தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ & ‘உத்தம புத்திரன்’ போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, முனீஷ்காந்த், அறந்தாங்கி நிஷா, ஸ்டன்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர்.
கதைக்களம்…
பாரதிராஜா பெயர் திருச்சிற்றம்பலம். இவரது பேரன் தனுஷ். இவரது பெயரும் திருச்சிற்றம்பலம். தனுஷின் அப்பா பிரகாஷ்ராஜ். இவரது பெயர் நீலகண்டன்.
இவர்கள் மூவர் மட்டும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். ஒரு விபத்தில் தன் தாய் மற்றும் தங்கையை பறி கொடுத்து விடுகிறார் தனுஷ். இதற்கு தன் தந்தை தான் காரணம் என நினைக்கும் தனுஷ் அவரிடம் 10 வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருக்கிறார்.
தனுஷின் கீழ் வீட்டில் வசிக்கும் பெண் நித்யா மேனன். இவரது பெயர் ஷோபனா. தனுஷும் நித்தியாவும் சிறு குழந்தை முதலே நல்ல நண்பர்கள்.
காதல் திருமணம் செய்ய விரும்பும் தனுஷ் தன்னுடன் படித்த மாணவி ராசி கண்ணாவை பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து அவரிடம் தன் காதலை சொல்கிறார்.
ஆனால் உன் வாழ்க்கை முறை வேற.. என் வாழ்க்கை முறை வேற என்று தனுஷை நிராகரிக்கிறார்.
அதன் பின்னர் கிராமத்து பெண் பிரியா பவானி சங்கரை காதலிக்க நினைக்கிறார். இதற்கு நித்தியாவும் உதவி செய்கிறார்.
ஆனால் பிரியாவும் தனுஷை நிராகரிக்கிறார். இதனால் விரக்தி அடைகிறார் தனுஷ். அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக் கதை.
கேரக்டர்கள்..
இந்தப் படத்தைப் பற்றி நாம் சிலரிடம் பேசுகையில்… தனுஷ் பெரிய ஹீரோ. அவருக்கு இதுபோல குடும்ப கதைகள்.. ஒரு கோழையாக காட்டலாமா என்றெல்லாம் பேசினார்கள்.
இதனால் தான் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் வித்தியாசமான கேரக்டர்களை தொட மறுக்கிறார்கள். ஒரு நடிகர் என்றால் எந்த ஒரு கேரக்டரும் எடுத்துச் செய்ய வேண்டும் என்பதை மலையாள நடிகர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைந்துள்ளார்.
நாம் அன்றாடம் சந்திக்கும் புஃட் டெலிவரி வாலிபராக திருச்சிற்றம்பலமாக நமக்கு பிடித்த நபராகவே வாழ்ந்திருக்கிறார்.
தனுஷ் & பாரதிராஜா இருவரும் படத்திற்கு பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக்கி இருக்கிறார்கள். காதலுக்கு ஐடியா கொடுத்து பேசும் வசனங்கள் சூப்பரோ சூப்பர்.
ஷோபனா என்ற கேரக்டரில் நம் மனதில் ஷோபா போட்டு நிறைகிறார் நித்யா. அதிலும் நித்யா நட்பை காட்டும் போது அடடா நம்ம வீட்டு பக்கத்தில இப்படி ஒரு பெண் தோழி இல்லையே என அனைவரையும் ஏங்க வைப்பார் நித்யா.
கிளைமாக்ஸ்சில் இவர்கள் பேசும் வசனங்கள் ஒரு அழகான பாசத்தை நமக்கு எடுத்துச் சொல்லும்.
ராசி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் சில காட்சிகள் வந்தாலும் சிறப்பு. சின்ன கேரக்டர் என்றாலும் அதனை ஒப்புக்கொண்ட இருவருக்கும் பாராட்டுக்கள்.
பிரகாஷ் ராஜ், ஸ்ரீரஞ்சனி, முனிஷ்காந்த் அறந்தாங்கி நிஷா ஆகியோர் படத்தின் கதையோட்டத்திற்கு உதவியுள்ளனர்.
நித்யா மேனனின் அம்மா மற்றும் தம்பி கேரக்டர்களும் அருமை. தங்கள் கேரக்டர்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
டெக்னீஷியன்கள்..
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. படத்தொகுப்பும் பக்கா.
படத்தின் மைனஸ் என்னவென்றால் தனுஷ் தன் அப்பாவை வெறுப்பதால் அவன் இவன் என்று சொல்கிறார். ஆனால் தாத்தாவை கிழட்டுப் பயல் என்கிறார்.
அதுபோல நித்யாவும் கிழடு.. கிழவன் என்றெல்லாம் பேசுவது மரியாதை குறைவாக உள்ளது.
அது போல் தாத்தா பேரன் இருவரும் சேர்ந்து சரக்கு அடிக்கும் காட்சிகள் ஒரு தவறான முன் உதாரணம்.
பாடல்கள் மூலம் அனிருத் உயிரோட்டிருக்கிறார். ஆனால் எல்லா பாடலையும் தனுஷ் பாட நினைத்திருப்பது தான் பெரிய தவறு.
சிறந்த பாடகர்களுக்கும் கொஞ்சமாவது வாய்ப்பு கொடுங்கள் தனுஷ். உங்கள் குரலை ரசிக்க உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் நீங்கள் பாடுவதாக நினைத்து பேசிக் கொண்டிருப்பது போல உள்ளது. பின்னணி இசை மற்றும் பாடல்கள் சிறப்பு. இளையராஜா பாடல்கள் ஆங்காங்கே வந்துபோகின்றன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குடும்ப கதையை மிக எளிமையாக யதார்த்தமாக கவர்ச்சி இல்லாமல் வன்முறை இல்லாமல் அழகாக எடுத்து விருந்து படைத்திருக்கிறார் இயக்குனர் மித்ரன் ஜவகர்.
ஒரு பெண்ணை கண்டதும் காதல் வயப்படுவது என சில விஷயங்களையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நம் வாழ்க்கையில் சில விஷயங்கள் நம்மை விட்டு விலகிய பின்னர் தான் அதன் மதிப்பு நமக்கு தெரியும் என்பதையும் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் டைரக்டர்.
ஆக.. திருச்சிற்றம்பலம் : திருப்தியான பழம்
Thiruchitrambalam movie review and rating in Tamil
