பைசா திரை விமர்சனம்

பைசா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஸ்ரீராம், ஆரா, தீபிகா, நாசர், மயில்சாமி, ராஜசிம்மன், சென்ட்ராயன், மதுசூதன் ராவ், ராம்ராஜ் மற்றும் பலர்.
இசை : ஜே.பி.
ஒளிப்பதிவு : கே.பி. வேல்முருகன்
படத்தொகுப்பு : எஸ்.பி. அஹ்மது
இயக்கம் : அப்துல் மஜீது
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : மஜீத், ரங்கநாதன் ராஜீ, கராத்தே கே. ஆனந்தன்

கதைக்களம்…

குப்பை பொறுக்கும் ஸ்ரீராம் ஒருமுறை ஆரா தவறவிட்ட பணத்தை அவரிடம் கொடுக்கிறார். அதுமுதல் அவர்களுக்குள் காதல் வளர்கிறது.

இதனிடையில் கூவம் நதியில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பண மூட்டை ஸ்ரீராமிடம் சிக்குகிறது.

இதனை வைத்து செட்டிலாக திட்டமிடுகிறார் அவர். ஆனால் அதனால் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வர இறுதியாக என்ன செய்கிறார்? என்பதே படத்தின் கதை.

????????????????????????????????????????

கதாபாத்திரங்கள்…

குப்பை பொறுக்கும் பையனாக ஸ்ரீராம். சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். நன்றாக அழுகிறார்.

ஆனால் இவரை பார்த்தால் அழுக்கு பையனாகவே தோன்றவில்லை. எப்பொழுதும் க்ளீனாக வருகிறார். இவர் மட்டுமல்ல இவரது கூட்டாளிகளும் ப்ரெஷ்ஷாகவே வருகிறார்கள்.

ஆரா… அமர்களப்படுத்தியிருக்கிறார். கண்களால் காதல் மொழி பேசி ரசிக்க வைக்கிறார். ஆனால் காதல் சந்தியாவின் தங்கை போலவே இருக்கிறார்.

நாசர் சில காட்சிகளில் படத்தின் கருத்தை வலியுறுத்தி செல்கிறார். குப்பை போடுற நம்மள விட குப்பையை பொறுக்கி சுத்தம் செய்கிற அவர்கள் தான் நாட்டிற்குதான் தேவை என்பதை நன்றாகவே உணர்த்தியிருக்கிறார்.

சென்ட்ராயனுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

ஏழை பத்து ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3 ரூபாய் பிடிக்கிறாங்க. பணக்காரன் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எக்ஸ்ட்ரா டாக் டைம். இதாண்டா உலகம்.

மதுசூதன் ராவ் மற்றும் ராஜசிம்மன் இருவரும் தங்கள் பார்வையாலே வில்லத்தனம் செய்கின்றனர். நல்ல தேர்வு.

தீபிகா வில்லனை கிக் ஏற்ற அடிக்கடி வருகிறார். மயில்சாமி காட்சிகளில் காமெடியே இல்லையே ஏன்..?

Paisa-Tamil-movie-poster-6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

 • ஜே.வி.யின் இசையில் ஓரிரு பாடல்கள் ஓகே.
 • வேல்முருகன் ஒளிப்பதிவில் எல்லாரும் பளிச்சென இருக்கிறார்கள். அழுக்கு குப்பை என்றாலும் பெரிதாக அசிங்கமே தெரியவில்லை. அதனால் யதார்த்தம் குறைகிறது.

படத்தின் ப்ளஸ்….

 • தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்மாதிரி
 • ஆராவின் அழகான நடிப்பு
 • க்ளைமாக்ஸ் மற்றும் ஆக்ஷன் பைட்

படத்தின் மைனஸ்…

 • குப்பை பொறுக்குபவர்களின் போல் அல்லாத பேச்சு மற்றும் கேரக்டர்கள்.
 • பணம் வீட்டில் இருக்கும்போது வீட்டை டைட்டாக பூட்டி செல்லும் ஸ்ரீராம் வீட்டுக்குள் சென்றால் உள்ளே பூட்ட மாட்டாரா?
 • பணமூட்டை அடிக்கடி திறந்து பார்ப்பது ஏன்..?

paisa

இயக்குனர் அப்துல் மஜீத் ஒரு நல்லெண்ண அடிப்படையில் எடுத்து நல்ல கருத்துக்களையும் கூறியிருக்கிறார்.

