தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிறப்பு இறப்பு இரண்டுமே அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானது.. இதில் இறப்பு என்பது ஒரு குடும்பத்தின் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இதில் சினிமாக்காரர்களும் விதிவிலக்கல்ல.
பிரபலங்கள் வீட்டில் மரணம் நடைபெற்றால் அதை செய்தியாக வெளியிடுவது தவறில்லை. ஆனால் சமீப காலமாக யூடியூப் சேனல்களின் அதிகப்படியான வருகையால் செய்தி சேனல்களின் பொறாமை நிறைந்த போட்டிகளால் அளவுக்கு மீறி நடைபெற்று வருவதை நாம் பார்த்திருக்கிறோம்.
நடிகை மீனாவின் கணவர் மரணத்தின் போது அவரது உடல் எரிக்கப்படும் வரை மீடியாக்கள் நுழைந்து அதனை படம் பிடித்து காட்டிய போது மீனா வருத்தமுற்றார்.
மேலும் நடிகர் அஜித்தின் தந்தை மரணம் அடைந்த போதும் இதே போன்றே நடைபெற்றது.
அதுபோல விவேக், மயில்சாமி, மனோபாலா, மாரிமுத்து, விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் மீடியாக்களின் வரம்பு மீறிய படப்பிடித்தலை கண்டோம்.
இதை பொதுமக்கள் கண்டித்த நிலையில் தற்போது நடிகர் சங்கமும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்..
செப்டம்பர் தேதி: 21.09.2023
தென்னிந்திய நடிகர் சங்க அறிவிப்பு
அன்புடையீர்!
திரையுலகில், நடிகர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும் பொது மக்களின் பாராட்டுகளிலும், கவனிப்புகளிலுமே புகழடைகிறது. அதற்கு பெரும் பங்காற்றுவது ஊடகத்துறையும், ஊடகவியலார்களும்தான்..!
அக்கலைஞர்களை, படைப்புகளைத் தாண்டி அவர்களது குடும்பம் மற்றும் திறமைகள், குணாதிசயங்கள், சமூக பங்களிப்புகள் போன்றவற்றை மக்களுக்கு கொண்டு செல்வதில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களின் பங்களிப்பு பெரும் பங்காற்றுகிறது..!
ஆனால் சமீபத்தில் எதிர்பாராமல் மறைந்த திரு மாரிமுத்து, திரு.விஜய்ஆண்டனி அவர்களின் மகள் இழப்பின் போது ஊடகத்துறை நண்பர்கள் நடந்து கொண்டது பலரையும் முகம் சுழிக்கவைத்துள்ளது..!
இறுதி நிகழ்வில் நடந்த ஊடகத்துறையினரின் செயல்பாடுகள் எல்லை மீறி பலரையும் சங்கடத்திலும், விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைகிறோம்..!
துயரம் தரும் செய்திகள் சம்பந்தப்பட்டோரை சேரும் முன்பே, தவறான தகவலால் பரபரப்பாக்குவதும், அதிர்ச்சியால் உடைந்து துயரத்தில் நிற்கும் குடும்பத்தை ஊடக நெருக்கடிக்கு உள்ளாக்குவதும் எந்தவிதத்தில் நியாயப்படுத்துவது?
துயரத்தால் தாக்குண்டோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வரும் கலைஞர்களையும், ஊடக பரபரப்பிற்கு உள்ளாக்குவது எந்தவிதத்தில் சரியானது?
எதிர்பாராத இழப்பினால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கும் குடும்பத்தினரும், துக்கம் விசாரிக்க வந்த உறவினர்களும் அவர்களுக்கு உதவ வந்த கலைத்துறை நண்பர்களும், ஊடக நெருக்கடியில் சிக்கி, இறுதி நிகழ்வுகளைக்கூட முழுமையாக செய்யவிடாமல் தடுப்பது எந்த விதத்தில் சரியானது.
கலைஞர்களின் இறுதி நிகழ்வை மக்களுக்கு கொண்டு சென்று நிரந்தர புகழ் சேர்க்கவேண்டும் என்ற ஊடக நண்பர்களின் செயல்பாட்டின் எல்லைகள் எதுவரை?
எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க ஊடக செயல்பாட்டின் எல்லைகளை தீர்மானிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
எங்கள் கலைஞர்களின் நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொறுப்புணர்ந்து உங்களுக்குள் தீவிரமான சுயக்கட்டுப்பாட்டை ஊடகத் தோழர்கள் கொண்டு வர வேண்டும். அரசும் இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்பதே எம் வேண்டுதல்.
(M.நாசர்),
தலைவர்,
Nadigar Sangam condemns TV and YouTube activities at death funerals