மண் வாசனையுடன் மகள் தாலாட்டு… சின்னஞ்சிறு கிளியே விமர்சனம் 3.5/5

மண் வாசனையுடன் மகள் தாலாட்டு… சின்னஞ்சிறு கிளியே விமர்சனம் 3.5/5

குழந்தைகளை கடத்தி மனித உறுப்புகளை திருடும் கும்பல் பற்றிய கதையுடன் அப்பா மகள் உறவை அழகாகவும் இயற்கை உணவு பழக்கங்களை யதார்த்தமாக சொல்லியுள்ள படம் சின்னஞ்சிறு கிளியே.

கதைக்களம்…

கதையின் நாயகன் செந்தில்நாதன். இவரது குடும்பமே இயற்கை மருத்துவத்தில் சிறந்தவர்கள். எனவே இயற்கைக்கு ஏற்றபடி இயற்கை உணவகம் நடத்தி வருகிறார். எந்த மருத்துவ பிரச்சினைக்கும் ஆங்கில மருத்துவத்தை நாடாதவர்.

தன் மனைவியை மகள் பிரசவத்தின் போது பறிகொடுத்துவிட்டதால் மகளை மிக பொறுப்பாக பாசமாக வளர்க்கிறார். மகளுக்கு சிட்டுக்குருவி என வித்தியாசமாக பெயரிட்டு அதற்கு சூப்பரான விளக்கமும் கொடுத்துள்ளார்.

ஊர் கோயில் திருவிழாவில் இவரது செல்ல மகள் காணாமல் போகிறார். சில மணி நேரங்களில் கிடைத்தாலும் மகளின் முதுகெலும்பிலிருந்து மஜ்ஜையை ஒரு மர்ம கும்பல் திருடியதை அறிகிறார்.

அதன்பிறகு என்ன செய்தார்? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கேரக்டர்கள்…

மகளை ஸ்கூல் சேர்க்கும் காட்சி முதல் இவரின் வித்தியாச பார்வை புலப்படுகிறது. எந்த ஹீரோயிசமும் இல்லாமல் சராசரி ஆளாக தன் பாத்திரத்தை நிறைவு செய்துள்ளார் செந்தில்நாதன்.

பொறுப்பான அப்பா மட்டுமில்லாமல் சமூக பொறுப்புள்ள மனிதனாகவும் உயர்ந்து நிற்கிறார். ஆனால் முகத்தில் சிரிப்பை அவ்வளவாக பார்க்கமுடியவில்லை. காதல் காட்சியில் கூட அப்படிதான். ஒருவேளை சசிகுமாரின் வாரிசாக வருவாரோ..?

தெத்துப் பல் அழகியாக பட நாயகியாக வருகிறார் சான்ட்ரா நாயர். கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிறைகிறார்.

செந்தில்நாதன் பாட்டியாக குலப்புள்ளி லீலா. (மருது விஷால் பாட்டி) நிறைய காட்சிகளில் வந்து யதார்த்த பாட்டியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் 2ஆம் நாயகி, நாயகியின் தம்பி, சின்ன குழந்தை என அனைவரும் கச்சிதம்.

டெக்னீஷியன்கள்…

சில நேரங்களில் ஒளிப்பதிவு டல்லா இருந்தாலும் கிராமத்து வெளிச்சம் இப்படித்தான் இருக்கும் என மனதை தேற்றிக் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் பாண்டியனிடம் பெரிதாக குறையில்லை. மஸ்தான் – காதர் இசையில் பாடல்கள் ஓரிரு முறை கேட்கலாம்.

தமிழ் மண், இயற்கை வைத்தியம், தாத்தா பாட்டி பாசம், சமூக பொறுப்பு என அனைத்தையும் கமர்சியல் இல்லாமல் கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன்.

ஆக சின்னஞ்சிறு கிளியே… மண் வாசனையுடன் மகள் தாலாட்டு

Chinnanjiru Kiliye movie review and rating in Tamil

Related Articles