தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : கிஷோர், சுலீல்குமார், யாக்னா ஷெட்டி, மிதுன்குமார், ரஜினி மஹாதேவையா மற்றும் பலர்.
இயக்கம் : சரண் கே அத்வைதன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு: புஷ்பராஜ் சந்தோஷின்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
பி.ஆர்.ஓ. : அ. ஜான்
தயாரிப்பு : ஆவுடைத்தாய் ராமமூர்த்தி ஏ.ஆர். மூவி பாரடைஸ்
கதைக்களம்…
தன் களத்தூர் கிராம மக்கள் பசி தீர அப்பகுதியைத் தாண்டிச் செல்லும் எந்த வண்டியாக இருந்தாலும் அதை வழிமறித்து அதிலிருக்கும் பொருட்களைக் களவாடுகிறார் கிஷோர்.
இது தொடர்பான புகார்கள் போலீஸில் இருந்தாலும் இந்த கிராமத்தை காவல்துறையால் நெருங்க முடிவதில்லை.
அந்த அளவுக்கு கிஷோர் தன் கிராம மக்களுக்கு நன்மை செய்கிறார். கிராம மக்களும் அவரை தெய்வமாக மதிக்கின்றனர்.
இந்நிலையில், யாக்னா ஷெட்டியைக் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாக, அவரைக் காப்பாற்றிக் கூட்டி வந்து அவர் தந்தையிடம் ஒப்படைக்க வரும்போது எதிர்பாராத விதமாக யாக்னாவை திருமணம் செய்யும் கட்டாயம் ஏற்படவே இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர்.
ஆனால், கிஷோரை போலீஸ் கைது செய்கின்றனர். இதனால் தான் வரும்வரை யாக்னாவை பார்த்துக் கொள்ளும்படி தன் நெருங்கிய நண்பர் சுலீல் குமாரிடம் ஒப்படைக்கிறார்.
தனக்கு கல்யாணம் நடக்காத விரக்தியில் இருக்கும் சுலீல் இதை சாதகமாக பயன்படுத்தி யாக்னாவை தன் மனைவி என்று ஊர்காரர்களிடம் கூறிவிடுகிறார்.
இதனால் கிஷோருக்கும் சுலீப் நட்பு இடையே விரிசல் விழுகிறது.
ஒரு கட்டத்தில் யாக்னாவும் கிஷோருடன் சிறைச் செல்ல, அங்கு குழந்தை பிறக்கிறது.
தங்கள் மகன் சிறையில் வாழக்கூடாது என்பதால், ஒரு தம்பதியரிடம் வளர்க்கச் சொல்கின்றனர்.
ஆனால் அவர்கள் இந்த மகனையே பெற்றோருக்கு எதிராக திசை திருப்புகின்றனர்.
எனவே பெற்றோரை கொல்ல சொந்த மகன் மிதுன் குமாரே திட்டம் தீட்டுகிறார்.
இந்நிலையில் மிதுன் குமாரிடம் சிறுவயதில் பழகிய ரஜினி மஹாதேவையா அவரை காதலிக்கிறார்.
இப்படியாக செல்லும் இந்த போராட்டத்தின் மீதிக்கதையே களத்தூர் கிராமம்.
கேரக்டர்கள்…
நிறைய படங்களில் வில்லனாக நடித்த கிஷோர் இதில் நாயகன். இவருக்கு இனி இப்படியொரு கேரக்டர் அமையுமா? எனத் தெரியாது.
அந்த கிராமத்து தாதாவாகவும், பாசக்கார நண்பனாகவும், அன்பான கணவனாகவும், தன்மான தந்தையாகவும் வாழ்ந்திருக்கிறார்.
களத்தூர் கிராமத்தையும் இந்த கதையையும் தன் தோளில் சுமந்திருக்கிறார்.
யாக்னா கிராமத்து பெண்ணாக பளிச்சிடுகிறார்.
நண்பனாகவும் பின்னர் வில்லனாகவும் சுலீல்குமார் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இவர்களுடன் மிதுன்குமார், ரஜினி மஹாதேவையா ஆகியோரும் ரசிக்க வைக்கின்றனர்.
நீதிபதியாக, விசாரணை கமிஷன் அதிகாரியாக நடிப்பில் வரும் அஜய் ரத்னம், காவல்துறையினரை சாட்டையடி வார்த்தைகளால் அவர் விளாசும் காட்சிகளும், விசாரணையை நேர்மையாக நடத்தும் விதமும் நீதித்துறையின் மீதான மதிப்பை உயர்த்தவே செய்கின்றன.
தவிர, இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரிகளாக, காவலர்களாக நடித்துள்ள அனைவரும் எந்த இடத்திலும் இது ஒரு படம் என நாம் நினைத்துவிடாதபடி, வலம் வருகின்றனர். அதுதான் இந்தப்படத்தின், இந்தக்கதையின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்திற்கு பெரிய பலம் இளையராஜா இசை. இப்படத்திற்கு முதலில் இசையமைக்க மறுத்து, பின்னர் படத்தை பார்த்து ஒப்புக் கொண்டாராம்.
ஆக்சன் காட்சிகளில் இளையராஜா பின்னணி இசை அனல் பறக்க செய்கிறது.
சரண் கே அத்வைதன் இப்படத்திற்கு சரியான கேரக்டர்களை தேர்வு செய்திருப்பதன் மூலம் ஜெயித்திருக்கிறார்.
கதைக்கேற்ற புஷ்பராஜ் சந்தோஷின் ஒளிப்பதிவு இன்னும் அழகு சேர்க்கிறது.
படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ் அவர்களும் பாராட்டை பெறுகிறார்.
ஒரு சரியான கிராமத்து கதையை சில ட்விஸ்ட்கள் கொடுத்து தரமான படைப்பாக கொடுத்திருக்கிறார்கள் ஆவுடைத்தாய் ராமமூர்த்தியின் ஏ.ஆர். மூவி பாரடைஸ் நிறுவனம்.
களத்தூர் கிராமம்… கிராமத்து காவியம்