எங்கள் மாணவர்களால் தடையின்றிப் பள்ளி வளாகத்தில் நடமாட முடியாதபடிக்கு எங்கு பார்த்தாலும் கார்கள், வாகனங்கள். பள்ளி முதன்மை நுழைவாயிலில் உங்களைப் (நடிகர் விஜை) பார்ப்பதற்கென்றே ஒரு பெருங்கூட்டம்.

உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாது. வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு மூன்று நாட்களும் ஏக கெடுபிடிகள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படித்துக்காட்ட வந்த தன்னார்வலர்களும் (voluntary readers) தடுத்து நிறுத்தப்பட்டு அதில் சிலர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பள்ளி வளாகம் என்கிற புரிதல்கூட இல்லாமல், ஆங்காங்கே புகைபிடிப்பது, குப்பைகள் போடுவது என உங்கள் குழுவினர் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டார்கள்.

உங்கள் படப்பிடிப்புக்குழுவின் மேல்மட்ட நபர்களிலிருந்து, கடைநிலைப் பணியாளர்வரை பெரும்பாலான நபர்களுக்குப் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை எப்படிக் கையாள்வது, அவர்களைக் கண்ணியக் குறைவின்றி எப்படி நடத்துவது என்கிற அடிப்படைப் புரிதலே இல்லை. ஏன் அது உங்களுக்கும் இல்லை என்றே கருதுகிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று, உங்களைச் சந்தித்து வெறும் இரண்டே நிமிடங்கள் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் சுமார் மூன்று மணி நேரமாகக் குழுமி இருக்க, அவர்களைப் பார்வையுள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு, சைகை செய்துவிட்டு சென்றுவிட்டீர்கள்.

உங்கள் குழுவினரை அணுகி எங்கள் மாணவர்களில் சிலர் கேட்டதற்கு, “கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற” எனக் கேவலமாகப் பதில் வந்திருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக உங்கள் குழுவினர் எங்கள் நிறுவனத்தின்மீது செலுத்திய ஆக்கிரமிப்புகள், அதிகாரங்கள், அதனால் எங்கள் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் என இவை அத்தனையையும், மாணவர்கள் உங்கள் மீது இருக்கிற அன்பினாலும், உங்களிடம் இந்த மூன்று நாட்களில் எப்படியேனும் ஒருமுறையாவது பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் பொறுத்துக்கொண்டார்கள்.

அவர்கள் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பயந்துகொண்டு, அதேநேரத்தில் உங்களையும் சந்திக்கிற இந்த அரிதான வாய்ப்பை நழுவவிடக்கூடாதே என்ற எண்ணத்தில், ஒரு இனம்புரியாத தவிப்புடன் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம் என நினைத்து, மாணவர்களை ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி, உங்களை இரண்டே நிமிடங்கள் பேசவைப்பது என முடிவு செய்தோம்.

அதற்காக ஆசிரியர்கள் இருவர் உங்கள் குழுவினரை அணுகிப் பேசினோம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, முதலில் மாலை நான்கு மணிக்கு என்றார்கள். பிறகு ஆறு மணிக்கு என்றார்கள்.

அதிலும் உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட திரு. உதயக்குமார் அவர்கள் கண்டிப்பாக மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார்.

மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே உங்களைச் சந்திக்கும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் மிக அமைதியான முறையில் உங்கள் கண் எதிரே, ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார்கள். இயக்குநர் திரு. லோகேஷ் அவர்கள்கூட இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். ஆனால், நிச்சயம் சந்திக்கிறீர்கள் என்று சொல்லப்பட்ட தாங்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, இரகசியமாய் கிளம்பிவிட்டீர்கள். நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்பதைக்கூட அறியாமல் நீங்கள் வருவீர்கள் என நம்பிக்கையோடு மேலும் அரைமணி நேரம் எங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டு நின்ற அவலமும் நடந்தேறியது.

சரி, மாணவர்களை விடுங்கள். தாங்கள் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள்.

நிச்சயம் சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்கவேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை. எல்லாப் படப்பிடிப்புத் தளங்களைப் போலவே, இதையும் ஒரு சராசரி இடமாக நினைத்துவிட்டீர்களா? அல்லது பார்வையற்ற இவர்கள் நமது ரசிகர் கணக்கில் வரமாட்டார்கள் என்கிற கணக்கா? ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த தினத்தின்போது, சோறுபோட மட்டும் என்கிற பட்டியலில் எங்கள் பள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா?

ஒரு தனியார்ப் பள்ளியாக இருந்திருந்தால், ஹைஃபை மேடையில் நின்று, மைக் பிடித்து அந்த மாணவர்களிடம் பேசியிருப்பீர்கள்தானே? இல்லாவிட்டால் அந்தப் பள்ளி முதலாளிகள் உங்களை விட்டுவிடுவார்களா என்ன? அரசுப்பள்ளி, அதுவும் பார்வையற்றோர் பள்ளியென்றால் அவ்வளவு குறைவான மதிப்பீடா? ஒரு இரண்டு நிமிடங்கள் பேசுவதில் உங்களுக்கு எத்தனை கோடி இழப்பு வந்துவிடும்?