க்ளைமாக்ஸ் பைட்டில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்தால் இன்னும் ரசிக்க வைத்திருக்கும்.

மொத்தத்தில் பைசா…. கொஞ்சம் வரவு..!

ஒரு மெல்லிய கோடு விமர்சனம்

ஒரு மெல்லிய கோடு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அர்ஜீன், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷா பட் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கிருஷ்ணஸ்ரீராம்
படத்தொகுப்பு : கிருஷ்ண ரெட்டி
இயக்கம் : ஏஎம்ஆர். ரமேஷ்.
பிஆர்ஓ: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : ரூபாதேஷ் ராஜ்ராய்

கதைக்களம்…

ஒரே இரவில் நடக்கும் கதைதான் இப்படம்.

மல்ட்டி மில்லியனர் மனீஷா கொய்ராலா கொலை செய்யப்படுகிறார். அவருடைய உடல் ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்ய வைக்கப்பட்டுள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தும், உடல் காணாமல் போய்விடுகிறது. எனவே போலீஸின் சந்தேக பார்வை மனீஷாவின் கணவர் ஷாம் மீது விழுகிறது.

மிடுக்கான போலீஸ் அதிகாரி அர்ஜுன் அவரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ஒன்றன் பின் ஒன்றாக உண்மைகளை வெளிச்சத்து கொண்டு வருகிறார்.

ஆனால் க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று.

omk 2

கதாபாத்திரங்கள்…

எத்தனை நடிகர்கள் போலீஸ் வேடத்தில் நடித்தாலும் அர்ஜுனுக்கு இந்த கேரக்டர் ஒரு வரப்பிரசாதம்தான்.
கிரிமினலை விட இவர் ஒவ்வொன்றாக திட்டம் தீட்டுவது ரசிக்க வைக்கிறது.

ஆனால் பைட் எதுவும் இல்லாமல் அமைதியாக வந்து அசத்தியிருக்கிறார்.

எந்த நடிகரும் ஏற்காத வேடத்தை ஷாம் செய்துள்ளார். சாக்லெட் பாயாக வந்த இவர் சமீபகாலமாக சவாலான பாத்திரங்களை தேர்ந்தெடுத்து வருகிறார்.

டாய்லெட்டில் பேப்பரை போட்டுவிட அது உள்ளே செல்லாமல் இருக்கையில் அதை தின்பது என கேரக்டராக மாறியிருக்கிறார் ஷாம். பார்க்கும் நமக்கே உவ்வே… என தோன்றும்.

omk 3

தன்னை விட மூத்த மனிஷா கொய்ராலாவை ஷாம் ஏன் திருமணம் செய்தார்? என்பதே இப்படத்தை பார்க்க வைக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு மனீஷா கொய்ராலா. வயதான கேரக்டர் என்பதால் ஓகே. ஆனால் அதிலும் தன் கணவருக்கு தன் மீது காதல் இல்லையோ? என ஏங்குவது ரசிக்க வைக்கிறது.

ஷாமின் காதலியாக அக்ஷா பட் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார்.

படத்தின் இயக்குனர் A.M.R.ரமேஷும் அர்ஜீனுடன் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார். இனி அவருக்கு நடிப்புக்கான வாய்ப்புகள் வரும்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் இசையில் பின்னணி மிரட்டல். படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ணஸ்ரீராம் மற்றும் எடிட்டர் கிருஷ்ண ரெட்டியும் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

???????????????????????????????????????????????????????

படத்தின் ப்ளஸ்…

 • ஆரம்பம் மற்றும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
 • ஷாமின் மாறுபட்ட நடிப்பு

படத்தின் மைனஸ்…

 • அருமையாக திட்டம் போட்டு மனைவியை கொலை செய்யும் ஷாம், போலீஸ் விசாரணையில் அலட்சியமாக இருப்பது ஏன்..? துளிகூட முகத்தில் சோகம் இல்லையே?

