சிஸ்டத்தை சரிசெய்யும் கடவுள்..; OPERATION JUJUPI விமர்சனம்

சிஸ்டத்தை சரிசெய்யும் கடவுள்..; OPERATION JUJUPI விமர்சனம்

ஒன்லைன்…

இது ஒரு அரசியல் படம்தான். ஆனால் இதுவரை நாம் பார்க்காத கோணத்தில் சொல்லப்பட்ட அரசியல் படம். ‘ஆபரேஷன் ஜுஜுபி’ (Operation JuJuPi) அனைவரும் புரிந்துக் கொள்ளும் இந்தியாவில் ஆங்கிலப் படமாக ரிலீசாகியுள்ளது. தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதைக்களம்..

கதை நாயகன் காமெடி நடிகர் சாம்ஸ். இந்த நாட்டின் சிஸ்டம் சரியில்லை என்று கவலைப்படுகிறார். இதை அவர் தன் நண்பர்களிடம் சொல்லும்போது அவரை கிண்டல் செய்கின்றனர்.

உனக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. பேசாம நல்ல டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள் என்கின்றனர்.

ஒருநாள் சாம்ஸ் முன்பு கடவுள் தோன்றுகிறார். அவரின் பிரச்சனை குறித்து கேட்கிறார். மேலும் JuJuPi என்ற ஓர் பானத்தையும் வழங்குகிறார்.

அந்த அமிர்த பானத்தை பருகும் சாம்ஸ், இந்த நாட்டையே மாற்றும் அளவுக்கு ஒரு கனவு காண்கிறார்.

இதன்பின்னர் அந்த கனவு மூலம் அரசியல் உலகில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. அது என்ன என்பது தான் இந்த ‘Operation JuJuPi’.படத்தின் கதை.

படம் பற்றிய அலசல்…

இதுவரை ஒரு காமெடியனாகவே நாம் சாம்ஸ் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் தன்னால் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க முடியும். அதில் தன் நடிப்பு திறமையை ஒளிர செய்ய முடியும் என நிரூபித்திருக்கிறார்.

சாம்ஸின் மனைவியாக வினோதினி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பங்களிப்பில் கச்சிதம். வினோதினி செய்யும் காமெடிகள் நம்மை சிரிக்கவும் வைத்துள்ளது. பாராட்டுக்கள்.

ஸ்டைலிஷான இளம் பிரதமராக நடித்திருக்கிறார் ராகவ் என்பவர். அவர் போடும் திட்டங்கள் அனைத்தும் அப்ளாஸை அள்ளும்.

அரசியல்வாதிகளாக வையாபுரி, வெங்கட் சுபா, இயக்குநர் சந்தானபாரதி, படவா கோபி, ஜெகன், மனோபாலா உள்ளிட்ட காமெடியன்களும் உண்டு. ஆனால் இவர்களை படத்தில் சீரியஸாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர் படப்பிடிப்பில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது- கிழக்கு கடற்கரை சாலை இப்படியா இருக்கிறதா? என வேற ஆங்கிளில் நம்மை வியக்க வைத்துள்ளார்.

இது ஒரு ஆங்கிலப் படம் போல இருந்தாலும் தமிழக மக்களுக்கு புரியும்படி படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் வினோத் ஸ்ரீதர்.

கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார் அருண்காந்த். இத்துடன் இசையும் அமைத்துள்ளார். இவையில்லாமல் கலர் மிக்ஸிங், ஒலி கலவை உள்ளிட்ட 14 பணிகளை இவரே செய்திருக்கிறாராம்.

நாட்டில் உள்ள மக்கள் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார் இயக்குனர்.

நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். அவர்களும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார்.

இதே நாட்டில் வாழ்ந்துக் கொண்டு இதே நாட்டை குறை சொல்பவர்களையும் நாசூக்காக சுட்டிக் காட்டியிருக்கிறார். அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஆக… Operation JuJuPi… சிஸ்டத்தை சரிசெய்யும் கடவுள்

Operation JUUPi movie review and rating in Tamil

Related Articles