தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
மழை பொய்த்து போன பூச்சேரி என்ற கிராமத்தில் நாயகன் மிதுன் மாணிக்கம், நாயகி ரம்யா பாண்டியன் இருவரும் கணவன் மனைவியாக வாழ்கின்றனர்.
இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆனாலும் குழந்தை கூட பெற்றுக் கொள்ளாது தாங்கள் வளர்க்கும் காளை மாடுகளை பிள்ளைகள் போல வளர்கின்றனர்.
அதற்கு வெள்ளையன் கருப்பன் என்று பெயரிட்டு அதுவே தங்கள் வாழ்க்கையாக சந்தோஷமாக வாழ்கின்றனர். மாடு பெயரில் லோன் வாங்கினால் காளை காதுகளில் ஓட்டை போடுவார்கள் என்பதால் லோன் கூட வாங்காதவர்கள் இவர்கள். அப்படியென்றால் இவர்களின் பாசத்தை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள்.
மாடு என்று மற்றவர்கள் சொன்னால் கூட இவர்கள் கோபம்படுவதுண்டு.
ஒருநாள் இரவில் இரண்டு காளை மாடுகளும் காணாமல் போய்விடுகின்றன.
காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் கூட எடுப்பதில்லை. ஆனால் எம்எல்ஏ வீட்டு நாய்குட்டி காணாமல் போனால் எம்எல்ஏ மனைவி உறக்கம் இல்லாமல் தவிக்கிறார் என காவல் துறையினர் அலைந்து நாய்களை தேடுகின்றனர்.
அந்த காளை மாடுகள் கிடைத்ததா? எப்படி காணாமல் போனது?
இந்த காளை மாடுகளும் அதனை சுற்றி அந்த கிராமத்தில் நடக்கும் மாற்றங்கள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
படத்தில் முக்கியமான கேரக்டர்கள் 4 அல்லது 5 தான். மற்றபடி இவையில்லாமல் எடப்பாடி ஸ்டாலின் சீமான் பாஜக விவசாய சங்கத் தலைவர் என அவர்கள் பாணியில் சிலர் வந்து செல்கின்றனர்.
அவற்றை நாம் வரிகளில் சொல்லிவிட முடியாது. நீங்கள் படத்தை பார்த்தால் புரிந்துக் கொள்வீர்கள்.
குன்னி முத்து கேரக்டரில் மிதுன் மாணிக்கம். பிள்ளைகளாக இவர் காளைகளை வளர்க்கும் காட்சிகளிலும் தேடும காட்சிகளிலும் நம்மையும் தேட வைக்கிறார்.
ஜோக்கர் படத்துக்கு பிறகு அசல் கிராமத்து பெண்ணை ஜெராக்ஸ் எடுத்து வந்திருக்கிறார் ரம்யா பாண்டியன், காளைகளே தன் பிள்ளை என்னும் காட்சியில் தாய் பாசத்தில் ஜொலிக்கிறார்.
மிதுன் மாணிக்கத்தின் நண்பனாக வரும் வடிவேல் முருகன் செம. இவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் சூப்பர். ஹிந்தி தெரியாது போடா என்பது முதல் அரசியல் நையாண்டி வரை அப்ளாஸ் அள்ளுவார்.
நியூஸ் ரிப்போர்ட்டராக வாணி போஜன். வாவ் சூப்பர். ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அருமையான நடிப்பில் நம்மை கவர்கிறார்.
ஒரு கிராமத்து சிறுமியிடன் உன் தலை முடி ஏன் இந்த கலரில் இருக்கிறது என கேட்கிறார். என் வீட்டில் தேங்காய் எண்ணெய் இல்லை. ஆமா… உங்க முடியும் செம்பட்டையா இருக்கே உங்க வீட்லயும் எண்ணெய் இல்லையா? என கேட்கும்போது அசத்தல்,
அதுபோல் தன் நியூஸ் சேனலில் இவரது படைப்பு உரிமை பறிக்கப்படும் போது இவர் எடுக்கும் முடிவு சபாஷ் போட வைக்கும்.
மற்றபடி ரம்யா வீட்டு பாட்டி கேரக்டர் சூப்பர். வாரே வா…
டெக்னிஷியன்கள்..
தன் முதல் படத்திலேயே இயக்குனர் அரசில் மூர்த்தி தன் அச்சு முத்திரையை சினிமாவில் பதித்துவிட்டார்.
காளைக்கும் குடும்பத்தினருக்கும் உள்ள பாசத்தை இன்னும் அழுத்தமாகவே காட்டியிருந்தால் காளை காணாமல் போனால் நாமும் அழுதிருப்போம்.
பாடகர் நடிகர் கிரிஷ் இசையமைப்பில் பாடல்கள் சூப்பர். பின்னனி இசையும் காளையோடு சாரி கதையோடு பயணிக்க வைக்கிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவு கிராமத்தின் காட்சிகளை கண்களுக்கு இதம் சேர்கிறது.
சூர்யா தனது 2டி நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து நம் சமூகத்திற்கு ஒரு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
வரும் 24ஆம் தேதி இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளதால் பார்த்து ரசியுங்கள்.
ஆக… இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்.. எவன் ஆண்டாலும் நாம் மாறினால் மட்டும்தான் இந்த நாடு மறுமலர்ச்சி அடையும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.
Raame Aandalum Raavane Aandalum movie review and rating in Tamil