?????????????????????????????????????????????????????

மனைவி இறந்த துக்கமே இல்லாமல் இருந்தால் போலீஸ்க்கு சந்தேகம் வரும் என இவருக்கு தெரியாதா? இயக்குனர் கவனிக்கவில்லையா?

மொத்தத்தில் ‘ஒரு மெல்லிய கோடு’ – நிச்சயம் பார்க்கலாம்.

ஜாக்சன் துரை விமர்சனம்

ஜாக்சன் துரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, சண்முக சுந்தரம் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : யுவா
இயக்கம் : தரணிதரன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : எம்.எஸ். சரவணன்

கதைக்களம்…

பிந்துமாதவியை மணக்க சிபிராஜ் மற்றும் கருணாகரன் போட்டி போடுகின்றனர். எனவே பிந்துவின் தந்தை சண்முக சுந்தரம் பேய் பங்களாவில் ஒரு வாரம் தங்க உத்தரவு இடுகிறார்.

அப்போதுதான் அங்குள்ள ஜாக்சன் என்ற பேய்க்கும் துரை என்ற பேய்க்கும் நடக்கும் பனிப்போர் இவர்களுக்கு தெரிய வருகிறது.

அந்த போராட்டம் இந்தியாவின் சுதந்திர காலப் போராட்டம் என்பதால் பேய்களுடன் இணைந்து இவர்கள் இருவரும் போராட இறுதியில் என்ன ஆனது என்பதே இப்படத்தின் மீதிக்கதை.

Jackson-Durai-movie-poster

கதாபாத்திரங்கள்…

பின்னணி இசையோடு சத்யராஜின் அறிமுக காட்சி செம. தன் மகள் தன் நாட்டுக்காக உயிரை விடுவதும், அதன்பின் தானும் உயிரை விடுவதும் ஓகே. இரண்டு தோற்றத்திலும் மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ஆனால் அதன்பின் வரும் காட்சிகள் எல்லாம் என்ன சொல்வதன்றே தெரியவில்லை. பேயாக வந்து சாவதும் பின் பேயாக வருவதும் மீண்டும் பேயாக… படிக்கிற உங்களுக்கு கடுப்பா இருக்கா? எங்களுக்கும்தான்.

இவருடன் ஜாக்சன் பேய், மனைவி பேய், குழந்தை பேய் மற்றும் மொட்டை ராஜேந்திரன் பேய் என பேய் பேய்யாக வரிசை கட்டி நிற்கும்போது சிரிக்கவும் முடியவில்லை. பயமும் வரவில்லை.

சிபிராஜின் இன்ட்ரோ ஸ்மோக் ஸ்பெக்ட் எல்லாம் ஓகேதான். ஆனால் காட்சிகளில்தான் வலுவில்லை. கூளிங் கிளாஸ் குணாவை கூட இதில் காணல. ட்ரை பன்னுங்க ப்ரோ.

கருணாகரன் சில நேரம் காமெடி செய்து மற்ற நேரங்களில் அவரே டயர்ட் ஆகிவிடுகிறார்.

பிந்து மாதவிக்கு ஏன் இந்த நிலைமை? படத்தில் சில காட்சிகளில் அவரை பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கிறது. மகாநதி சங்கரும் இருக்கிறார்.

யோகிபாபுக்கு நல்ல கை தட்டல் இருக்கிறது. ஆனால் அவர் வரும் காட்சிகள்தான் குறைவு.

jackson-durai-movie-trailer

தொழில்நுட்ப கலைஞர்கள்….

பாடல்கள் கைகொடுக்கவில்லை. ஆனால் படத்தை பின்னணி இசை மட்டும் தாங்கி நிற்கிறது. ஆனால் பேய் பயம் நமக்கு வரவில்லை என்பதால் அதுவும் சப்பென்று ஆகிவிடுகிறது.

மற்றவர்களை விட ஒளிப்பதிவாளர் யுவாவிற்கும் ஆர்ட் டைரக்டர் டி.என். கபிலனுக்கும் நிறைய வேலை இருந்துள்ளது.

