திரையரங்கே கோயில்… ஓடிடி பூஜை அறை.; அரசியல் குறித்து பேச மறுப்பது பயமில்லை.. – சசிகுமார்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் பொங்கல் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரமணியபுரம் இயக்குநர் நடிகர் சசிக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவருக்கு சங்கம் சார்பில் பாராட்டு மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சசிகுமார் பேசுகையில்…

இந்த விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் கிராமத்தில் பிறந்து இப்போதும் அங்கேயே வாழ்ந்து வருவதால் அந்த மண் மணம் குறையாமல் இன்றளவும் அத்தனை பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம்.

இன்றைக்கும் கூட பொங்கல் பண்டிகை என்றால் எங்கள் வீட்டு மாட்டு தொழுவத்தில் தான் பொங்கல் வைத்து வணங்குவது வழக்கம் பரம்பரை பரம்பரையாக இன்னமும் அந்த பழக்கத்தை மாற்ற வில்லை.

கொரோனா பலரது வாழ்க்கை யிலும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது அதை மறுக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை திரையரங்கில் பார்க்கும் சினிமா என்பது கோவிலில் இருக்கும் சாமியை பார்ப்பதற்கு சமம்.

OTT என்பது வீட்டில் இருக்கும் பூஜை அறை போல…. வீட்டில் இருக்கும் சுவாமியை தினம்தினம் பூஜித்தாலும் கோயிலுக்கு போகும் போது ஏற்படும் மகிழ்ச்யை போல சினிமாவை திரையரங்கில் கண்டு களிப்பது தான் ரசிகனாகவும் கலைஞனாகவும் நான் விரும்புகிறேன்.

எனது அடுத்த படங்களாக ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், பகைவனுக்கு அருள்வாய் உட்பட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அடுத்ததாக தொரட்டி இயக்குனர் மாரிமுத்து இயக்கத்திலும், இயக்குனர் விருமாண்டி இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன்.

சுப்ரமணியபுரம் ஆரம்பித்த காலத்திலிருந்து இப்போது வரை பத்திரிக்கையாளர்களின் பங்கு என் வாழ்வில் எப்போதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

சினிமா உள்ளவரை பத்திரிக்கையாளர்களும் நிச்சயம் இருப்பார்கள்.

அவர்களுக்கு நான் நிறைய கடமை பட்டிருக்கிறேன். இப்போதும் நான் மாணவன் தான். ரொமான்ஸ் என்றாலே கொஞ்சம் கூச்சமா தான் இருக்கிறது. எனினும் அடுத்தடுத்த படங்களில் நிச்சயம் மாற்றிக் கொள்வேன்.

அரசியல் குறித்து பல நடிகர்கள் பேசுவதில்லை என என்னிடமும் ஏன்? என சிலர் கேட்பதுண்டு. இது ஏதோ பயமோ அல்லது ஒதுங்கிப் போகும் எண்ணமோ கிடையாது. எங்களுக்கு பின்னால் பலரின் வாழ்க்கையும் பெரும் தொகையும் இதில் அடங்கியுள்ளது.

ஏதேனும் ஒரு வார்த்தையை விட்டு விட்டு அதனால் எங்களை சேர்ந்தவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதாலேயே நடிகர்கள் கவனமாக இருக்கிறார்கள் அவ்வளவே.

மேலும் இந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் பொங்கல் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

OTT is Home Pooja room but Theatres were Temple says Sasikumar

Overall Rating : Not available

Latest Post