தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஓரிரு வருடங்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்டார் நடிகர் சூர்யா.
அப்போதே அது சர்ச்சையானது. தற்போது மீண்டும் சூடான ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார் சூர்யா.
அதன் விவரம் வருமாறு..:
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
இந்த குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் ‘நீட் தேர்வின்’ பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி அண்மையில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்களை படிக்க உதவி வரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்…
“அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக நீதிக்கு எதிரானது.
எளிய குடும்பத்தினர் கல்வி பெற ஆதாரமாக இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் முறையே 40% மற்றும் 25% மாணவர்களில் 20% மாணவர்களே உயர்கல்விகளுக்கு செல்கின்றனர்.
தங்கள் எதிர்காலத்திற்காக 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி.
‘நீட் நுழைவுத்தேர்வு’ வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்கிற லட்சியத்தோடு படித்த ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டது.
அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்திற்கும் மறையாது. மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை.
தமிழக அரசு நியமித்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழு, ‘நீட் தேர்வின்’ பாதிப்புகள் பற்றி மக்கள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறது.
அரசுப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்களுடன் இணைந்து பயணிக்கிற அகரம் பவுண்டேஷன், மாணவர்களுக்கான பாதிப்புகளை முறையாக அக்குழுவிடம் பதிவு செய்கிறது.
நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிய, ‘நீட் தேர்வின்’ பாதிப்பின் தீவிரத்தை உரியவர்களுக்கு உணர்த்தவேண்டும். மாணவர்களும், அவர்தம் குடும்பங்களும் அனுபவிக்கிற துயரங்களைத் தவறாமல் நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையிலான குழுவிடம், [email protected] எனும் மின்னஞ்சலுக்கு வருகின்ற ஜூன் 23-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம். அது ஒன்றே, நிரந்தர தீர்வு. ‘கல்வி மாநில உரிமை’ என்கிற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அகரம் அறக்கட்டளை சார்பில் சூர்யா தெரிவித்துள்ளார்.
Neet exam affects the future of many poor people – Suriya On Twitter