பேய் படம் என்பதால் முழுக்க இருட்டிலேயே எடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளருக்கு வேலை இருந்த அளவுக்கு ஒளிக்கு வேலையில்லை.

படத்தின் ப்ளஸ்…

 • மோட்டார் பைக் பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது.
 • கலை கபிலனும் ஒளிப்பதிவாளர் யுவாவும் படத்தை தாங்கி நிறுத்துகின்றனர்.
 • சுதந்திர போராட்டக் காலத்தில் உயிர் இழந்தவர்கள் தங்கள் சுதந்திர நாட்டை காண வேண்டும் என்பதற்காக பேய்யாக பங்களாவில் வாழ்வது.
 • Jackson-Durai-Tamil-Movie-Satyaraj-Stills-1

படத்தின் மைனஸ்…

 • ப்ளாஷ்பேக்கில் சத்யராஜ் மற்றும் அவரது மகள் இலக்கிய தமிழில் பேசுகின்றனர். பின்னர் நவீன தமிழ் மீண்டும் அடுத்த நொடியே இலக்கிய தமிழ் பேசுகின்றனர்.
 • பின்னர் நவீன காலத்தில் சிபிராஜ் பேசும்போது கொச்சை தமிழ் என்பது என்ன நியாயமோ..?
 • பேய்யுடன் மனிதன் போராடும் படங்களை பார்த்திருப்போம். ஆனால் இதில் ஒரு மனிதன் மற்றும் பேய்கள் சேர்ந்து வெள்ளைக்கார பேயுடன் போராடுவது எல்லாம் ரொம்பவே டூ மச்.
 • உடம்பு மற்றும் முகம் முழுவதும் வெள்ளை சாயம் பூசி கண்களில் மட்டும் கறுப்பு மை பூசி பயமுறுத்துவது எல்லாம் ஓவர் பழசு.

சத்யராஜ் போன்ற அனுபவமிக்க கலைஞர்களை கொண்டு இன்னும் நன்றாக கொடுக்க முயற்சித்திருக்கலாம் இயக்குனர் தரணிதரன்.

பர்மா படத்தில் பட்டைய கிளப்பியவர். இதில் சறுக்கியிருக்கிறார்.

மொத்தத்தில் ஜாக்சன் துரை… பயமில்லாத ஜவ்வு துரை

அப்பா திரை விமர்சனம்

அப்பா திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சமுத்திரக்கனி, தம்பி ராமையா, நமோ நாராயணன், வினோதினி, ப்ரீத்தி, வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத் மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
படத்தொகுப்பு : ஏஎல் ரமேஷ்
இயக்கம் : சமுத்திரக்கனி
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : நாடோடிகள் புரொடக்சன் சமுத்திரக்கனி

 

கதைக்களம்…

மூன்று அப்பாக்களும் (பெற்றோர்களும்) அவர்களது குழந்தைகளும். இவர்களுடன் வேறொரு பெற்றோரின் இரண்டு மகள்கள்.

தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா. (சமுத்திரக்கனி-விக்னேஷ்)

குழந்தை பிறந்தது முதல் படிப்பு, அமெரிக்க வேலை, திருமணம் வரை திட்டமிடும் கண்டிப்பான ஒரு அப்பா. (தம்பி ராமையா-ராகவ்)

மூன்றாவது அப்பா.. மகனே நாம் இருக்கிற இடம் யாருக்கும் தெரியாம இருந்துக்கனும் என்று சொல்பவர்.  (நமோ நாரயணன்-நசாத்)

இவர்களில் எந்த அப்பாவின் மகன் நல்ல நிலைக்கு உயர்ந்து வருகிறான்? எப்படி வளர்க்கப்படுகிறான்? எந்த அப்பாவின் ஆசை நிறைவேறியது என்பதே இந்த படம்.

appa 1

கதாபாத்திரங்கள்…

ஒரு அப்பாவாக மட்டுமில்லாமல் தன் மகனுக்கு ஒரு நண்பனாகவும் மற்ற குழந்தைகளுக்கு அப்பாவாகவும் வாழ்ந்திருக்கிறார் சமுத்திரக்கனி.

