தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சைரன் ஒலி என்றாலே இரண்டு விதம்.. ஒன்று போலீஸ் மற்றொன்று ஆம்புலன்ஸ் இந்த இரண்டும் ஒரு கட்டத்தில் மோதிக்கொண்டால் என்ன நடக்கும்? என்பதை அழகாக திரைக்கதை அமைத்து ஒரு விருந்து படைத்திருக்கிறார் அறிமுகம் இயக்குனர் அந்தோணி பாக்யராஜ்.
ஸ்டோரி…
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அறிமுகமாகிறார் நாயகன் ஜெயம் ரவி.. 14 வருட சிறை வாழ்க்கையில் உன் மகளை பார்க்க உனக்கு விருப்பம் இல்லையா? என போலீஸ் அதிகாரியே ஒரு முறை கேட்க பின்னர் சிந்தித்து 15 நாள் பரோலில் தன் குடும்பத்தை காண வருகிறார் ஜெயம் ரவி.
இந்த கைதியை பார்த்துக் கொள்ள ஷேடோ போலீசாக யோகி பாபு..
இந்தப் பதினைந்து நாட்களில் அடுத்தடுத்து கொலைகள் மர்மமான முறையில் நடைபெறவே அதனை விசாரிக்கும் கீர்த்தி சுரேஷின் பார்வை ஜெயம் ரவியின் பக்கம் திரும்புகிறது.. விசாரணை முறையாக இல்லை என கீர்த்தியை கண்டிக்கிறார். உயர் அதிகாரி சமுத்திரக்கனி.
கைதி ஜெயம் ரவி என்னுடன்தான் இருந்தார். எனவே அவர் கொலை செய்ய வாய்ப்பில்லை என்கிறார் போலீஸ் யோகி பாபு. எனவே ஆதாரமில்லாமல் விசாரணையை முடிக்க முடியாமல் திணறுகிறார் கீர்த்தி.
இதனிடையில் தன் தந்தை கைதி என்பதால் அவரை காண மறுத்து வெறுக்கிறார் மகள்.
இப்படியான சூழ்நிலையில் அடுத்து என்ன நடந்தது? உண்மையான கொலையாளி யார்? ஜெயம் ரவி & கீர்த்தி என்ன செய்தனர்? என்பதுதான் படத்தின் மீதிக்கதை
கேரக்டர்ஸ்…
இதுவரை ஏற்காத சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் வந்து மிரட்டலாக அதே சமயம் அனுப்பப்பட்ட நடிகராக தன் பாடி லாங்குவேஜ்ஜை மாற்றி இருக்கிறார் ஜெயம்ரவி.
சுறுசுறுப்பான ஆம்புலன்ஸ் டிரைவராகவும் பக்குவப்பட்ட பரோல் கைதியாகவும் என மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்சன் & எமோஷன் என இரண்டையும் உணர்ந்து நடித்திருக்கிறார்
நாயகி கீர்த்தி சுரேஷ்.. ஒரு பக்கம் அரசியல்வாதி ஒரு பக்கம் போலீஸ் அதிகாரி என இருவரையும் சமாளிக்க முடியாமல் திணறும் நந்தினி கேரக்டரை அழகாக செய்து இருக்கிறார்..
என்னதான் நீ நிரபராதி என்றாலும் உன் மகளுக்கு நீ கைதி தான் என்று கீர்த்தி சொல்லும் போதும் அதன் பின்னர் அவர் செய்யும் அடுத்த செயலும் ரசிக்க வைக்கிறது.
ஜெயம் ரவியின் தங்கையாக சாந்தினி அம்மாவாக துளசி இருவரும் மிகையில்லாத நடிப்பை கொடுத்திருக்கின்றனர.
போலீஸ் அதிகாரிகளாக யோகிபாபு மற்றும் அருவி மதன்.. ஒருவர் காமெடி என்றால் ஒருவர் கம்பீரம்..
ஒரு காட்சியில் சுடிதார் போல பைஜாமா அணிந்து கொண்டு.. “சார் இந்த ட்ரெஸ்ஸ கழட்டுட்டுமா? விபசார கேஸ்னு எல்லாருக்கும் கிண்டல் பண்றாங்க என யோகி பாபு சொல்லும்போது சிரிக்காமல் இருக்க முடியாது.. இதுபோல படம் முழுக்க கைதட்டி ரசிக்க வைத்திருக்கிறார் யோகி பாபு.
