தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கௌரி கிஷன் என்று பிரபலமாக அறியப்படும் 96 திரைப்பட புகழ் கௌரி ஜி கே மற்றும் டிக்கிலோனா புகழ் அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர்.
வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உருவாகியுள்ள மகிழினி நவம்பர் 22 அன்று சரிகமா ஒரிஜினல்ஸால் வெளியிடப்படும்.
மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், “எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம் ஆகும். இந்த ஆல்பத்திற்காக அனாமார்பிக் லென்ஸை முதன்முறையாக பயன்படுத்தியுள்ளோம். ஒட்டுமொத்த குழுவின் ஈடுபாடு மற்றும் ஆதரவின் காரணமாக ஆல்பம் நன்றாக உருவாகியுள்ளது,” என்றார்.
இது குறித்து மேலும் பேசிய அவர், “சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதே மகிழினி,” என்றார்.
மகிழினிக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார். விஷ்வகிரண் நடனம் அமைத்துள்ளார்.
“கௌரி மற்றும் அனகா ஆகியோரை மகிழினிக்காக நாங்கள் அணுகியபோது, அவர்கள் அதை சரியாக புரிந்துகொண்டு உடனடியாக சம்மதம் தெரிவித்தனர். மிகவும் சிறப்பான நடிப்பை அவர்கள் இருவரும் வெளிப்படுத்தியுள்ளனர். கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை சொல்ல விரும்பிய கருத்தை சரியாக சொன்னதோடு, ஆல்பத்தை புதிய உயரத்திற்கு இட்டு சென்றுள்ளன.
விஷ்வகிரணின் நடன அமைப்பு மகிழினியின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பக்கபலம். இந்த ஆல்பத்தை தயாரிக்க முன்வந்த ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா வொர்க்ஸுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மகிழினியை சரிகமா வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி” என்று பாலசுப்ரமணியன் மேலும் கூறினார்.
Magizhini, a music video supporting LGBT with Gouri Kishan & Anagha as leads