மகனுக்கு சைக்கிள் கற்று கொடுப்பது, தனியாக பஸ்சில் பயணிக்க சொல்வது, நீச்சல் கற்று கொடுப்பது, அவன் போக்கில் இவர் சென்று வழிகாட்டுவது என அனைத்தும் ரசிக்கும் ரகம்.

மாமனார் வேலராமமூர்த்திக்கு மருமகனாக இல்லாமல் மகனாகவும் தன் கேரக்டரை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்.

இவரின் நண்பனாக வரும் டாக்டர் சசிகுமாரும் அனல் பறக்கும் வசனங்களை பேசி செல்கிறார்.

எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஜெயித்து காட்டுவேன் என்பது போல தம்பி ராமையா இதிலும் வெளுத்து கட்டியிருக்கிறார். மகனையும்தான்.

எந்த குழந்தை பிறக்கும்? என்ன பெயர் வைக்கலாம்? என்பது தொட்டு, பிறக்கும் நேரம், படிக்கும் பள்ளி என அனைத்தையும் முடிவு செய்யும்போது சில அப்பாக்களை நினைவுப்படுத்துகிறார்.

appa 2

இவர்களுடன் பெரிய காக்கா முட்டை விக்னேஷ், ராகவ், யுவஸ்ரீ, கேப்ரில்லா, நசாத் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை ஜொலிக்க வைக்கிறார்கள்.

சின்ன சின்ன பாவனைகளையும் அழகாக காட்டி நம் மனதை கவர்கிறார்கள்.

சமுத்திரக்கனியின் மனைவியாக ப்ரீத்தி. பிடிவாதத்தால் பெண்கள் நினைப்பதை சாதிப்பார்கள் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு.

தம்பி ராமையாவின் மனைவியாக வினோதினி. கணவன் சொல்லை மீறமுடியாமல் தவிப்பதை அழகாக காட்டியுள்ளார்.

நமோ நாராயணன், அணில் முரளி, ஆதிரா ஆகியோருக்கு பெரிய வேலை இல்லையென்றாலும் கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

appa 4

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மாணவனின் வளர்ச்சி பள்ளியில் இல்லை. அவனிடம் இருக்கிறது என சமுத்திரக்கனி சொல்லியதும் ஒலிக்கும் இளையராஜா குரல் அருமை. நம்மை 1980ஆம் ஆண்டுக்கே கொண்டு செல்கிறார் இசைஞானி.

இப்படத்திற்கு பாடல்கள் பெரிதாக தேவையில்லை என்பதால் அதை பின்னணி இசையில் சரி கட்டியுள்ளார்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்கிறது. ஜாக்கியின் கலையில் குழந்தைகளும் அவர்களது வீடுகளும் அசத்தல்.

படத்தின் ப்ளஸ்….

 • படத்தின் க்ளைமாக்ஸ் ஏற்படுத்தும் ஓர் அதிர்ச்சி உணர்வு
 • உணர்ச்சிமிக்க இப்படத்திற்கு உயிர் கொடுத்த வசனங்கள்
 • திரைக்கதையும் அதனைச் சார்ந்த குழந்தைகள் நட்சத்திரங்கள்
 • ஒளிப்பதிவும் அதற்கான பின்னணி இசையும்

படத்தின் மைனஸ்…

 • அப்பாக்கள் என்ன வேலை செய்கிறார்கள்? என்பதே தெரியவில்லை.
 • 3 அப்பாக்கள் ஓகே. அதில் ஒருவருக்காவது மகள் இருப்பதாக வைத்திருக்கலாமே?

appa 5

இப்படத்தை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் தானே இயக்கி வசனம் எழுதி தயாரித்து நடித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.

நிச்சயம் வேறு எவராவது இதில் நுழைந்திருந்தால் இப்படி ஒரு படைப்பை அவரால் கொடுத்து இருக்க முடியாது.

அதுபோல் வசனங்கள் மனதில் என்றும் நிற்கும்.

