தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கதைக்களம்..
ஒரு சினிமாவுக்காக வடிவமைக்கப்பட்ட செட்டிங்கை சூட்டிங் முடித்தவுடன் சினிமா கலைஞர்கள் வசிப்பதற்காக கொடுக்கிறார் பட தயாரிப்பாளர்.
அங்கு வசிக்கும் சீனியர் துணை நடிகைதான் ஊர்வசி. அவரின் மகன்தான் இப்பட நாயகன் ராஜ்குமார்.
அவரும் அவரது நண்பர்களும் இணைந்து சினிமா வாய்ப்பை தேடிக் கொண்டே ஒரு நடன குழுவை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மற்றொரு இடத்தில் நாயகியும் அவரது அக்காவும் பரதநாட்டிய நடனப் பள்ளி நடத்தி வருகின்றனர்.
ஒரு சூழ்நிலையில் செட் போட்ட தயாரிப்பாளர் தனக்கு பணம் தேவைப்படுவதால் அந்த இடத்தை காலி செய்ய சொல்கிறார். இல்லை என்றால் ஒரு கோடியை அங்குள்ள குடும்பங்கள் சேர்ந்து கொடுத்தால் அந்த இடத்தை விட்டு தருகிறேன் என்கிறார்.
எனவே பணத்தை திரட்ட உலகளவில் நடக்கும் ஒரு நடனப் போட்டியில் கலந்துக் கொள்ள நினைக்கிறார் ராஜ்குமார்.
அதுப்போல் நாயகி ஸ்ரிஜிதா தன் வீட்டை அடமானத்தில் இருந்து காப்பாற்ற அந்த நடன போட்டியில் கலந்துக் கொள்கிறார்.
இந்த நடன குழுக்களுக்கு பலத்த போட்டியாக உள்ளவர்தான் நாகேந்திர பிரசாத். அவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள வருகிறார்.
இறுதியில் யார் ஜெயித்தார்கள்? இடத்தை நாயகன் நாயகி மீட்டார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நாயகன் ராஜ்குமார் நடிப்பை விட சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியுள்ளார். நல்ல உயரம். எனவே ஆக்சன் காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தலாம்.
நாயகிகள் 3 பேர் உள்ளனர். ஸ்ரிஜிதா, சோனால், கீரா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்துள்ளனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நாகேந்திர பிரசாத். நடனத்தில் கவர முயற்சித்துள்ளார். நடிப்பில் அதே பழைய பார்முலாதான்.
துணை நடிகை படும் பாட்டை வெகு இயல்பாக காட்டியுள்ளார் ஊர்வசி. ஆனால் இவருக்கு இருக்கும் அந்த ப்ளாஷ்பேக் தேவையில்லாத ஒன்று.
ஏதோ நாயகன் நாயகியிடம் சொல்வதற்காக வைக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது.
நாகேந்திர பிரசாத்தும் நாயகியின் அக்காவும் ஆடும் காட்சி நன்றாக உள்ளது. மேலும் ஒரு சில நடன காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், சுவாரஸ்யமான காட்சிகள் இல்லை.
மாடசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஆறுதல். பாலாஜியின் இசையில் பாடல்கள் ஓகே. டி.ஆர். பாடிய சங்கிஸ்தான் மங்கிஸ்தான் பாடல் தாளம் போடும் ரகம்.
கதைக்கு கொடுத்த வலுவை திரைக்கதையில் கொடுத்திருக்கலாம் இயக்குனர் வெங்கி.
கூத்தன்… டான்ஸ் பிடிக்கும்னா பாருங்க ஜீ