கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறவில்லை.
பல கோடிகள் புரளும் சினிமாவை இந்த ஊரடங்கு கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள பல புதிய யுக்திகளை திரைத்துறையினர் கையாள உள்ளனர்.
இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, பிரமிட் நட்ராஜன் ஆகியோர் கூட்டணியில் 2 கோடி ரூபாய் செலவில் புதிய படம் ஒன்று தயாரிக்கப்பட உள்ளது.
கதையின் நாயகனாக சத்யராஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளனர் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி. இப்படத்தை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்தில் பணிபுரியும் நடிகர்கள் யாருக்கும் சம்பளம் கிடையாது. சொன்ன பட்ஜெட்டில் 2 மாதங்களில் படத்தை முடித்து விட்டு ரிலீஸுக்கு பின் பிசினஸ் செய்து வரும் பணத்தில் அவரவரின் மார்க்கெட் மதிப்புக்கு ஏற்ப தொகை பிரித்து அளிக்கப்படும்.
மேலும் படத்தின் பட்ஜெட்டான 2 கோடியை 200 பங்குகளாகப் பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன் மூலம் ஒருவர் அதிகபட்சமாக 10 பங்குகளை வாங்கி கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
விருப்பமுள்ளவர்கள் தானாக முன்வந்து முதலீடு செய்யலாம் என்றும், முழுக்கதையும் தயாராகி, படப்பிடிப்பிற்கு முந்தைய நாளின் போதே முதலீடு ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் முதலில் நேரடியாக திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும், அதன் பிறகு 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் இடைவேளைக்கு பிறகே ஒடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகும் எனவும் தெரிய வந்துள்ளது.