உயரதிகாரி சமுத்திரக்கனியின் கேரக்டர் சபாஷ் பெற வைக்கிறது.. கிளைமாக்ஸ் இல் அவரது ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று.
அழகம் பெருமாள், அஜய் மற்றும் ஜெயம் ரவியின் மகள் என ஒவ்வொரும் தங்கள் பாத்திரங்களில் பளிச்சிடுகின்றனர்.
ஜெயம் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரன்.. மாற்றுத்திறனாளி கேரக்டரை கச்சிதமாக செய்து கைத்தட்டல் பெறுகிறார். கண் கலங்கவும் வைக்கிறார்.
மற்ற போலீஸ்காரர்கள் மற்ற கைதிகள் என ஒவ்வொருவரும் படத்தின் கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கின்றனர்.
டெக்னீசியன்ஸ்…
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷ் மற்றும் சாம் இருவரும் திறமை வாய்ந்தவர்கள்.. இவர்கள் இருவரும் ஒரே படத்தில் பணி புரிந்தால் எப்படி இருக்கும்?
பாடல்கள் இசை – ஜிவி பிரகாஷ்…
பின்னணி இசை – சாம் சி எஸ்
இருவரும் இசையில் மிரட்டி இருக்கின்றனர் பாடல்கள் இதமாய் இருந்தது.. பின்னணி இசை மிரட்டல்.. ஆம்புலன்ஸ் ஃபைட் சீனில் பட்டய கிளப்பி விட்டார் ஷாம்..
செல்வகுமாரின் ஒளிப்பதிவு அருமை… ஒவ்வொரு காட்சியையும் தவறாது பார்க்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் அழகாக படமாக்கி இருக்கிறார். ஆம்புலன்ஸ் பைட் சீன் மற்றும் கோயில் திருவிழா என இரண்டையும் அழகாக இரவு நேரத்தில் படம் பிடித்து ரசிக்க வைத்திருக்கிறார்.. ட்ரோன் கேமரா ஷாட்டுகள் அற்புதம்..
காஞ்சிபுரத்தின் அழகு.. பழமை வாய்ந்த கட்டிடங்கள்.. பகுதிகள் என ஒவ்வொன்றையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார் கலை இயக்குனர்.
அதிக சத்தம் கூட ஆபத்து தான்.. நம் காதுகளை செவிடாக்கிவிடும்.. அதற்கு ஏற்ப பின்னணி இசை கொடுத்து அதிக சத்தம் எழுப்பி கொல்லும் முறை வித்தியாசமான சிந்தனை.
ரூபனின் எடிட்டிங் நம்மை எங்கும் போர் அடிக்காமல் செய்கிறது.. முக்கியமாக செல்போனை தொடவிடாமல் எடிட்டிங் செய்திருப்பது சிறப்பு..
அறிமுக இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் என்று சொன்னாலும் எங்கும் பிசிறு தட்டாமல் லாஜிக் குறைகள் இல்லாமல் அழகாக விருந்து படைத்திருக்கிறார்.
கோமாளி படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி யோகி பாபுவின் கூட்டணி கலைக்கட்டி இருக்கிறது.. யோகி பாபு வரும் சீன்கள் எல்லாம் வேற லெவல் சிரிப்பு ரகம்..
படத்தின் வசனங்களையும் அந்தோணி எழுதி இருப்பது சிறப்பு.. ஒரு கதையை உணர்ந்து அதற்கு ஏற்ப காட்சிகளை அமைத்து வசனங்கள் கொடுத்திருக்கிறார்.
ஒருவன் ஜாதியில்லை என்று சொன்னால் அவன் எந்த ஜாதி? என்று கேட்பதை முதலில் நிறுத்துங்கள்.. கிளைமாக்ஸ் டைட்டில் கார்டில்.. ‘சிறையில் இருக்கும் நிரபராதிகளுக்கு இந்த படம் சமர்ப்பணம்’ என்பதையும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷ் என்ற இருபபெரும் நட்சத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்கு கனவு பாடலோ என எதையும் வைக்காமல் இருவரையும் வேறு வேறு தளத்தில் வைத்து கதையை நகர்த்தி இருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
இயக்குனருக்கு முழு சுதந்திரப் படைப்பை கொடுத்த தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரையும் நிச்சயம் பாராட்டி ஆக வேண்டும்.
ஆக சைரன்.. நிச்சயம் எங்கும் ஒலிக்கும்
Siren movie review and rating in tamil