 • பாய் கடைக்கும் ஸ்கூல் பசங்க ப்ராஜக்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? நீங்க யாரை ஏமாத்துறீங்க?
 • அப்பா கிட்ட சொல்ல முடிஞ்ச விஷயத்தை மட்டும் பன்னு. சொல்ல முடியாத விஷயம்னா அது தப்புன்னு அர்த்தம். பண்ணாதே.
 • அழுக்கு மனசுல சேர்ந்துட்டே இருந்தா அது வக்கிரமா மாறும். ஆசிட் அடிக்கக் கூட தோனும் என்ற வசனங்கள் படத்தை தாங்கி நிற்கின்றன.

appa cycle

தன் மகனின் சக மாணவியை அவன் தோழியாக பார்க்க சொல்லும் அந்த காட்சிகள் அருமை.

க்ளைமாக்ஸ் எவரும் எதிர்பாராதது. இப்படியும் சில பள்ளிகள் இன்று இருக்கின்றன என்ற உண்மை சம்பவத்தை சொன்ன சமுத்திரக்கனிக்கு ஆயிரம் சபாஷ் சொல்லலாம்.

இப்படத்தை பார்த்தபின் அப்பாக்களும் குழந்தைகளும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் நல்லது.

மொத்தத்தில் அப்பா… குழந்தைகளின் குற்றாலம்

மெட்ரோ (2016) விமர்சனம்

மெட்ரோ (2016) விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிரிஷ், பாபி சிம்ஹா, மாயா, சென்ட்ராயன், துளசி, யோகி பாபு மற்றும் பலர்.
இசை : ஜோஹன்
ஒளிப்பதிவு : என் எஸ் உதயகுமார்
படத்தொகுப்பு : எம். ரமேஷ் பாரதி
இயக்கம் : ஆனந்த கிருஷ்ணன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : E5 Entertainments, Metro Productions

கதைக்களம்…

மெட்ரோ சிட்டியில் வாழும் சத்யா ஒரு காலேஜ் ஸ்டூடண்ட். இவருடன் படிக்கும் ஒரு மாணவியை காதலிக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், தன் நினைத்ததை எல்லாம் அடைய, தன் பேராசையால் செயின் பறிப்பில் ஈடுப்படுகிறார்.

அதன்பின்னர் அவரது குடும்பம் என்ன ஆனது? பேராசை அவரை நிம்மதியாக வாழவிட்டதா? என்பதே இந்த மெட்ரோ.

metro maya

கதாபாத்திரங்கள்..

அண்ணன் சிரிஷ்தான் படத்தின் நாயகன். படு ஸ்மார்ட். அம்மாவை கொலை செய்தவர்களையும், செயின் திருடர்களையும் ஒவ்வொருவராக தேடி பிடிப்பதும், கொல்வதும் செம.

படம் சீரியஸ் படம் என்பதால் கடைசி நிமிடம் வரை அப்படிதான் இருக்கிறார். அழகான காதலி மாயா இருந்தும் இவர் மயங்கவில்லை.

சிரிஷின் தம்பியா சத்யா. திருடன் என்றே சொல்லமுடியாத அளவிற்கு அப்பாவியான முகம். பொருத்தமான தேர்வு.

இவரின் பேராசையால் வில்லன் பாபி சிம்ஹாவுக்கே ஆப்பு அடிப்பது காட்சிகள் சூப்பர்.
அதுவும் இடைவேளை காட்சியில் போலீஸையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிப்பது அப்ளாஸை அள்ளுகிறது.

metro stills

ஹீரோவானாலும் இன்னும் அந்த வில்லத்தனம் பாபி சிம்ஹாவிடம் பாக்கியிருக்கிறது.

திருடுவதற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுப்பது நிஜத்திருடர்களுக்கு ஒரு பாடம். நமக்கும் ஒரு எச்சரிக்கைதான்.

இதில் ஹீரோயின் மாயாவுக்கு வேலையில்லை. சென்ட்ராயன் நல்லவனாக நடித்து, நமக்கு புதுவிதமான அனுபவம் கொடுத்துள்ளார்.

