கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் இணையும் ‘முகிலன்’..; சூர்யா படத்துடன் இணையத்தில் மோதல்

கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் இணையும் ‘முகிலன்’..; சூர்யா படத்துடன் இணையத்தில் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MugilanZEE5 தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில், கார்த்திக் ராஜ் (செம்பருத்தி புகழ்) மற்றும் ரம்யா பாண்டியன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘முகிலன்’ வெப் சீரிஸ், ZEE5 தனது அடுத்த வெளியீடு என்று அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸ் கேங்க்ஸ்டர் கதையம்சத்தை கொண்டது.

பல திருப்பங்கள் கொண்ட திரைக்கதையால் மெருகூட்டப்பட்ட ‘முகிலன்’ வெப் சீரிஸில் தன் குடும்பத்திற்காக எதையும் செய்ய துணிபவனாக இருக்கும் ஒரு கேங்க்ஸ்டரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை காட்டுகிறது.

ராபர்ட் மாஸ்டர், ஆடுகளம் நரேன், ஜூனியர் பாலையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘முகிலன்’ வெப் சீரிஸ்ஸை ஸ்ரீ ராம் ராம் எழுதி இயக்கியுள்ளார். தினேஷ் ரமணா (இன்சடியஸ் மீடியா), பால சுந்தரம் (இன்சிடியஸ் மீடியா), ஜெயச்சந்திரன் (இன்ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்) ஆகியோர் தயாரித்துள்ளனர்

பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு – ஃபாரூக் ஜே பாஷா
ஆசிரியர் – தமிழ் அரசன்
கலை – மணிமோழியன் ராமதுரை

“முகிலன்” அக்டோபர் 30 ஆம் தேதி ZEE5ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

இதே நாளில் தான் சூர்யா நடித்துள்ள ‘சூர்ரைப்போற்று’ படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசானில் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ramya Pandian starring Mugilan to clash with Suriya’s Soorarai Pottru

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

வித்தியாசமான த்ரில்லராக உருவாகும் ‘எறிடா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eridaஒரு சில படத்தின் பெயர்களே, இது எதைப் பற்றிய படம் என்று நம்மை யோசிக்க வைக்கும். அந்தப் படத்தின் போஸ்டர்கள் வித்தியாசமாக அமைந்துவிட்டால், ஏதோ புதிதாகச் சொல்லவுள்ளார்கள் என்று நம்மை இன்னும் ஆர்வம் கொள்ள வைக்கும். அப்படி சமூக வலைதளத்தில் சமீபமாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் போஸ்டர் தான் ‘எறிடா’. எதற்கு இந்த தலைப்பு, என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆர்வமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெற்றி படங்களை இயக்கிய வி.கே.பிரகாஷ், ‘எறிடா’ படத்தின் மூலம் தமிழில் வெற்றி இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அரோமா சினிமாஸ், குட் கம்பெனி மற்றும் ட்ரெண்ட்ஸ் ஆட்பிலிம் மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘எறிடா’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள். சம்யுக்தா மேனன், நாசர், கிஷோர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. சுமார் 55 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கிரேக்க மொழியில் உள்ள வார்த்தை தான் ‘எறிடா’. இதற்கு “காதலில் விழுந்த ஒரு பெண் கடவுளைப் பற்றிய கதை” என்று அர்த்தம். அடுத்த காட்சி என்ன என்பதை யூகிக்க முடியாத வகையில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை தயாராகி வருகிறது என உறுதியாக நம்பலாம். 2021-ம் ஆண்டு வெளியீட்டுக்காக இந்தப் படம் தயாராகி வருகிறது.

‘எறிடா’ படக்குழுவினர் விவரம்:

கதை, திரைக்கதை, இயக்கம் – வி.கே.பிரகாஷ்
தயாரிப்பாளர்கள் – அஜி மிடாயில், அரோமா பாபு
வசனம் – ஒய்.வி.ராஜேஷ்
ஒளிப்பதிவாளர் – எஸ்.லோகநாதன்
எடிட்டர் – சுரேஷ் அர்ஸ்
இசையமைப்பாளர் – அபிஜித் ஸைலநாத்
கலை இயக்குநர் – அஜய் மன்காட்
ஆடை வடிவமைப்பாளர் – லிஜி ப்ரேமன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Director VK Prakash in new film is titled as Erida

முத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா?.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

முத்தையா முரளிதரன் இனத்துரோகி.; அவரின் முகம் உங்கள் முகமாக பார்க்க வேண்டுமா?.. விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathiraja vijay sethupathiஅன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு, பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக்கொள்வது,

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் 800 என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு : 800 திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

800 – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்..

இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா ? இல்லை உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா ? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிபாருங்கள்..

பாடம் சொல்லும். ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி.

துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம் , ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன் படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி
தீயாக இன்றும் சுடர் விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக
உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில் , ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை , உலகரங்கில் எடுக்க முன் வா… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா
15:09:2020

Legendary director Bharathi Raja condemns Vijay Sethupathi’s 800 the movie

BREAKING தவறைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே_பாடம்.. ; ராகவேந்திரா மண்டப சொத்து வரி பற்றி ரஜினி ட்வீட்

BREAKING தவறைத் தவிர்த்திருக்கலாம்… அனுபவமே_பாடம்.. ; ராகவேந்திரா மண்டப சொத்து வரி பற்றி ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthஇராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூ. 6.50 லட்சம் சொத்து வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுமுடக்கம் காரணமாக திருமண மஹால் மூடியே கிடந்தது எனவும் அதனால் சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மாநகராட்சிக்கு இதுகுறித்த விளக்கம் அளித்து நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை மாநகராட்சி தரப்பில் பதில் இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

அபராதம் விதிக்க நேரிடும் என்கிற ஐகோர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து வழக்கை வாபஸ் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு பதிலளித்தனர்

இந்த நிலையில் ரஜினி் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி…

நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.

தவறைத் தவிர்த்திருக்கலாம்.

#அனுபவமே_பாடம்

Rajinikanth breaks silence on property tax

வரலாற்று எச்சில் முத்தையா முரளிதரனை துப்ப வேண்டும்..; மக்கள் செல்வனுக்கு கவிஞர் தாமரை வேண்டுகோள்

வரலாற்று எச்சில் முத்தையா முரளிதரனை துப்ப வேண்டும்..; மக்கள் செல்வனுக்கு கவிஞர் தாமரை வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

muthaiya muralitharanநடிகர் விஜய்சேதுபதி அவர்களுக்கு வேண்டுகோள் வைத்த பாடலாசிரியை கவிஞர் தாமரை.

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.

முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது.

ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ”அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.

முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ !

சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார்.

தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்தநாள் இனியநாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார்.

இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே ???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !?

ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?!

வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா ?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா ?

நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள் !

என்னது…நட்டமென்றா சொன்னேன் ??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !.

நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா ?
போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா ?
அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ?

ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன ‘நட்டம்’?
நமக்குத் தெரிந்தவகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே ??

நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.

தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி,
மூன்றுவேளை சோறு ????

தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது !
தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது.

வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது.

நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது.

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !.

மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்.
என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள்.

பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் !

தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள் !

இப்படிக்கு… தாமரை

Lyricist Thamarai against biopic of cricketer Muthaiah Murali tharan

எஸ்பிபி & அமிதாப் புறக்கணிச்சாங்களே… இதுவே கடைசி விளம்பரமாக இருக்கட்டும்..; விஜய்சேதுபதிக்கு த.தே.வி.இ. வேண்டுகோள்

எஸ்பிபி & அமிதாப் புறக்கணிச்சாங்களே… இதுவே கடைசி விளம்பரமாக இருக்கட்டும்..; விஜய்சேதுபதிக்கு த.தே.வி.இ. வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi in 800அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே!
வணக்கம்.

நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ‘800’ திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன.

இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது.

இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது.

ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதைமாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்த வரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.

ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது.

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும்.

ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்? அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள் விஜய்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மானஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன்.

எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர்.
உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை.

நீங்கள் நினைக்கலாம், யாரோ சிலர் விடுக்கும் வேண்டுகோளை மதிக்க வேண்டுமா என. இல்லை, விஜய். இது உலகத் தமிழினத்தின் ஒன்றுபட்ட இதயத் துடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் நடந்தது இனக்கொலை என்று தமிழகச் சட்டப் பேரவையும் சிறிலங்காவின் வட மாகாண சபையும் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையைப் புறக்கணிக்கும் கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் சென்னையில் இலங்கை வீர்ர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தடை விதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

இன்றளவும் சன் முதலாளி கலாநிதி மாறன் தனது ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக விலைக்கு வாங்கி வைத்துள்ள முத்தையா முரளிதரனை அன்று தமிழகத்தின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளே விட மறுத்தார்.

இன்று அதே முரளிதரனின் படிமம் உங்கள் அரிதார வடிவில் தமிழ்நாட்டுக்குள்ளும் புலம்பெயர் தமிழுலகத்துக்குள்ளும் நுழையும் முயற்சி பத்துக் கோடித் தமிழர்களையும் இழிவுபடுத்துவதல்லவா?
விளையாட்டிலும் கலையிலும் அரசியல் கலக்கலாமா? என்று ஒரு கலப்படக் கும்பல் கிளம்பி வரும்.

அவர்களுக்கு நீங்கள் எடுத்துக்காட்ட வேண்டிய சில வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். “கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது?” என்ற கட்டுரையில் தோழர் நலங்கிள்ளி புரட்டிக் காட்டும் அந்தப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ என்று தமிழ்த் திரைச் சுவைஞர்கள் போற்றிய போது, இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என்றார் அறிஞர் அண்ணா. மார்லான் பிராண்டோ நாயகனாக நடித்த ’காட்ஃபாதர்’ நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961இல் ஒரு கோரிக்கை விடுத்தார்.

ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரையிடக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஏன் தெரியுமா? தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு, கறுப்பின மக்களை எதிர்த்து இனஒதுக்கலைக் கடைப்பிடித்து வந்ததால் அந்த அரசை எல்லா வகையிலும் உலகமே புறக்கணித்தது.

இந்தப் புறக்கணிப்பில் ஆலிவுட்டும் சேர்ந்து கொண்டது. ஆலிவுட் கலைஞர்களில் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களைத் திரட்டி தென்னாப்பிரிக்காவுக்குப் பாடம் புகட்டியவர் மார்லான் பிராண்டோ.

அவ்வளவு பெரிய பாடம் இல்லையென்றாலும் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் இரண்டகத்துக்கு நீங்கள் சிறிய பாடமாவது புகட்டலாமே விஜய்?

இனஒதுக்கல் கோலோச்சிய காலத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது.

விளையாட்டுத் துறைப் புறக்கணிப்பால் தலைசிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீர்ர்கள் கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்றோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். தம் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் கூட அவர்களால் ஆட முடியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காருமில்லாத மட்டையடி வீர்ராக விளங்கியவர் யார் என்று முத்தையா முரளிதரனிடமே கேட்டுப் பாருங்கள், டான் பிராட்மன் என்ற விடை கிடைக்கும்.

பிராட்மன் 1971ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஜான் ஃபார்ஸ்டரைச் சந்தித்த போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின வீர்ர்களைச் சேர்த்துக் கொள்ளாமை குறித்துக் கேள்வி எழுப்பினார். அறிவில் பின்தங்கிய கறுப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபார்ஸ்டர்.

“நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கறுப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்?” எனக் கேட்டார் பிராட்மன். நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும் வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி ஒருபோதும் தென்னாப்பிரிக்காவில் வாசல் மிதியாது என்று அறிவித்தார்.

மண்டேலா சிறையிலிருந்து மீண்டு வந்ததும், பிராட்மன் குறித்து அன்புடன் வினவினாராம்! விளையாட்டுத் துறையிலான இனஒதுக்கலைக் கைவிட்ட பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை நெல்சன் மண்டேலாவே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982இல் முடிவெடுத்தது.

இந்தப் பயணம் கலகப் பயணம் என்றும், பயணம் சென்றோர் கலக அணியினர் என்றும் அழைக்கப்பட்டனர்.

”ஆல்-ரவுண்டர்’ இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களைக் “கேவலமான பன்னிருவர்” என இங்கிலாந்து நாடாளுமன்றமே வண்ணித்தது.

அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இந்தியா டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அது 1974ஆம் ஆண்டு. விஜய் அமிர்தராஜ் ஒற்றையர் ஆட்டத்திலும், விஜய் ஆன்ந்த் உடன்பிறப்புகள் இரட்டையர் ஆட்டத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் கோப்பை இந்தியாவுக்கே என்று நம்பப்பட்டது.

ஆனால் இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது? புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை என்று இந்திய அரசு சொல்லி விட்டது.

பிற்காலத்தில் ஐநா துணைக்கூட்டம் ஒன்றில் விஜய் அமிர்தராஜ் இது பற்றிப் பேசினார். ”அப்போது ஏமாற்றமாக இருந்தாலும் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்ட போது பெருமைப்பட்டேன்” என்றார். விஜய் அமிர்தராஜுக்குக் கிடைத்த பெருமை சிறிதாவது விஜய் சேதுபதிக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போது பின்னெடுப்பது உங்களுக்கு சங்கடமாகத் தெரியலாம், ஆனால் எதிர்காலம் உங்களைப் போற்றும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

விஜய் சேதுபதி அவர்களே! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின்வாங்குவது? என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை. நம் காலத்தின் தலைசிறந்த பூதியல் (இயற்பியல்) அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013ஆம் ஆண்டு இசுரேலில் ஒரு கல்வி ஒன்றுகூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இசுரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக் கொண்ட போது அதை ஏற்று இசுரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். துயருற்ற பாலத்தீன மக்களுக்கு அவரால் முடிந்த ஒரு சிறு ஆறுதல்!

உங்கள் சக தமிழர்களுக்கு சிங்களப் பகை புரிந்த கொடுமைகளை நியாயப்படுத்திய ஒருவராக நடிக்க மறுத்து, விஜய், நீங்களும் தரலாமே சிறு ஆறுதல்?

அண்மையில் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமண்யம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு?

அமிதாப் பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா? இந்தி நடிகர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.

அன்புடன்,
தியாகு / பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
14/10/2020

Actor Vijay Sethupathi faces backlash over Muttiah Muralitharan biopic ‘800’

More Articles
Follows