டிராபிக் ராமசாமி மரணம்.: பெரிய கட்டிடங்களுக்கு பார்க்கிங் வசதி கட்டாயம் என ஆணை வாங்கியவர் இவரே.; அவரின் பாதை ஒரு பார்வை

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் டிராபிக் ராமசாமி.

2021 மார்ச் மாதம் இறுதி வாரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் இராமசாமி.

இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 87.

இறப்பதற்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு கனிமொழி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிராபிக் ராமசாமி கடந்து வந்த பாதை..
—————————————————————-

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவார்.

எனவே தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.

பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்ற நடைமுறையைக் கடைப்பிடித்தவர்.

இவரின் நேர்மையே இவருக்கு எதிரிகளை உருவாக்கி தந்தது. எனவே ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ப்ளக்ஸ் பேனர் கலாச்சாரம் அதிகளவில் இருந்தது. நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர் இருந்தால் இவரே தனி ஆளாக நின்று கிழித்து எறிவார்.

மேலும் அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பார்.

இவர் ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்றவர் இவரே.

சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய முதலாளிகள் உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க காரணமாக இருந்தார். அதன்படி கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு வழிமுறையை உருவாக்க இது வழி வகுத்தது.

சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார்.

“தேர்தல் களம்..*

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனித்து நின்றார்.

டிராபிக் ராமசாமி-யின் வாழ்க்கை வரலாற்று படம் அவரது பெயரிலேயே உருவானது. இவரது கேரக்டரில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் நடித்திருந்தார்.

The one man army Traffic Ramaswamy passes away

Overall Rating : Not available

Latest Post