தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பாடகி ராஜலட்சுமி செந்தில் முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள படம் ‘லைசென்ஸ்’.
இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா பேசும்போது,…
“ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது.
இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும். ஆனால் ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த கொஞ்ச நேரத்திலேயே, படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்து விட்டார்.
ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.. உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாக தான் இருக்கும்” என்றார்.
இயக்குனர் கணபதி பாலமுருகன் பேசும்போது…
“எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள்.. எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று கூறினேன்.
படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.
இந்த படத்தில் பல நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ராட்சசர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். இந்த படத்தில் பாடல்களை எழுதியுள்ள ரமணிகாந்தன் வரும் காலத்தில் பாடலாசிரியர் யுகபாரதிக்கு டப் கொடுப்பார். சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார்.
மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் N.ஜீவானந்தம் பேசும்போது,…
“இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து மாதம் நடைபெற்றது. அந்த சமயத்தில் இயக்குனர் இப்படி பேசி நான் பார்த்ததில்லை. இன்று தான் இவ்வளவு பேசியுள்ளார். ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உலகம் முழுக்க சென்று பேசியுள்ளேன். ஆனால் இன்று நான் தயாரித்துள்ள படத்தின் விழா மேடையில் நின்று பேசுவது புதிதாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பழ.கருப்பையா நடித்துள்ளார் படப்பிடிப்பு சமயத்தில் என்னை தான் புதிதாக துவங்கிய கட்சியில் சேர்வதற்காக கூட அழைத்தார். இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது தந்தை நாடக நடிகராக இருந்தவர்.. மூன்று படங்களில் நடித்துள்ளார்.. அவரை தொடர்ந்து நானும் சினிமாவிலேயே பயணிக்க துவங்கியுள்ளேன்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கூச்சம் இல்லாத நடிகை அவர் மிகப்பெரிய கூட்டங்களில் கலந்துகொண்டு அங்கு இருப்பவர்களை கையாளும் விதத்தைப் பார்த்து அவர் இந்த படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என நான் ஒப்புக் கொண்டேன். அபி நட்சத்திரா நடித்திருக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது நான் அழுதேன்.
நானும் அடிப்படையில் ஒரு கவிஞன் என்றாலும் இந்த படத்தில் பாடல் எதுவும் எழுதாமல் மூன்று பாடல்களையும் ரமணி காந்தனையே எழுத சொல்லிவிட்டேன். அவருக்கு சீக்கிரம் ரசிகர் கிளப்பும் ஆரம்பிக்க இருக்கிறேன்.
இந்த நிகழ்வில் எனது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பையும் வெளியிடுகிறேன். மன்னார்குடி பின்னணியில் கால்பந்தாட்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு கோல் என்று டைட்டில் வைத்துள்ளோம்.
ஒரு கிராமம் எப்படி கால்பந்து விளையாட்டால் பிரிகிறது, பின் எப்படி கால்பந்து விளையாட்டால் ஒன்று சேர்கிறது என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஏவிஎம் நிறுவனத்தின் 175வது படத்தை இயக்கிய குமரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்குகிறார்” என்று கூறி தனது அடுத்த படத்தின் இயக்குனர் குமரனையும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
The producer chased home came and gave the salary says Pala. Karuppiah