ஒரு பார்வையுள்ள ரசிகனைப்போல, ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல், வெறும் உங்களின் கோர்வையான வசனங்களால், உங்கள் குரலால் மட்டுமே உங்களின்மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி திரு.விஜய் அவர்களே!

இவன் ப. சரவணமணிகண்டன்
தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பூவிருந்தவல்லி.

Blind School teacher condemns Vijay and Thalapathy 64 team

12 நாட்களில் படமாக்கப்பட்ட ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.எச்.மீடியா ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் சாகுல் அமீது தயாரித்திருக்கும் படம் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன்
எவன்டா’.

நவீன் மணிகண்டன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விகாஷ் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மதுமிதா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் டெல்லி கணேஷ், சித்ரா, ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர், நாஞ்சில் விஜயன், அம்பானி சங்கர், நெல்லை சிவா, வெங்கடேஷ், பிரவீன் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது, நடிகர்களின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது. அதிலும், சுமார் 22 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க
வந்திருக்கும் சித்ரா, இப்படத்தில் இதுவரை நடிக்காத ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

இவ்வளவு பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் 12 நாட்களில் இயக்குநர் நவீன் மணிகண்டன் முடித்திருப்பது தான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக இருக்கிறது.

அதிலும், மூன்று பாடல்கள், இரண்டு சண்டைக்காட்சிகளையும் இந்த நாட்களிலேயே படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதற்கு இயக்குநர்களிடம் சரியான திட்டமிடல் இல்லாததும், அதனால் படப்பிடிப்பு நாட்கள் அதிகரிப்பதும் தான் காரணம், என்று பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இயக்குநர் நவீன் மணிகண்டனின் இப்பட தகவல், அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறது.

12 நாட்களில் முடித்தாலும், ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் எப்படிப்பட்ட கமர்ஷியல் விஷயங்கள் இருக்குமோ அவை அனைத்தையும் கொண்டு, பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் போல இப்படம் உருவாகியிருப்பது
கூடுதல் சிறப்பு என்றே சொல்லலாம்.

இப்படி 12 நாட்களில் படப்பிடிப்பை முடித்தது எப்படி, என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “தான் சினிமாத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக சில படங்களில்
பணியாற்றினாலும், கேமரா உதவியாளராக பல ஆண்டுகளாக பணியாற்றியிருக்கிறேன்.

இதனால், பல இயக்குநர்கள் பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். அத்துடன், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு, எப்படி தயாராக வேண்டும், என்பதிலும் தெளிவாக இருந்ததால் தான், 12 நாட்களில் படத்தை முடிக்க முடிந்தது.

இளைஞர்களுக்கான ஒரு படமாகவும், குடும்பமாக பார்க்க கூடிய ஒரு படமாகவும் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ இருக்கும். சித்ரா மற்றும் டெல்லி கணேஷ், ஹீரோவின் அம்மா, அப்பாவாக நடித்திருக்கிறார்கள்.

அவர்களது போர்ஷன் செண்டிமெண்டாக இருப்பதோடு, காமெடியாகவும் இருக்கும்.

பொறுப்பில்லாமல் இருக்கும் ஹீரோவை திருத்த அவரது அப்பா பல முறை முயற்சித்தாலும் நடக்கவில்லை. ஒரு கட்டத்தில் அதே அப்பாவுக்காக ஹீரோ பொறுப்பானவராக மாறுகிறார், அதற்கு அவரது காதலியும் ஒரு காரணமாக
அமைகிறார், அது எப்படி என்பது தான் கதை.

சாதாரணமான கதையாக இருந்தாலும், படம் ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணக்கூடிய விதத்தில் சிறப்பாக வந்திருக்கிறது. ராகுல் தாத்தா, விஜய் டிவி ராமர் ஆகியோர் காமெடியில் தனி முத்திரை பதிப்பார்கள்.” என்றார்.

எஸ்.ஆர்.ராம் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கவி கார்கோ, ஹரிதாஸ் ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ராக்கி ராஜேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பவர் சிவா நடனம் அமைத்திருக்கிறார்.

விஜய் டிவி புகழ் செந்தில், ராஜலட்சுமி தம்பதி உள்ளிட்ட பல முன்னணி பாடகர்கள் பாடியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.

சினிமா பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமான விழாவாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பிரபலங்களுக்கு பாடல்கள் திரையிடப்பட்டது. பாடல்களையும், அதை படமாக்கிய விதத்தையும் பிரபலங்கள் வெகுவாக பாராட்டி பேசியதோடு, பாடல்களை பார்க்கும் போதே தெரிகிறது, இது ரசிகர்களுக்கான படம் என்றும், வாழ்த்தினார்கள்.

En Sangathu Aala Adichavan Evanda shoot completed within 12 days

More Articles
Follows