யோகிபாபு வரும் அந்த ஒரு காட்சியிலேயே கேரி ஆன் ப்ரோ. என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

சிரிஷின் பெற்றோர்கள் நல்ல தேர்வு. துளசி கடைசியில் அழவைக்கிறார்.

metro image

தொழில்நுட்ப கலைஞர்கள்…

பாடல்களை விட ஜோஹனின் பின்னணி இசை படத்திற்கு பலம்.
என் எஸ் உதயகுமாரின் ஒளிப்பதிவில் செயின் பறிக்கும் காட்சிகள் நம் மனதையும் பறிக்கிறது.
எங்கும் சலிப்பு தட்டாத ரமேஷ் பாரதியின் அருமையான எடிட்டிங்.

படத்தின் ப்ளஸ்…

 • ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பு.
 • பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு

படத்தின் மைனஸ்…

 • அம்மாவை இழந்த பின் சிரிஷ் சீரியஸ் ஆக இருக்கலாம். ஆனால் ஜாலியான குடும்பம் என்று கூறும் இவர் படு சீரியஸாகவே வருகிறார்.
 • துளசியை கொலை செய்தவர்களின் ரேகையை போலீஸ் எடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் என்ன ஆனது? என்பதற்கு பதில் இல்லை.

metro bobby

இதுவரை நாம் பார்க்காத களத்தை எடுத்து, அதில் வேரின் ஆழம் வரை சென்ற இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணாவை அவ்வளவு பாராட்டலாம்.

வெறும் வழிப்பறியை காட்டாமல் அதற்கான ஸ்கெட்ச் உள்ளிட்டவைகளை சொல்லி, அனைவருக்கும் விழிப்புணர்வை கொடுத்திருக்கிறார்.

இதுபோன்ற செயின் திருடர்களை விடக்கூடாது என ஆடியன்சே சொல்லுமளவுக்கு காட்சிகளில் பலம் சேர்த்திருக்கிறார் ஆனந்த கிருஷ்ணன்.

இது சிட்டி மக்களுக்கு மட்டுமில்லை. எப்போதாவது சிட்டிக்கு வந்து செல்லும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்தான்.

சென்சார் தடை செய்த இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பது நல்லது.

மொத்தத்தில் மெட்ரோ… சிட்டியில் பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை..!

அம்மா கணக்கு விமர்சனம்

அம்மா கணக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அமலா பால், ரேவதி, சமுத்திரக்கனி, பேபி யுவஸ்ரீ, மாளவிக்கா, விஷால் தேவ், விக்கி மற்றும் பலர்.
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : கவேமிக் யு அரி
படத்தொகுப்பு : ராஜா முகம்மது
இயக்கம் : அஸ்வின் ஐயர் திவாரி
பிஆர்ஓ : ரியாஸ் கே அஹ்மது
தயாரிப்பாளர் : தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய்.

கதைக்களம்…

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி யுவஸ்ரீ படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார். முக்கியமாக கணக்கு பாடத்தில் பூஜ்யம்தான் எடுப்பதால் இவளது அம்மா அமலா பால் கவலைப்படுகிறார்.

ரேவதி வீட்டில் அனைத்தும் வேலைகளை செய்யும் இவர், ரேவதியிடம், மகளை நன்றாக படிக்க வைக்க ஐடியா கேட்கிறார்.

 

Amma Kanakku Still 6

 

அவர் சொன்னப்படியே அமலா பால் அவதாரம் எடுத்து தன் மகளை கலெக்டராக்குகிறார். என்ன செய்தார்? எப்படி அவரது மகள் படித்தார் என்பதே இந்த அம்மா கணக்கு.

கதாபாத்திரங்கள்…

படத்தின் ஹீரோ ஹீரோயின் எல்லாம் அமலா பால்தான். ஹோட்டலில் பத்து பாத்திரம் தேய்ப்பதும், ரேவதிக்கு அனைத்து பணிவிடைகளை செய்வதும், மீன் மார்க்கெட்டில் வேலை செய்வதும் என கவர்கிறார்.

காலையில் தொடங்கும் இவரது பணிகள் இரவு வரை நீள்வதும் பார்ப்பவரை மனதை கொஞ்சம் வருத்தமடைய செய்யும்.

 

Amma Kanakku Still 1

 

சமுத்திரக்கனியிடம் அட்மிஷன் கேட்பது, கலெக்டரிடம் பேசுவது என அசத்தினாலும் மகளுக்காக ஸ்கூல் யூனிபார்ம் மாட்டிக் கொண்டு செல்வது எல்லாம் கொஞசம் ஓவர்தான்.

இதில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. எப்போதும் இல்லாமல் மிடுக்கான பிரின்சிபாலாக வந்தாலும் பாடத்தில் அசத்துவது ரசிக்கலாம்.

பெற்றோரின் வலியை புரிந்துக் கொள்ளாமல், அம்மாவை திட்டுவதும், கேவலப்படுத்துவம், அசிங்கமாக பேசுவதும் இன்றைய அலட்சியமான குழந்தைகளை (ஒரு சிலரை) அடையாளப்படுத்தியிருக்கிறார் யுவஸ்ரீ.

 

Amma Kanakku Still 2

 

யுவஸ்ரீ நடிப்பில் நல்ல மெச்சூர்ட்டிக்கு இருக்கிறது. இறுதியில் அம்மாவின் கனவை பற்றி பேசி கலங்க வைக்கிறார்.

ரேவதிக்கு பெரிதாக வேலையில்லை. மற்றவர்களுக்கும் அதே நிலைமைதான். ஒரு சில மாணவர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் பின்னணி இசை படம் முழுக்க பேச வைக்கிறது. உனக்கும் எனக்கும், கனவுகள், இந்த வாழ்க்கை பாடல்கள் கேட்கலாம்.

அரசுப்பள்ளி என்பதாலும் மற்ற காட்சியிலும் படம் முழுவதும் ஒரு இருட்டான சூழ்நிலையே காணப்படுகிறது. கவேமிக் யு அரியின் ஒளிப்பதிவில் இரவு காட்சிகள் ஓகே.

 

Amma Kanakku Still 4

 

எடிட்டிங்கை ராஜா முகம்மது சரியாக செய்திருந்தாலும் இறுதிகாட்சியில் எல்லாம் திடீரென முடிவது மனதில் ஒட்டவில்லை.

படத்தின் ப்ளஸ்….

 • பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேறு வழியில் முயற்சித்திருக்கிறார்கள்.

 

Amma-Kanakku-Movie-Stills-20

 

 • கணவன் இல்லாத பெண்கள் படும் அவஸ்தைகளை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார்கள்.
 • பின்னணி இசையில் உயிர் கொடுத்துள்ளார் இசைஞானி.

படத்தின் மைனஸ்…

 • யுவஸ்ரீக்கு படிக்க வாய்ப்பு இல்லாமல் இல்லை. அவர் படிக்கவில்லை என்பது அவரது திமிர். ஆனால் அமலா பள்ளியில் படிக்க செல்வது எப்படி சாத்தியம்? அதுவும் திடீரென கணக்கு பாடத்தில் 52 மார்க் எப்படி?

 

Amma-Kanakku-Movie-Stills-23

 

 • நாங்க படிக்கிறப்ப எல்லாம் பாய்ஸ் கேர்ள்ஸ் ஒரே பெஞ்சில உட்கார விடமாட்டாங்க. இப்போ மாத்திட்டாங்களா என்ன? அரசுப்பள்ளியில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருப்பது எப்படி??
 • ஏழ்மையாக இருக்கிறார் அமலாபால். ஆனால் அவரது முகத்தில் வசதியான கலையம்சம் உள்ளதே. அதுகூட ஓகே. வீடே மிடில் கிளாஸ் போல்தான் தோன்றுகிறது.

அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் காட்சியும் படமாக்கலும் ஓகே. ஆனால் நிறைய லாஜிக் மீறல் உள்ளதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.

மொத்தத்தில் அம்மா கணக்கு… பெண்களுக்கான எனர்ஜி..!

More Articles
Follows